Published : 16 Oct 2017 09:08 AM
Last Updated : 16 Oct 2017 09:08 AM
ச
மூகநீதிக்கான முன்னெடுப்புகளில் மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது கேரளம். பிராமணர்கள் அல்லாத 36 அர்ச்சகர்களை அறநிலையத் துறைக் கோயில்களில் நியமித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. அதில் ஆறு பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் புலையர் சமூகத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா (22) மணப்புரம் சிவன் கோவிலில் அர்ச்சராகப் பொறுப்பேற்றதன் மூலம், முதல் தலித் அர்ச்சகர் நியமனம் என்னும் விதையை விதைத்துள்ளது கேரள இடதுசாரி அரசு.
தமிழகத்தில் அன்றைய முதல்வர் கருணாநிதி 1970-ல் ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று கொண்டுவந்த சட்டம்தான் இந்தியாவுக்கே இந்த விஷயத்தில் முன்னோடி. ஆனால், வழக்குகளின் விளைவாக இந்த விஷயம் இங்கு எட்டாக்கனியாகவே தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்திருக்கும் நடவடிக்கை, கேரளத்தைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது.
வரவேற்கும் உயர் சாதியினர்
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் திருவல்லாவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மணப்புரம் மகாதேவர் ஆலயம். இந்த ஆலயத்தின் முகப்பு, அதற்குச் செல்லும் பாதை என காணும் இடமெல்லாம் யது கிருஷ்ணாவை வரவேற்று டிஜிட்டல் பதாகைகள் பளபளக்கின்றன. ‘மாற்றத்திற்கான சங்கொலி முழங்குகிறது’ என இந்து ஜக்கிய வேதி அமைப்பின் பதாகைகளும் ஒற்றை வாக்கியத்தில், மிகப்பெரிய செய்தியைக் கடத்துகின்றன.
அக்டோபர் 9 திங்கள் கிழமை அன்று, யது கிருஷ்ணா முதன் முதலில் அர்ச்சராகப் பொறுப்பேற்க வந்தபோது, மணப்புரம் ஸ்ரீ மகாதேவர் ஆலய சேவா சங்கத்தினர் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல், குறும்புகள் வரை ஒவ்வொன்றையும் விளக்கும் கேரளாவில் பிரசித்தி பெற்ற வஞ்சிப்பாட்டு பாடி, யது கிருஷ்ணாவைக் கோயில் கருவறைக்கு அனுப்பிவைத்தனர். இப்படி உற்சாக வரவேற்பு கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதியைச் சேர்ந்த உயர் சாதியினர். இந்த இடத்தில்தான் சமூகநீதிக்கான பாதையை இந்தியாவுக்குக் காட்டும் இடத்தில் மிளிர்கிறது கேரளம்.
ஆன்மிகத்தில் நாட்டம்
ஒரு காலைப் பொழுதில் கேரள மாநிலம், மணப்புரம் மகாதேவர் ஆலயத்துக்குச் சென்றிருந்தோம். நெற்றி நிரம்ப பட்டை, கழுத்தில் உத்திராட்சம், கூடுதலாக இரு அர்ச்சகர் மாலைகள், பூணூல், அர்ச்சகருக்கே உரிய கேரள பாணியில் கட்டப்பட்ட வேட்டி சகிதம் காட்சியளிக்கிறார் யது கிருஷ்ணா.
“திருச்சூர் மாவட்டம், சாலக்குடி பக்கத்தில் உள்ள நாளுகெட்டு என் சொந்த ஊர். அப்பா ரவி, அம்மா லீலா. இருவருமே கூலி வேலைதான் பார்க்கிறார்கள். எங்கள் வீட்டில் எல்லாருக்குமே பக்தி அதிகம். நானும் அந்தச் சூழலிலேயே வளர்ந்ததால் சின்ன வயதிலிருந்தே ஆன்மீக நாட்டம் கூடுதல்” என்று தொடங்குகிறார்.
நாளுகெட்டு பகுதியில் ஸ்ரீதர்ம சாஸ்தா பத்திரகாளியம்மன் எனும் தனியார் கோவில் இருக்கிறது. தனது ஆறு வயதிலிருந்தே அந்தக் கோயிலுக்குச் செல்லும் பழக்கம் யது கிருஷ்ணாவுக்கு இருந்திருக்கிறது. “எனக்கு இருந்த ஆன்மீக நாட்டத்தால் அந்த கோயிலில் தலைமை அர்ச்சராக இருந்த பிரம்ம ஸ்ரீ கே.கே.அனிருத்தன் தந்திரிக்கு, அருகிலிருந்து சின்னச் சின்ன உதவிகளைச் செய்யத் தொடங்கினேன். ஆண்டவனுக்குச் செய்யும் சேவையை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்னும் எண்ணம் அப்போதுதான் உருவானது. ஆறு வயதிலேயே அப்படியொரு எண்ணம் உருவாக என் வீட்டில் இருந்த மிதமிஞ்சிய ஆன்மீக உணர்வும் காரணமாக இருக்கக் கூடும்” என்கிறார்.
யது கிருஷ்ணாவிடம் அவரது சாதி குறித்து அனிருத்தன் தந்திரி ஒரு முறை கூட கேட்டதில்லை. தான் நடத்தி வந்த ஸ்ரீகுருதேவா வைதீக தந்திர வித்யா பீடத்தில் ஆகம விதிகள், அர்ச்சகர் ஆவது ஆகியவற்றுக்கான இலவசப் பயிற்சியை யது கிருஷ்ணாவுக்குத் தொடர்ந்து வழங்கியிருக்கிறார் அனிருத்தன் தந்திரி.
பள்ளிக்குச் சென்றுகொண்டே அதைத் தொடர்ந்து கற்றுவந்த யது கிருஷ்ணா, தனது 15-ம் வயதில் வடக்கு பரவூரில் உள்ள வாலத்தில் பத்திரகாளியம்மன் என்னும் தனியார் கோயிலில் அர்ச்சகரானார். கொடுங்கலூர் வித்யா பீடத்தில் இளங்கலை சமஸ்கிருதம் முடித்திருக்கிறார். தற்போது முதுகலை சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருக்கிறார்.
“கேரளத்தில் தனியார் கோயில்களில் பூஜை நடப்பதைப் பார்த்திருந்தால் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். எல்லாமே அம்மன் கோவில்கள்; சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்கள்தான். பெரு தெய்வங்கள் எல்லாம் தேவசம் போர்டின் கீழ்தான் இருந்தன. இந்நிலையில், அர்ச்சகராக அனைத்து சாதியினரும் விண்ணப்பிக்கலாம் என தேவசம் போர்டே அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு விண்ணப்பித்தேன். அதில் தேர்வெழுதி வென்று, பணி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி” என்று உற்சாகமாகச் சொல்கிறார் யது கிருஷ்ணா.
செயல்படும் தருணம்
தான் அர்ச்சகர் ஆனது இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “காலத்தின் தேவை கருதி தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்றுதான் இதன் மூலம் நான் உணர்கிறேன். இது இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றே சொல்ல விரும்புகிறேன். வெறுமனே பேசிக்கொண்டிருக்க வேண்டிய காலம் அல்ல இது. செயல்பட வேண்டிய காலம். பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்பு 1936 நவம்பர் 12-ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரை திருநாள் பாலராம வர்மா மகாராஜா கேரளத்தில் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல முதன் முதலில் அனுமதித்தார். அதில் இருந்து கருவறைக்குள் செல்ல இத்தனை ஆண்டுகளாகியிருக்கின்றன. என்னைக் கேட்டால், இது முன்பே வந்திருக்க வேண்டிய மாற்றம் என்பேன்” என்று குறிப்பிடுகிறார்.
இந்நிலையை எய்துவதற்காகத் தொடர்ந்து சமூகநீதிக்காகப் பாடுபட்டு, அது குறித்துப் பேசிவந்த அய்யன்காளி, நாராயணகுரு உள்ளிட்ட பலரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறார் யது கிருஷ்ணா. அர்ச்சகருக்குப் படித்த இடத்திலும் சரி, பணிச் சூழலிலும் சரி சாதிரீதியான வன்மத்துக்கு உள்ளானதே இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். “இந்த மாற்றம் தமிழகத்திலும் நிகழ வேண்டும். தமிழகத்தில் கூட அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 பேர் இன்னும் பணிக்காக காத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகம விதிகளை முறைப்படி பின்பற்றி, மனதளவில் ஒழுக்கத்தோடு நடக்கும் ஒவ்வொருவருமே கருவறைக்குள் செல்லும் தகுதியானவரே. கேரளத்தைப் போல் தமிழகத்திலும் மாற்றங்கள் நடக்க வேண்டும்” என்கிறார்.
மாற்றம் தொடரட்டும்
கேரள அறநிலையத் துறையானது திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கொச்சின் தேவசம் போர்டு, மலபார் தேவசம் போர்டு என நிர்வாக வசதிக்காக மூன்றாகச் செயல்படுகிறது. இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டுதான் இம்மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், “இப்போது நியமிக்கப்பட்ட 62 அர்ச்சகர்களில் 26 பேர் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 36 பேர் பிராமணர் அல்லாதவர்கள். இதில் 21 பேர் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரும் ஈழவ சமுதாயம், 6 பேர் தலித்துகள். இந்த மாற்றம் தொடர்ந்து நிகழும்” என்கிறார் உறுதியுடன்.
ஆக்கபூர்வமான இந்த மாற்றத்தில் யது கிருஷ்ணாவின் குரு அனிருத்தன் தந்திரிக்கு முக்கியப் பங்கு உண்டு. “எனது குரு சுவாமி கிருஷ்ணா வாத்தியார் காட்டிய வழி அது” என்று நினைவுகூர்கிறார் அனிருத்தன் தந்திரி. “எர்ணாக்குளம் மாவட்டம் பரவூரில் 1987-ல் இருந்தே இந்தப் பாடசாலையை நடத்திவருகிறோம். அனைத்து சாதியினருக்கும், பேதமின்றி இந்த சேவையை வழங்க அறிவுறுத்தியது பிராமணச் சமூகத்தைச் சேர்ந்த எனது குரு சுவாமி கிருஷ்ணா வாத்தியார்தான். அவர் சொன்னதைத்தான் இன்றும் செய்துவருகிறேன்” என்று சொல்லும் அவர், சிறுவயதில் இருந்தே யது கிருஷ்ணாவின் ஆன்மீக உணர்வை நன்கு உணர்ந்துகொண்டவர். ஊர்க் கோயிலில் யது கிருஷ்ணாவின் ஆன்மீகச் செயல்பாடுகளால் கவரப்பட்டு அவருக்குப் பயிற்சி அளிக்க விரும்பியதாகக் குறிப்பிடுகிறார். இன்னும் ஏராளமானோருக்கு சாதி கடந்து பயிற்சியளிப்பதாகவும் சொல்கிறார்.
சாதியைக் கடந்தால் ஜோதியைக் காணலாம். கேரளத்தின் இந்த ஜோதி தேசமெங்கும் வெளிச்சம் வீசட்டும்!
- என்.சுவாமிநாதன்
தொடர்புக்கு:
swaminathan.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT