Published : 15 Oct 2017 11:08 AM
Last Updated : 15 Oct 2017 11:08 AM
சென்னைவாசிகளில் அறுபது வயதைக் கடந்தவர்களின் பால்ய கால நினைவுகள் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? “பசுமையான நினைவுகள் அவை” என்று நிச்சயம் சொல்வார்கள். வெறும் வார்த்தைக்குச் சொல்லப்படும் பசுமை அல்ல அது. நிஜமாகவே எண்ணற்ற மரங்கள், தாவர வகைகள் நிறைந்த பசுமை நிறைந்த நகரமாகவே இருந்திருக்கிறது சென்னை. இன்றைக்குச் சுட்டெரிக்கும் வெயிலில் நிழலுக்கு ஒதுங்கக்கூட மரங்களின்றித் தவிக்கிறார்கள் தலைநகரவாசிகள். ஏற்கெனவே பசுமைப் பரப்பில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேல் சென்னை இழந்திருந்த நிலையில், 2016 டிசம்பரில் வார்தா புயல் ஒரு லட்சம் மரங்களைச் சாய்த்துப்போட்டுவிட்டது.
சென்னையில் 6.5%-ஆக இருந்த பசுமைப் பகுதி வார்தா புயலுக்கு பிறகு 4.5%-ஆகக் குறைந்து விட்டது. 1991 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும், 22% பசுமைப் பரப்பைச் சென்னை இழந்திருக்கிறது என்கிறது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை. மறுபுறம் நகர வளர்ச்சியின் காரணமாக கான்க்ரீட் காடுகளின் பரப்புதான் விரிந்துகொண்டே செல்கிறது. 2026 வாக்கில் இப்போது இருக்கும் பசுமைப் பரப்பில் 36%-ஐ கட்டுமானங்கள் காரணமாக தமிழகம் இழந்துவிடும் என்கிறது அந்த ஆய்வு. தமிழகத்தில் தற்போது இருக்கும் 17.5% வனப்பரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.
நம்பிக்கை தரும் செயல்பாடு!
இப்படிப்பட்ட சூழலில்தான், அரசு முன்னெடுக்க வேண்டிய சமூக நலத் திட்டங்களைக் கையில் எடுத்திருக்கிறது எதிர்க்கட்சியான திமுக. இந்தக் கோடையில் ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணியைக் கையில் எடுத்த திமுக, அடுத்து தொகுதிக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது. சென்னை மாநகர முன்னாள் சென்னை மேயரும் சைதாப்பேட்டையின் இந்நாள் சட்ட மன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தன்னுடைய தொகுதியில் முன்னோடியாகத் தொடங்கியிருக்கும் ‘பசுமைத் திட்டம்’ பார்ப்பவர்களை அசத்துகிறது. மரக்கன்றுகள் நடும் திட்டம் என்றால், பெயருக்கு மரக்கன்றுகளைப் போகிற போக்கில் நட்டுவிட்டுச் செல்லும் திட்டம் அல்ல. ஒரு மரக்கன்று மரமாவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
“சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் வசிக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு கன்று என்ற வகையில் திட்டமிட்டோம். இரு செல்பேசி எண்கள்: 9566209124, 9566209125. இந்த எண்களுக்கு எங்கள் தொகுதியைச் சேர்ந்த யார் அழைத்தாலும் அவர்கள் கேட்கும் மரக்கன்றுகளை எடுத்துச் சென்று நட்டுவிட்டு வருவோம். கூடவே பாதுகாப்புக்கான இரும்புக் கூண்டையும் பொருத்திவிடுவோம். நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை, மரக்கன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்பது மட்டும்தான்! இது தவிர பிறந்த நாள் திட்டம் ஒன்றும் வைத்திருக்கிறோம். தொகுதியிலுள்ள யாருடைய பிறந்த நாளின்போதும் இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் பெயரிலேயே ஸ்டிக்கர் அச்சிட்டு, கூண்டில் ஒட்டி, அவர்கள் கையாலேயே மரக்கன்றை நடச் செய்கிறோம். மரக்கன்றுகளைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் இது நல்ல பலன் தருகிறது!” என்கிறார் மா.சுப்பிரமணியன்.
சமீபத்தில்தான் இந்தத் திட்டத்தைத் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார். அதற்குள் 2,000 மரக்கன்றுகளை நட்டுவிட்டார்கள். ஒவ்வொரு மரக்கன்றும் ஒவ்வொரு பெயரில், பொறுப்பில் நடப்படுகிறது என்பதுதான் விசேஷம். தொகுதிக்குள் இதற்கென்றே ஒரு குட்டி லாரி, மரக்கன்றுகள், ஐந்து பேர் கொண்ட அணி சுற்றி வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள கட்சிக்காரர்களிடம் மரக்கன்றை வளத்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால் உற்சாகமாக இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மக்கள் எந்த அளவுக்குத் தயார்?
நேரில் சென்று பார்த்தபோது, ஒரு மரக்கன்று நடுவதற்கு ரூ.500 – ரூ.1000 வரை செலவாகும் என்று தெரிந்தது. தொழில் நிறுவனங்களை நடத்திவரும் நண்பர்கள் மூலம் இதற்கான செலவைப் பகிர்ந்துகொள்வதாக சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், உண்மையான சவால் செலவு அல்ல. நம் மக்களுடைய பங்கேற்பு!
பல இடங்களில் மரக்கன்று நடும் குழுவினர் செல்கையில், “வீட்டை ஒட்டி மரக்கன்று வைக்காதீர்கள், சுற்றுச்சுவரை ஒட்டி வைக்காதீர்கள்!” என்றெல்லாம் அண்டை வீட்டுக்காரர்கள் குறுக்கிடுவதைப் பார்க்க முடிந்தது. “நகர்ப்புறச் சூழலுக்கு ஏற்ப, கட்டிடங்களைப் பாதிக்காத மர வகைகளாகத் தேர்ந்தெடுத்துதான் வாங்கி வந்திருக்கிறோம்; பாதிப்பு ஒன்றும் வராது” என்று மரக்கன்று நடும் குழுவினர் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. “அடுத்து, அடையாற்றங்கரையின் இரு பக்கங்களிலும் வரிசையாக மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டிருக்கிறோம். பசுமைச் சூழலை உருவாக்குவதோடு கரை அரிப்பையும் இது தடுக்கும். மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியான பணியில் எல்லோரும் தம்மை இணைத்துக்கொண்டால் பழைய சென்னையை நாம் பார்க்கலாம்” என்றார் சுப்பிரமணியன்.
தமிழக அரசு என்ன செய்கிறது?
சென்னைக்கு மட்டுமான திட்டமாக இதைப் பார்க்க வேண்டியது இல்லை. தமிழ்நாடு முழுக்க இந்தத் திட்டத்தைத் திமுக முன்னெடுக்கலாம். ஒரு எதிர்க்கட்சியே இப்படியான பணிகளில் ஈடுபடும்போது ஆளுங்கட்சி வேடிக்கை பார்க்கலாகாது. ஜெயலலிதா பெயரில் 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அறிவித்தாரே, அது என்னவாயிற்று? அதோடு கூடவே, பழைய பசுமையை மீட்டெடுக்கும் பணியில் அதிமுகவும் இறங்க வேண்டும். பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் இப்பணியில் கைகோக்க வேண்டும். வரவிருக்கும் மழைக் காலத்துக்கு முன்னராக அடுத்த சில வாரங்களை மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டால், தமிழ்நாட்டைப் பசுமையாகப் பார்க்க எல்லோருமே கனவு காணலாம்.
- கி.ஜெயப்பிரகாஷ்,
தொடர்புக்கு: jayaprakash.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT