Published : 09 Oct 2017 09:05 AM
Last Updated : 09 Oct 2017 09:05 AM
பி
ரதமர் நரேந்திர மோடி, 2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்கம் தொடர்பாக வெளியிட்ட தொலைக்காட்சி அறிவிப்பு கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களைப் பீதிக்குள்ளாக்கியது. வெறும் பணப் பரிவர்த்தனையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் மக்கள் திகைத்து நின்றனர். ஆனால், “கறுப்புப் பணத்தை பிடித்து விடுவோம்; கள்ளப் பணத்தை ஒழித்துவிடுவோம்; தீவிரவாத செயல்களுக்கான பணம் தடுத்து நிறுத்தப்படும்; லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்படும்” என்றெல்லாம் காரணங்களை முன்வைத்தது அரசு. தங்கள் சொந்தக் கஷ்டத்தையும் மீறி அதைப் பலர் நம்பினர். லஞ்சமில்லா புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.
2016 நவம்பர் 13-ல் கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “டிசம்பர் 30 வரை 50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்; என்னுடைய நோக்கத்திலோ, செயல்பாட்டிலோ ஏதேனும் தவறு இருந்தால் என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என்று உருக்கமாக உரையாற்றினார்.
‘பிக் பஜா’ரை நம்பிய அரசு
ஆனால் நடந்தது என்ன? 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகிவிட்ட நிலையில், மக்கள் உணவுக்குகூட ரொக்கப் பணமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளுடன், ‘பிக் பஜாரை’யும், தனியார் மருந்துக் கடைகளையும், பெட்ரோல் பங்க்குகளையும் கூட நம்பத் தயாராக இருந்த மத்திய அரசு, 93,000 பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்ற தடை விதித்ததுதான் கொடுமை. இதனால் கிராமப்புறப் பொருளாதாரம் நிலைகுலைந்தது.
நவம்பர் 14 முதல், ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற சுமார் 14,000 கிளைகளைக் கொண்ட 370 கூட்டுறவு வங்கிகள் மதிப்பிழந்த நோட்டைப் பெறக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் அவ்வங்கிகளின் கோடிக் கணக்கான வாடிக்கையாளர்கள் பரிதவித்துப் போனார்கள்.
மாண்டுபோன மனிதாபிமானம்
மதிப்பிழந்த ரூ. 15.44 லட்சம் கோடிக்கு ஈடாக புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களாக சுமார் ரூ.6.5 லட்சம் கோடி மட்டுமே ரிசர்வ் வங்கியின் கைவசம் இருந்தது. ஆனால், புதிய 500 ரூபாய் ஒரு தாள்கூட அதன் கைவசம் இல்லை. இதுதான் பிரச்சினையின் ஆரம்பம். புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாக வருவதற்குக் கிட்டத்தட்ட ஐந்து மாத காலம் ஆனது. ஏடிஎம்களும் மூன்று வாரம் வரை புதிய ரூபாய் நோட்டுக்களை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படவில்லை. இது பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. கையில் கிடைத்த 2,000 ரூபாய் நோட்டுக்குச் சில்லரை கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாட நேரிட்டது.
பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகளால் முதல் ஆறு நாட்களிலேயே 25 பேர் உயிரிழந்தனர். வங்கிகள், ஏடிஎம்கள் முன்னர் வரிசையில் நின்றவர்களில் சிலர் மயங்கி விழுந்து இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோரைப் பேரைப் பலிவாங்கியது பணமதிப்பு நீக்கம். மதிப்பிழந்த நோட்டுகளை மட்டுமே வைத்திருந்த காரணத்தால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டு குழந்தைகள் உயிரிழந்த கொடுமையும் நடந்தது. சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்துகொண்டனர். தொடர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிலையில், பணி அழுத்தத்தின் காரணமாக வங்கி ஊழியர்கள் 12 பேர் இறந்தனர்.
ஆனால், மக்கள் படும் துயரங்களை மோடி அரசு கொஞ்சம் கூட கருணையுடன் அணுகவில்லை. ‘ஏன் நாட்டுக்காக இந்தக் கஷ்டத்தைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா?’, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் மோசடிப் பேர்வழிகள், தேசத் துரோகிகள்’, ‘எல்லையில் நமது ராணுவ வீரர்கள் கடுங்குளிரில் நிற்கிறார்கள். உங்களால் ஒரு நாள் ஏடிஎம் முன் நிற்க முடியவில்லையா?’ என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு எதிர்ப்பாளர்களை வசை பாடினர். “மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்ட ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ. 5 லட்சம் கோடி வரை புழக்கத்தில் திரும்பி வராது. அந்த அளவுக்கு நாட்டில் கறுப்புப் பணம் நிலவுகிறது. மீண்டும் புழக்கத்தில் வராத அந்தத் தொகையை மக்கள் நலனுக்குச் செலவிடலாம்” என்றெல்லாம் கருத்துகளை உதிர்த்தனர். உச்ச நீதிமன்றத்தில்கூட மத்திய அரசாங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் கோடி முதல் ரூ. 5 லட்சம் கோடி வரை புழக்கத்தில் திரும்பி வராது என்றே சொல்லப்பட்டது.
பொய்த்துப்போன ஆரூடம்
ஆனால், 2017 ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி ரூ.15.28 லட்சம் கோடி வரை அமைப்புக்குள் வந்து விட்டது. வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே புழக்கத்தில் வரவில்லை. 1,000 ரூபாய் தாள்களில் சுமார் ரூ.8,900 கோடி திரும்பி வரவில்லை; 500 ரூபாய் தாள்களில் ரூ. 7,100 கோடி வரை திரும்பி வரவில்லை.
கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாற்றப்பட்ட சுமார் ரூ.8 ஆயிரம் கோடி, நேபாளம், பூட்டான் வழியே வந்த ரூபாய் நோட்டுகள், நீதிமன்றங்களின் கஜானாவில் பழைய நோட்டுக்களாகவே ஒப்படைக்கப்பட்டுள்ள பணம், 2016 டிசம்பர் 30-ல் மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் ரிசர்வ் வங்கியில் மாற்ற முடியாமல் மக்களிடம் தங்கி விட்ட பணம் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ரூ.16 ஆயிரம் கோடியைத் தொட்டுவிடும். அப்படியெனில், ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம் திரும்பி வராது என்று சொன்னது என்னவாயிற்று?
கள்ள நோட்டு ஒழிந்ததா?
ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்ததன் மூலமாக கள்ள நோட்டுக்களை ஒழிக்க முடியாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் முன்பே தெரிவித்தனர். தேசியப் புலனாய்வு நிறுவனத்தின் சார்பாக கொல்கத்தாவில் உள்ள புள்ளியியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி மொத்தத்தில் கள்ளப் பணம் என்பது சுமார் ரூ.400 கோடிதான் இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இதை ஒழிப்பதற்கு இத்தகைய நடவடிக்கையா என்று பலர் கேள்வி எழுப்பினார்கள். புதியதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுக்களிலும் கள்ளப் பணம் வந்து விடும் என்றும் எச்சரித்தார்கள்.
ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, மதிப்பிழந்த 1,000 ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு சுமார் ரூ.8.4 கோடி மட்டுமே. மதிப்பிழந்த 500 ரூபாய் நோட்டுக்களில் இது சுமார் 4.7 கோடிதான். ஆக, வெறும் ரூ.13.1 கோடி மட்டுமே கள்ள நோட்டுக்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் 199 தாள்களும், 2,000 ரூபாய் நோட்டில் 638 தாள்களும் கள்ள நோட்டுக்களாக கண்டறியப்பட்டுள்ளது வேறு விஷயம்.
ரொக்கமில்லா பரிவர்த்தனை அவசியமா?
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்காக முன்வைக்கப்பட்ட பல்வேறு காரணங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனையும் ஒன்று. விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அப்படித்தான் பேசத் தொடங்கினார்கள். ஆனால், உண்மை என்ன? “2016 நவம்பரில் ரூ.94 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2017 மார்ச் மாதவாக்கில் ரூ.150 லட்சம் கோடியாக உயர்ந்து, ரொக்கப் பணத் தட்டுப்பாடு தீர்ந்தவுடன், 2017 ஆகஸ்ட் மாதம் ரூ.110 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது” என்று 06.09.2017 தேதியிட்ட ‘மணி கண்ட்ரோல் நியூஸ்’ பத்திரிகை தெரிவிக்கிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தால் பயனடைவது பெரு நிறுவனங்கள்தான்; சாதாரண மக்களுக்கு அது பெருத்த நஷ்டத்தையே உண்டாக்கும். சுமார் 6.25 கோடி குடும்பங்களுக்கு மின்சார இணைப்பே இல்லை. பின் எப்படி முழு டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டுவர முடியும்? இந்நிலையில், அரசு தனது நோக்கமாக முன்வைத்த டிஜிட்டல் பொருளாதாரம், அதற்கான வசதி வாய்ப்பு கொண்ட மிகக் குறைவான எண்ணிக்கையிலான மக்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. அதை நோக்கி மக்களைத் தள்ள முற்பட்ட மத்திய அரசு மெளனம் காக்கிறது.
வழக்குகள்
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கிலும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சுமார் 70 வழக்குகள் தொடுக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்திலும் இதுபற்றி வழக்கு தொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும் ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 2016 டிசம்பர் 16 அன்று நடைபெற்ற அமர்வில் நாடெங்கிலும் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி, “இது அரசியல் சட்டத்துக்கு எதிரானதா?”, “வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட வரம்புக்குச் சட்ட அடிப்படை உள்ளதா?”, “ஓர் அரசாங்கத்தின் நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கையில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிட முடியும்?”, “மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செல்லா நோட்டுக்களைப் பெறுவதற்கும், மாற்றித் தருவதற்குமான பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டதால் அவை பாரபட்சமாக நடத்தப்பட்டனவா?” என்பன உள்ளிட்ட ஒன்பது முக்கியக் கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஓர் அமர்வை உருவாக்கும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.
வளர்ச்சியில் சரிவு
முடிவாக, மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நாடு கொடுத்த விலை என்ன? “பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 1 முதல் 2% வரை குறைந்துவிட்டது. இந்த இழப்பு என்பது பணமதிப்பில் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி வரை இருக்கும். மேலும் புதிய நோட்டுக்களை அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கி செலவிட்ட தொகை சுமார் ரூ. 8,000 கோடி. நீண்ட வரிசையில் நின்றதன் காரணமாக மக்கள் இழந்த வருவாய், செல்லா நோட்டுக்களை திரும்பப் பெற்றதன் காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்ட செலவினம், வங்கிகளின் எழுத்தர்கள், மேலாளர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் செலவிட்ட கூடுதல் நேரம், கூடுதல் பணத்துக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து எந்த வட்டியும் பெறாமல் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கொடுக்க நேரிட்ட தொகை என்று கணக்கு நீண்டுகொண்டே போகிறது” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 3.9.2017 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கிறார்.
மேலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக ரிசர்வ் வங்கியின் செலவு அதற்கு முந்தைய ஆண்டை விட 107% கூடுதலாகி ரூ. 31,000 கோடியைத் தொட்டுவிட்டது. இதன் விளைவாக ரிசர்வ் வங்கி சென்ற ஆண்டு மத்திய அரசுக்கு டிவிடெண்டாக கொடுத்த ரூ.65,876 கோடி இந்த ஆண்டு ரூ.30,659 கோடியாகக் குறைந்து விட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக மத்திய அரசு ரூ.34,217 கோடி நஷ்டமடைந்ததுதான் மிச்சம்.
ஒட்டுமொத்தத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்ததோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துட்டது. லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. லஞ்சம், ஊழல் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை அரசியலில் அரங்கேறிவரும் குதிரை பேரங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும். தீவிரவாதிகளிடம் கட்டுக்கட்டாக புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தது பல சம்பவங்களில் வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசு எப்போது தனது தோல்வியை ஒப்புக்கொள்ளப்போகிறது?
-சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT