Published : 20 Jun 2023 08:19 AM
Last Updated : 20 Jun 2023 08:19 AM

மருத்துவ மாணவர் சேர்க்கை: பறிக்கப்படும் மாநில உரிமை

நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன், 720க்கு 720 மதிப்பெண் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்; இது பாராட்டுக்குரியது. இம்மாணவர்களுக்குக் கிடைத்ததுபோல், அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட அரசு முயல வேண்டும். கூடவே, இன்னொரு பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

மாநில உரிமைப் பறிப்பு: மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையைப் பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ (NEXT) என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையைப் பறிப்பதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. ‘மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்படுகிறது, இடத்தைத் தடுத்துவைப்பது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன, இடங்கள் காலியாகப் போகின்றன’ என்பன போன்ற காரணங்களைக் கூறி, மாநில அரசுகளின் இடங்கள் உள்பட, நாடு முழுவதும் உள்ள 100% மருத்துவ இடங்களுக்கும் மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது. இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள தமிழ்நாட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலின்றி நடக்கும் இத்தகைய உரிமைப் பறிப்பு, கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

பாதிப்பு என்ன? மத்திய அரசின் இந்த அதிகாரக் குவிப்பு, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறை, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டையும் அருந்ததியர், முஸ்லிம் உள்ஒதுக்கீடுகளையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டையும் பாதிக்கக்கூடும். மாநில அரசு இடஒதுக்கீட்டைத் திறம்படக் கையாள்வதைப் போல், மத்தியக் கலந்தாய்வு கையாளுமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இம்முறையின் மூலம், முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடும் தமிழக இடங்களுக்குப் புகுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இளநிலை மாணவர் சேர்க்கைதொடர்பாக, இந்திய அரசிதழில் 02.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படும் எனக் கூறப்படவில்லை. நீட் தரவரிசை அடிப்படையில், என்.எம்.சி. இருக்கை அணி (SeatMatrix) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இது ஐயத்தை வலுப்படுத்துகிறது. இது தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில அரசுகளுக்குத் தனியார், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இடங்களும் பறிபோகும். மாநில அரசும், மத்திய அரசும் தங்களது இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டப் பிரிவு [(NMC Act - 2019) Chapter IV, 14(3)] கூறுகிறது. மத்திய அரசின் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, இச்சட்டத்துக்கு எதிரானது.

அகில இந்தியத் தொகுப்பு கூடாது: இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15% இடங்கள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது; இதுவே மாநில உரிமைகளுக்கு எதிரானதுதான். வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் போதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லாமல் இருந்த காலத்தில், அம்மாநில மாணவர்கள் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியவில்லை. இதைக் காரணம்காட்டி, 1983இல் பிரதீப் ஜெயின் என்ற மருத்துவர் தொடர்ந்த வழக்கால், உச்ச நீதிமன்றம் அகில இந்தியத் தொகுப்பை 1984இல் உருவாக்கியது. வசிப்பிட அடிப்படையில் (Domicile), மாநிலங்கள் தங்களுக்கென மருத்துவ இடங்களை முழுமையாக வைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும் என்றது. இதனால், அரசு மருத்துவ இடங்களை அதிகம் கொண்ட தமிழ்நாடு இழப்புக்குள்ளாகிறது.

ஜி.ஆர்.இரவீந்திரநாத்

தற்போது அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மாவட்டங்கள்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கையில் நிலவும் குழப்பங்களுக்கும் காலதாமதத்துக்கும் காரணமான அகிலஇந்தியத் தொகுப்பை ரத்து செய்திட வேண்டும். இந்த முறையின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க 45 நாள்களுக்கு மேல் ஆகிவிடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நடைமுறையை மாற்ற வேண்டும்: மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், காலதாமதத்தையும் இடங்களைத் தடுத்துவைப்பதையும் முறைகேடுகளையும் தடுக்கலாம். நீட் தேர்வை முன்கூட்டியே நடத்துதல், முடிவுகளை விரைவாக வெளியிடுதல், மாணவர் சேர்க்கையை விரைவாகத் தொடங்குதல், மத்திய-மாநில அரசுகள் ஒரே நேரத்தில் மாணவர்சேர்க்கையை நடத்துதல் போன்ற நடைமுறை மாற்றங்களால் மாணவர் சேர்க்கையில் ஏற்படும் கால தாமதத்தைத் தடுக்க முடியும் இவற்றைச் செய்யாமல், மத்தியில் அதிகாரத்தைக் குவிப்பது, பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கும்.

இடங்கள் காலியாவது ஏன்? சில ஆண்டுகளாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,ஆயுஷ் மருத்துவ இடங்கள், முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சில முதுநிலை-உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகப் போகின்றன. கல்விக் கட்டண அதிகரிப்பு, அப்படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்பின்மை, அப்படிப்புகள் தனியாகத் தொழில் செய்யப் பயன்படாமல் போனது, அவற்றின் சந்தை மதிப்பு குறைந்தது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாகும். கட்டணம் குறைவாக இருப்பதால், மருத்துவப் படிப்புக்காக ஏராளமானோர் வெளிநாடுகளை நாடுகின்றனர். இவற்றை உணராமல், மாணவர் சேர்க்கை முறைதான் மருத்துவ இடங்கள் காலியாகப் போகக் காரணம் என்பது மேம்போக்குப் பார்வையாகும். இதனால் மாநில உரிமை பலியாகிறது.

முறைகேடுகளைத் தடுப்பது எப்படி? கடைசி இடம் நிரம்பும்வரை மத்திய-மாநில அரசுகள் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கக் கூடாது. முறைகேடுகளுக்குக் காரணமான, மாப்-அப் (mop up counselling), ஸ்ட்ரே (stray counselling) கலந்தாய்வை நடத்திட அந்நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. அனைத்து இடங்களுக்கும் அரசே கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்; ஏழை மாணவர்களுக்கான கட்டணங்களை அரசுகளே ஏற்க வேண்டும். இதுவே, முறைகேடுகளைத் தடுக்கும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிசெய்யும். ஏழை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

காரணங்கள் வேறு: அனைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நடத்த முனைவதற்கு வேறு மறைமுகக் காரணங்கள் உள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது: பண்பாட்டுத் தேசியத்தை ஏற்றுள்ள மத்திய பாஜக அரசு, மொழிவாரி மாநிலங்களை, மொழி அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. எனவே, மாநில உரிமைகளைப் பல துறைகளிலும் பறிக்கிறது. அதிகாரங்களை மையப்படுத்துகிறது. தேசத்துக்கான ஒரு மருத்துவ முறையை உருவாக்க அது முயல்கிறது. அந்நோக்கில், 2030க்குள் ‘ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை’ என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதோடு, மருத்துவக் கல்விச் சந்தையை, உலகக் கல்விச் சந்தையுடன் இணைந்த, ஒற்றைத் தேசியச் சந்தையாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. நீட், நெக்ஸ்ட் போன்ற தேர்வுகளும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டமும் ஒற்றைச் சந்தை நோக்கத்துக்கு உதவுகின்றன. மத்திய அரசு மட்டுமே நடத்த உள்ள ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, அந்நோக்கத்துக்கு மேலும் துணைபுரியும்.

மருத்துவக் கல்வி வணிகத்துக்கு, மாநிலங்களைக் கடந்த ஒற்றைச் சந்தை வேண்டும் என்ற பெருநிறுவனங்களின் லாப வேட்கையும், ‘ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை’ என்கிற மத்திய அரசின் நோக்கமும் நிறைவேற, மருத்துவக் கல்வியில், மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பு தேவைப்படுகிறது. மத்திய அரசு இப்போது மேற்கொண்டு இருப்பது அதைத்தான்!

- மருத்துவர்; சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின், பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: daseindia2021@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x