Published : 31 Oct 2017 09:55 AM
Last Updated : 31 Oct 2017 09:55 AM
மு
கத்தில் மெல்லிய புன்னகை. அன்பு நிறைந்த கண்கள். எழுத்தாளர் என்பதற்கான எந்த பிம்பங்களும் இல்லாத எளிமை. வெள்ளந்தி மனிதராக, தன் எழுத்து தந்திருக்கும் எந்தப் புகழ் மகுடத்தையும் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதராக வாழ்ந்த மேலாண்மை பொன்னுச்சாமி மறைந்துவிட்டார். அவரை அறிந்திருந்த அனைவரும் அவருக்குள் அசலான கிராமத்து சம்சாரி ஒருவரையும் நிச்சயம் அறிந்தேயிருப்பார்கள்.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு எனும் கிராமத்தில் 1950-ல் பிறந்தவர் பொன்னுச்சாமி. தனது குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்தார். அவரையும் அவரது தம்பி கரிகாலனையும் அவர்களின் பாட்டிதான் வளர்த்தெடுத்தார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர குடும்ப வறுமை அனுமதிக்கவில்லை. குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு பொன்னுச்சாமிக்கு. கிராமத்திலிருந்து வெளிவந்து, பல வேலைகள் செய்யத் தொடங்கினார். தஞ்சையில் கொஞ்ச காலம் பலசரக்கு போடும் தொழில் உட்பட பல்வேறு வேலைகள் செய்திருக்கிறார். பொருள் தேடும் அவரது வாழ்க்கைப் பயணத்தினூடே, அவருக் குப் புத்தக வாசிப்பின் பரிச்சயம் கிடைத்தது. கையில் கிடைக்கிற புத்தகங்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கினார். சோவியத் மொழிபெயர்ப்பு நூல்கள் அவரது வாசிப்புக்கு பெரிய உந்துதலைத் தந்தன.
முதல் கதை
தனக்குள்ளும் ஒரு எழுத்தாளன் இருக்கிறான் என்கிற உள்ளுணர்வு எதுவும் இல்லாமலேயே, தன் வாழ்வின் அனுபவத்தை அப்படியே கதையாக்கி, ‘செம்மலர்’ இதழுக்கு அனுப்பி வைத்தார். முதல் கதையே பிரசுரமானது. மேலாண்மை பொன்னுச்சாமி எனும் எழுத்தாளர் தமிழுக்குக் கிடைத்தார். பல எழுத்தாளர் களையும் சமூக ஆர்வலர்களையும் இடதுசாரி இயக்கத்தின்பால் ஆற்றுப்படுத்திய எஸ்.ஏ.பெருமாள் வழியேதான், மேலாண்மை பொன்னுச்சாமியும் இடதுசாரி இயக்க - இலக்கிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
அவரது கதைக்களன் அசலானது. அன்றாடம் அவர் சந்தித்த மனிதர்கள்தான் அவரது கதைமாந்தர்கள். ஆனாலும், ஒரு நாட்டின் சமூக, பொருளாதாரக் காரணிகள் எப்படி எளிய மனிதர்களின் வாழ்வைப் பாதிக்கிறது என்பதைத் தனது எளிய விவரிப்புகள் மூலமே ஆழமாகப் பதிவுசெய்தார். மேலாண்மையின் கதைகளை வாசித்து முடிக்கையில், நம் கண்கள் ஓரமாய் லேசான ஈரம் சுரந்திருக்கும். மனசின் உள்தகிப்புகளை, பெருவெளியில் பலரும் அறியாத கிராமத்து மக்கள் வாழ்வின் உள்சிக்கல்களையே தன் கதைகளில் வெளிச்சப்படுத்தியதில் முதன்மையானவர் அவர்.
முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகள் பெரும்பாலும் இடதுசாரி இதழ்களிலும் சிறுபத்திரிகைகளிலும் மட்டுமே வெளியாகிவந்த சூழலில், வெகுசன இதழ்களிலும் அதிகமாக எழுதிய எழுத்தாளர் என்கிற பெருமை மேலாண்மை பொன்னுச்சாமிக்கு உண்டு. பல்வேறு இதழ்களுக்குக் கதைகள் எழுதியபோதிலும், தனக்கென ஒரு தனித்த பாணியை அவர் கைவிட்டதில்லை. எந்த இதழில் வந்தாலும், ‘இது மேலாண்மை எழுதியது’ என்று அடையாளங்காணப்பட்ட எழுத்தாகவே அவரது எழுத்து மிளிர்ந்தது.
எழுத்துச் செயல்பாட்டாளர்
1970-களில் இடதுசாரி இயக்க எழுத்தாளர்களின் சங்கமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தற்போது தமுஎகச) தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்கத்துக்குப் பங்களிப்பு செய்தவர்களில் மேலாண்மை பொன்னுச்சாமியும் ஒருவர். எழுதுவதோடு நின்றுவிடாமல், ஒரு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளராகவும் தனது செயல்பாடுகளைச் செய்தவர். தமுஎச-வின் விருதுநகர் மாவட்டச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர். மாநிலத் தலைவர் என தன் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்தார்.
தீவிர இடதுசாரிச் சிந்தனையாளராகத் திகழ்ந்தார். ‘எழுத்தாளர்களுக்குச் சமூக அரசியல் பார்வை அவசியம் தேவை. அந்தச் சிந்தனையை முன்னெடுக்கும் அரசியலிலும் எழுத்தாளர்கள் பங்கேற்க வேண்டும்’ என்று சொன்னதோடு நில்லாமல், தன்னையும் அரசியல் கட்சியில் இணைத்துக்கொண்டவர் அவர். ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலும், பிறகு அதிலிருந்து பிரிந்த விருதுநகர் மாவட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக இருந்தார்.
‘எழுதுவதோடு முடிந்துவிடுவதல்ல எழுத்தாளனின் பணி. மக்களுக்கான போராட்டங்களிலும் அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொன்ன மேலாண்மை பொன்னுச்சாமி, ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாத காலம் மதுரை சிறையிலும், விலைவாசி உயர்வுக்கான போராட்டத்தில் பங்கேற்று ஒரு மாத காலம் பாளையங்கோட்டை சிறையிலும் இருந்தவர். அவரை அறிந்தவர்கள் பலரும் அறிந்திராத அளவுக்கு விரிவானது அவரது சமூகப் பங்களிப்பு. எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியற்ற வாழ்வு அவருடையது.
விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தவர்
தனது கதைகளுக்கான விமர்சனங்களை யார் சொன்னாலும், மிகுந்த அக்கறையோடு கேட்டுக்கொள்வார். அதேபோல், இளைய படைப்பாளர்களின் எழுத்துகளை ஆவலோடு வாசித்து, கருத்து கூறுவதையும், அவர்களது நூல்களுக்கு முன்னுரை எழுதித் தருவதையும் ஈடுபாட்டோடு செய்துவந்தார். கொஞ்சமும் சளைக்காமல் எழுதிக்கொண்டேயிருந்தார். ஒரு மாதத்தில் ஏழெட்டுக் கதைகள்கூட எழுதியிருக்கிறார். ‘இன்னும் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் எங்கள் மக்களிடம் கொட்டிக்கிடக்கின்றன; எல்லாத்தையும் எழுதணும்’ என்று அடிக்கடி சொல்வார். நிறைய எழுதுகிறார் என்கிற விமரிசனம் கூட அவர்மீது வைக்கப்பட்டது உண்டு. ஆனாலும், அவர் எழுதிய ஒவ்வொரு கதையும் அதனளவில் நிறைவானதாகவே இருந்தது.
‘பூக்காத மாலை’, ‘மானுடப் பிரவாகம்’, ‘தாய்மதி’, ‘உயிர்க்காற்று’ உள்ளிட்ட 24 சிறுகதைத் தொகுப்புகள், ‘பாசத்தீ’, ‘மரம்’, ‘கோடுகள்’ உள்ளிட்ட ஆறு குறுநாவல்கள், ‘அச்சமே நரகம்’, ‘ஆகாய சிறகுகள்’, ‘முற்றுகை’, ‘முழு நிலா’ உள்ளிட்ட ஆறு நாவல்களை எழுதியிருக் கிறார். “எனக்கு எழுத மட்டும்தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு பேசத் தொடங்கிய அவர், சிறந்த பேச்சாளராகவும் இலக்கிய மேடைகளில் வலம் வந்தார். ‘சிறுகதை படைப்பின் உள்விவகாரங்கள்’ எனும் அவரது சிறுகதை குறித்த கட்டுரை நூல், புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு கையேடாகப் பயனளிக்கக் கூடியது.
விருதுகள், அங்கீகாரங்கள்
2007-ல் ‘மின்சாரப்பூ’ எனும் சிறுகதை நூலுக்காக சாகித்திய அகாடமி விருது, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘மாட்சிமை’ பரிசு, தமிழக அரசு பரிசு என்று பல பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது ‘சிபிகள்’ சிறுகதைத் தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடநூலாகவும், ‘பாட்டையா’ எனும் சிறுகதை பன்னிரண்டாம் வகுப்பில் துணைப் பாடமாகவும் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் எனும் ஒற்றை அடையாளத்தைத் தாண்டி, தனது சொந்த ஊரான மேலாண்மறைநாடு கிராமத்துக்கு, தனது எழுத்துகள் மூலம் நிரந்தரப் புகழை ஏற்படுத்தித் தந்து மறைந்திருக்கிறார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடைவிடாமல் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவந்தார். கிராமத்தில் வைத்திருந்த சிறிய மளிகைக்கடை ஒன்றே அவரது குடும்பமும், அவரது தம்பி குடும்பமும் வாழ்வதற்கான ஆதாரமாக இருந்தது. அவரது மனைவி பொன்னுத்தாய், அவரது மகள்கள் வைகறைச்செல்வி, தென்றல், மகன் வெண்மணிச்செல்வன் அனைவரும் அவர் ஒரு எழுத்தாளர் என்பதில் பெருமிதம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
வாசிப்பு தந்த உந்துதலில் எழுதத் தொடங்கி, இடதுசாரி இலக்கிய இயக்கத்தில் தன்னை முழுமை யாய் இணைத்துக்கொண்ட மேலாண்மை பொன்னுச் சாமி எளிய கரிசல்காட்டு உழைப்பாளிகளின் வாழ்வை அசலாகப் பதிவுசெய்தவர் என்று என்றென்றும் நினைவுகூரப்படுவார்!
- மு.முருகேஷ்,
தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT