Published : 03 Jun 2023 02:40 PM
Last Updated : 03 Jun 2023 02:40 PM
"ஆளுநர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் எங்கேயும் சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான மரியாதையை கொடுக்கிறோம். அதேநேரத்தில், ஆளுநர்களுக்கென்று ஆளுமை இருக்கிறது; அதிகாரம் இருக்கிறது. அதை ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்" என தெரிவித்திருக்கிறார் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன். ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்.
அரசியல் தலைவராக வளர்ந்து வந்த நிலையில், திடீரென நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டீர்கள். ஆளுநர் பதவி உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது?
நீங்கள் கூறியதுபோல, தீவிரமான அரசியலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையில், திடீரென ஆளுநராக நியமிக்கப்பட்டது எனக்குமே மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான். இதற்குமுன் எங்கள் கட்சியின் பெரிய தலைவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வந்தபோது, தீவிர அரசியலில் இருக்க விரும்புவதால் ஆளுநர் பதவி இப்போது வேண்டாம் என அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நான் கட்சித் தலைவராக இருந்தபோதே அது நடந்திருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், நான் எதையும் மறுத்துக்கூற மாட்டேன். நான் சார்ந்திருந்த இயக்கத்தில் எனக்கு கிடைத்த பதவிகள், பொறுப்புகள் எதையும் நான் தேடிச் சென்றதில்லை. அதுவாகத்தான் எனக்கு வந்தது. வந்த பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
ஐந்தே முக்கால் ஆண்டுகள் பாஜக மாநிலத் தலைவராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் சரியாக தூங்கி இருப்பேனா, சரியாக சாப்பிட்டிருப்பேனா, சரியாக உடை அணிந்திருப்பேனா என்றே எண்ணத்தோன்றுகிறது. இத்தனைக்கும் மருத்துவராக இருக்கும்போது நேர்த்தியாக உடை அணியும் பழக்கம் எனக்கு இருந்தது. ஆனால், கட்சித் தலைவராக இருந்தபோது எல்லோரும் பரிகசிக்கிற, விமர்சிக்கிற அளவுக்குக்கூட எனது நடவடிக்கைகள் இருந்தன. இவர் என்ன தலையை பரட்டையாக வைத்திருக்கிறாரே என்றுகூட விமர்சித்தார்கள்.
தலைவர் பதவி கொடுத்துவிட்டார்கள் என்பதால் எதையும் கவனத்தில் கொள்ளாமல் அந்த அளவுக்கு தீவிரமாக பணியாற்றினேன். கட்சியை எப்படியாவது முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன். எனவே, ஒரு பொறுப்பு கிடைத்தால் அதை மறுக்க மாட்டேன்; தீவிரமாக பணியாற்றுவேன். பாஜகவில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்ததில் இருந்து, மண்டல அளவிலான பொறுப்பு, மாநில அளவிலான பொறுப்பு, தேசிய அளவிலான பொறுப்பு என படிப்படியாக எல்லா நிலையிலும் பதவிகளைப் பெற்று ஒருவர் உயர்ந்தார் என்றால் அது நான்தான்.
ஆளுநர் பதவி வந்தபோது, எனது நலம் விரும்பிகள்கூட, இப்போது, இந்த வயதில் நீங்கள் அந்த பதவியை ஏற்க வேண்டுமா? இன்னும் 10-15 வருடங்கள் அரசியலில் இருந்துவிட்டு பிறகு ஏற்கலாமே என கூறினார்கள். ஆனால், நான் அதனை ஒரு வாய்ப்பாகவே கருதினேன். ஆளுநர் பதவியை நான் ஏற்றதற்கு மற்றொரு காரணம், நாடாளுமன்றத் தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் நான் தோற்றதும் எனது அம்மா மிகவும் வேதனைப்பட்டார்கள். இவ்வளவு கடினமாக பணியாற்றும்போதும் அங்கீகாரமே இல்லாமல் திரும்பத் திரும்ப தோல்விகள் வந்துகொண்டிருக்கிறதே என வருந்தினார்கள். எனவே, ஆளுநர் பொறுப்பை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். முழு நிறைவோடு பதவி ஏற்றேன்.
ஏற்றுக்கொண்ட பிறகு, ஆளுநர் என்றால் 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டுமா என்ன? அப்படி எந்த சட்டமும் சொல்லவில்லையே. எனவே, ஆளுநர் பதவியை மக்களுக்காகப் பணியாற்றும் பதவியாக நாம் மாற்ற முடியும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டேன். அதன் காரணமாக அங்கு ராஜ்பவனை மக்கள் பிரஜா பவன் என சொல்ல ஆரம்பித்தார்கள். தற்போதும் அப்படித்தான் சொல்வார்கள். பிரஜா தர்பார் என்ற பெயரில் மக்களை சந்திப்பது, அவர்களிடம் இருந்து புகார்களைப் பெறுவது, அரசுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக இருப்பது, பழங்குடி மக்கள் வாழும் 6 கிராமங்களை தத்தெடுப்பது, இளைஞர்களை சந்திப்பது என மக்கள் ஆளுநராகவே நான் மாறிவிட்டேன்.
உங்கள் நலம் விரும்பிகள் அப்போது கூறியதை ஏற்காதது குறித்து தற்போது என்ன நினைக்கிறீர்கள்?
நான் சரியான முடிவை எடுத்ததாகவே எண்ணுகிறேன். சொல்லாத சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன். எங்கள் இயக்கத்தில் ஒருவர் 6 ஆண்டுகள்தான் தலைவராக இருக்க முடியும். 6 ஆண்டுகள் நிறைவடைய இருந்த நேரம் அது. சுமார் 6 வருடங்கள் ஒரு கட்சியின் பிரதான நபராக இருந்துவிட்டு, அதற்குப் பிறகு நமது நிலை என்ன? எப்படி இருக்கப் போகிறோம்? முன்னாள் தலைவர் என்ற நிலையில் மட்டும்தான் நம்மால் இருக்க முடியுமா? அடுத்த மாற்றத்திற்கான வாய்ப்பு நெருக்கத்தில் இல்லையே? எப்படி நாம் நமது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம்? என்பதுபோன்ற கேள்விகள் மனதில் எழுந்து கொண்டே இருந்தன. ஒருவர் பணி ஓய்வு பெறும்போது, அவர் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு பணி ஓய்வு பெறும் வயது இல்லை என்றாலும், அப்படியெல்லாம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதனால்தான், ஆளுநர் பதவியை ஏற்க வேண்டாம் என நலம் விரும்பிகள் கூறியபோதும் ஏற்றேன். ஆளுநர் பதவியை ஒரு வாய்ப்பாகவே பார்த்தேன். அதோடு, பிரதமர் என்ன சொல்கிறாரோ, கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டுத்தான் எனக்குப் பழக்கம். எனவே, ஏற்றது நல்லது என்றே நினைக்கிறேன். பல்வேறு அனுபவங்களைப் பெறுவதற்காக இறைவன் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு இது என்றே கருதுகிறேன். முதல்வர்கள் எப்படி இருக்கிறார்கள்? பல்வேறு தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. இல்லாவிட்டால், நான் எப்போது தெலங்கானா அரசியலை போய் பார்த்திருக்க முடியும்? எவ்வாறு பாண்டிச்சேரி அரசியலை பார்த்திருக்க முடியும்?
அரசியல்வாதியாக பொதுவாழ்வில் இருப்பதற்கும், ஆளுநராக பொதுவாழ்வில் இருப்பதற்கும் எத்தகைய வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கட்சிப் பணியில் இருந்தபோது ப்ரொட்டோகால் கிடையாது. யாராவது தொலைபேசியில் அழைத்து ஏதாவது பிரச்சினை என்றால் நான் உடனே சென்றுவிடுவேன். ஏதாவது ஒரு ஓவியக் கண்காட்சி நடக்கிறது என்றாலும் உடனே அங்கு சென்று பார்ப்பேன். காற்றைப் போல வாழ்க்கை சுதந்திரமாக இருந்தது.
ஆளுநர் என்றவுடன் ஒரு பெரிய அரண். ஒரு சிறிய விஷயத்தை செய்வதாக இருந்தாலும் நான் ப்ரொட்டோகால் அலுவலரைக் கூப்பிட வேண்டும். பல்வேறு விஷயங்களைப் பார்த்துதான் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். என்றாலும், பல நேரங்களில் அவற்றை மீறத் தொடங்கினேன். உதாரணத்திற்கு, தெலங்கானாவில் கால்நடை கல்லூரியில் படித்து வந்த தீக்ஷா என்ற பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது நான் ஆளுநராக ஆகி ஒரு மாதம்தான் ஆகி இருந்தது. அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நான் கூறினேன். அதிகாரிகள் உடனே அதிர்ச்சியாகி விட்டார்கள். ஆளுநர் அப்படி எல்லாம் போக முடியாது என்றார்கள். நீங்கள் அனுமதித்தால் அனுமதியுங்கள்; நான் போகத்தான் போகிறேன். குறைந்தபட்ச பாதுகாப்புக்கு வருவதாக இருந்தால் வாருங்கள். ஆளுநர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு வட்டம் போடாதீர்கள். என்னால் அப்படி இருக்க முடியாது. ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தெலங்கானாவே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. நான் ஒரு பெண் ஆளுநர். நான் எவ்வாறு அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லாமல் இருக்க முடியும்? என உறுதியாக கூறியதை அடுத்து பாதுகாப்புக்கு வந்தார்கள்.
அடுத்த சில மாதங்களில் கரோனா வந்துவிட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட பிபி கிட் சரியாக இல்லை என்பது உள்பட பல்வேறு காரணங்களைக் கூறி திடீரென 30 மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றார்கள். பிபி கிட் அணிந்து கொண்டு நான் சென்று அவர்களைச் சந்திக்கப் போவதாகக் கூறினேன். அதிகாரிகள் உடனே அலறினார்கள். அப்போது, என்னைப் போன்ற மருத்துவர்கள்தானே பிபி கிட் அணிந்து கொண்டு சேவை செய்கிறார்கள். நான் பிபி கிட் அணிந்து கொண்டு சென்று அவர்களைப் போய் பார்த்தால், ஆளுநரே வந்து பார்க்கிறார் என்பதால், அவர்களுக்கு நம்பிக்கை வரும் என்றேன். அதிகாரிகள் ஏற்கவில்லை. என்றாலும், நானே பிபி கிட் அணிந்துகொண்டு மருத்துவர்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர்களின் குறைகளைக் கேட்டேன். அவர்கள் ஒரு பட்டியல் அளித்தார்கள். அது குறித்து முதல்வரிடம் பேசி, மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்தேன். அது பெரிய செய்தியாகியது. இவை எல்லாம் நான் ப்ரொட்டோகாலை மீறி செய்தவைதான். இருந்தாலும்கூட ஆளுநராக இருப்பதால் நான் எனது இயல்பான வாழ்க்கையில் இருந்து அந்நியப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன். ஆளுநராக இருந்து மக்கள் பணி செய்தாலும் இதுதான் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு.
இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருக்கிறீர்கள். எது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது?
இரண்டுமே எனக்கு இரண்டு கண்கள்தான். முதலில் நான் தெலங்கானா சென்றபோது, மொழி தெரியாத ஒரு அந்நிய மாநிலத்திற்குச் செல்கிறோமே என்றுதான் எனக்கு இருந்தது. ஆனாலும், நல்ல வேளையாக வட இந்தியாவில் எங்கோ ஒரு மாநிலத்தின் ஆளுராக நியமிக்காமல் விட்டார்களே என்று கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். தெலங்கானா சென்றபிறகு அம்மாநில மக்கள் கொடுத்த அபிரிமிதமான ஆதரவு என்னை நெகிழ வைத்துவிட்டது. என்னை அக்கா என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். சிறிய அளவிலான திருமண நிகழ்ச்சி என்றாலும் கூப்பிடுவார்கள். நான் கோயிலுக்குச் சென்றால், எனக்குப் பிடித்தமான சேலையை வாங்கிக் கொடுப்பார்கள். வளையல் வாங்கிக் கொடுப்பார்கள். தங்கள் வீட்டு பெண்ணாகவே அவர்கள் என்னைப் பார்க்கிறார்கள். அதனால், அந்த மாநிலம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக ஆகிவிட்டது. தமிழ் தெரிந்த ஊர் புதுச்சேரி. தெலங்கானா செல்வதற்கு முன்பு என்றால் புதுச்சேரிதான் எனக்கு பிடிக்கும் என கூறி இருப்பேன். தெலங்கானா மக்களிடம் பழகிய பிறகு இரண்டு கண்களில் எதை பிடிக்கும் என்று கேட்டால் எப்படி பதில் கூறுவது? இரண்டு கண்களுமே எனக்கு பிடித்தவைதான்.
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், உங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தனிப்பட்ட முறையில் நீங்கள் அவருக்கு சவாலாக இருக்கிறீர்களா?
அவர் அப்படி கருதுகிறார். ஆரம்பத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என பலரும் என்னோடு நன்கு பழகினார்கள். ஆளுநராக இருந்தாலும் சகோதரி போல பழகுகிறீர்கள் என கூறினார்கள். மாம்பழங்கள் கொண்டு வந்து கொடுப்பது, கோயிலுக்கு அழைப்பது என அன்பு காட்டினார்கள். ஆனால், முதல்வர் கே. சந்திரசேகர ராவைப் பொறுத்தவரை ஆளுநர் என்பவர் அப்பட்டமான ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆளுநருக்கென்று தனி செயல்பாடு இருக்கக்கூடாது என எண்ணுகிறார். அவர் இவ்வாறு நினைப்பதற்கு நான் ஒரு பெண் என்பதும் ஒரு காரணம். நான் தெலங்கானா ஆளுநராக பதவி ஏற்கும்வரை அங்கு பெண் அமைச்சர்களே கிடையாது. நான் காலையில் ஆளுநராக பதவி ஏற்ற பிறகுதான் இரண்டு பெண்களுக்கு மாலையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன்.
மற்றொரு காரணம், மத்திய அரசை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்ற முடிவில் முதல்வர் இருக்கிறார். மத்திய அரசின் பிரதிநிதியாக என்னைப் பார்க்கிறார். அதானால்தான், ஆளுநர் விஷயத்தில் ப்ரொட்டோகால் பின்பற்றப்படுவது கிடையாது. நான் ஒரு மாவட்டத்திற்குச் சென்றால், அம்மாவட்ட அமைச்சரோ, ஆட்சித் தலைவரோ, காவல் கண்காணிப்பாளரோ வருவதில்லை. இவ்வாறு உதாசீனப்படுத்தினால் நான் சோர்ந்துவிடுவேன் என அவர் நினைக்கலாம். ஆனால், நான் எனது பணியில் ஒரு சதவீதம் கூட தொய்வில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அரசு என்னுடன் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, அம்மாநில மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
தமிழிசை சவுந்தரராஜன்தான் புதுச்சேரியின் நிழல் முதல்வராக இருக்கிறார் என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
அவர் கூறுவது உண்மையில்லை. புதுச்சேரி முதல்வர் அண்ணன் ரங்கசாமியோடு இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். மக்கள் நலன் கருதி சில முன்னெடுப்புகளை நான் மேற்கொள்வேன். உதாரணத்திற்கு, சிஎஸ்ஆர் நிதி மூலம் பள்ளிகளுக்கு டாய்லெட் கட்டிக் கொடுத்தது, பூங்காக்களில் நூலகம் அமைத்துக் கொடுத்தது போன்றவற்றைச் சொல்லலாம். இதுபோன்ற எனது முயற்சிகளை, அண்ணன் ரங்கசாமி ஒப்புக்கொள்கிறார். இதேபோல், 15 நாட்களுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து, அவர்கள் கூறும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கிறேன். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கிறார்கள். தற்போது ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் மாதம்தோறும் 15ம் தேதி அதிகாரிகள் மக்களைச் சந்திக்கிறார்கள்.
அதேபோல், அண்ணன் ரங்கசாமி கூறும் மக்கள் நலத் திட்டங்களை நான் ஏற்கிறேன். குறிப்பாக பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம் கொடுக்க வேண்டும், மீனவர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், முதியோர் உதவித் தொகையை உயர்த்த வேண்டும், மீனவர்களுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்றெல்லம் அவர் கூறியபோது, அவற்றை நான் ஒப்புக்கொண்டேன். இருவருமே நல்ல புரிதலோடு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிறோம். சில திட்டங்களை நிறைவேற்றுவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அது குறித்து அதிகாரிகளை அழைத்து ஆலோசித்து, எவ்வாறு நிதியை திரட்ட முடியும் என்பதை முடிவு செய்து, தேவைப்பட்டால் மத்திய அரசிடம் நிதி கோரி திட்டங்களை நிறைவேற்றுகிறோம். மக்கள் பலனடைய வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.
எனவே, நான் நிழல் முதல்வராக இருக்கிறேன் என நாராயணசாமி கூறுவது அப்பட்டமான தவறான கருத்து. அதுமட்டுமல்ல, அதிகார மமதை பிடித்து அலைகிறார் என்றெல்லாம் என்னைப் பற்றி அவர் கூறி இருக்கிறார். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. அதேநேரத்தில், இதுபோன்று எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் நான் கவலைப்படுவது கிடையது. என்னைப் பொறுத்தவரை எனது ஒரு நாள், மக்களுக்கு எத்தகைய பயனுள்ளதாக இருந்தது என்பதில்தான் நான் கவனம் செலுத்துகிறேன். எனது செயலால், நான் எடுக்கும் முடிவால் மக்களுக்கு பலன் இருந்தது என்றால், அதோடு திருப்தி அடைந்துவிடுவேன். நேர்மையான நிர்வாகத்தை அளித்து வருகிறேன். என்மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கூற முடியாது. எனது பணிகளை, நான் பார்க்க வேண்டிய கோப்புகளை கிடப்பில் போடுவது கிடையாது. போன வருடம் மட்டும் 1,500 கோப்புகளுக்கு நான் ஒப்புதல் அளித்திருக்கிறேன். எனக்கு சுயநல நோக்கம் துளியும் கிடையாது. பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இந்த பணிகளை மன திருப்திக்காகவும், மக்களுக்காகவுமே செய்கிறேன்.
ஆளுநர்கள் அரசியல் செய்பவர்களாக இல்லாவிட்டாலும், அவர்களின் அரசியல் பின்னணி அவர்களுக்கு சுமையாகிவிடுகிறதா?
உண்மைதான். தெலங்கானாவில் ஆளும் கட்சியினர் என் மீது முன் வைக்கும் குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் சரி, புதுச்சேரியில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் சரி அவை அனைத்துமே, எனது அரசியல் பின்புலம் காரணமாகவே வைக்கப்படுகிறது. அவர்கள் என்னை பாஜகவைச் சேர்ந்தவர் என்ற நினைப்போடுதான் பார்க்கிறார்கள். அதனை அகற்ற முடியவில்லை. இரண்டு மாநிலங்களிலும் நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கு எனது அரசியல் பின்புலம்தான் காரணம்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு எவ்வாறு இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
இன்னொரு ஆளுநரின் செயல்பாட்டை நான் கணக்குப் பார்ப்பதோ, விமர்சனம் செய்வதோ சரியாக இருக்காது.
சக ஆளுநர் என்ற முறையில் அவரது செயல்பாட்டை நீங்கள் மதிப்பிடலாமே?
அவரும் மக்களை தொடர்ந்து சந்திக்கிறார். அவரும் ராஜ் பவனை மக்கள் பவனாக மாற்றி இருக்கிறார். அந்த வகையில் அவரை பாராட்டத்தான் வேண்டும். அவருக்கும் அரசாங்கத்துக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், அது இன்னொரு மாநிலத்தில் தலையிடுவதாக இருக்கும்.
திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை என்றும் அது காலாவதியான கொள்கை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறி இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆளுநர் தனது கருத்தைச் சொல்வதற்கு சுதந்திரம் இல்லை என சொல்ல முடியாது.
ஆளுநரின் அந்த கருத்தோடு நீங்கள் உடன்படுகிறீர்களா?
திராவிட மாடல் குறித்து அண்ணன் ஸ்டாலினுக்கு நானும் கேள்வி எழுப்பி இருக்கிறேன். தமிழுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், திராவிட மாடல் என்ற சொல்லில் தமிழும் இல்லை; தெளிவும் இல்லை. மற்றொன்று, திராவிடத்தில்தான் கர்நாடகமும் வருகிறது. தற்போது அங்கே புதிதாக வந்துள்ள அரசு மேகதாதுவில் அணை கட்டப் போவதாகக் கூறுகிறது. திராவிட மாடல் அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல், துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி இருக்கிறார். மாநில அரசுக்கு போட்டியாக மற்றொரு அரசை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்துவதாகக் கருத இது இடமளிக்கிறதே?
துணை வேந்தர்களை அழைக்கும் உரிமை ஆளுநருக்கு இருக்கிறது. ஏனென்றால், ஆளுநர்தான் வேந்தர். ஆனால், மாநில அரசாங்கத்திற்கு தகவல் சொன்னார்களா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆளுநர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் எங்கேயும் சொல்வதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான மரியாதையை கொடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் என்றைக்குமே நான் முதல்வர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றோ, நான்தான் அதிகாரம் செலுத்துவேன் என்றோ சொன்னதில்லை. அதேநேரத்தில், ஆளுநர்களுக்கென்று ஆளுமை இருக்கிறது; அதிகாரம் இருக்கிறது. அதை ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். சிலர், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுநர்களை ஏற்கிறார்கள். ஆனால், ஆளும் கட்சியாக வந்துவிட்டால் ஏற்க மறுக்கிறார்கள். இதுபோன்ற இரட்டை நிலைப்பாடு ஏன் என்பதுதான் எனது கேள்வி.
ஆளுநர் வேண்டாம் என்பது ஒரு கொள்கை நிலைப்பாடு. ஆனால் ஆளுநர் இருக்கும் வரை அவரிடம் முறையிடுவது எவ்வாறு தவறாகும்?
ஆளுநர் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் எனது கருத்து. பரந்த மனப்பான்மையோடு அணுகினால் என்ன? பேச்சுவார்த்தை மூலம், நட்பான அணுகுமுறை மூலம் எல்லாவற்றையும் சுமூகமாக செயல்படுத்த முடியும். அந்த அணுகுமுறை இல்லை என்பதுதான் தற்போது உள்ள நிலை.
நாட்டுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கிடைத்திருக்கிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இதை எப்படி உணர்கிறீர்கள்?
நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. புதிய கட்டிடத்தில் முதலில் தமிழ் நுழைந்திருகிறது; சிவனடியார்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். எவ்வித ஆடம்பரமும் இன்றி, காலம் காலமாக ஆன்மீகத்தையும் தமிழையும் வளர்த்தவர்கள் சிவனடியார்கள். நாடாளுமன்றத்தில் நமது தேவாரம் பாடப்பட்டது. வர்ணனைகூட தமிழிலும் இந்தியிலும்தான் செய்தார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்ற முறையில், இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
செங்கோல் கொடுக்கப்பட்டதை, முடியாட்சியின் சின்னம் செங்கோல் என கூறி சிலர் விமர்சிக்கிறார்கள். நான் கேட்கிறேன், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள் செங்கோலை வாங்கிக் கொண்டுதான அமர்கிறார்கள். இத்தனைக்கும் மேயர்கள் மக்களுக்கு நெருக்கமான நிர்வாக கட்டமைப்பில் இருப்பவர்கள். அப்படி எனில், மேயர்களுக்கு செங்கோல் கொடுத்தது தவறா?
அடுத்ததாக, செங்கோல் ஆட்சி மாற்றத்திற்காகக் கொடுக்கப்பட்டது அல்ல என்றும், அது நேருவுக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்றும் சிலர் கூறுகிறார்கள். இதை திருவாவடுதுறை ஆதீனம் மறுத்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்காகத்தான் செங்கோல் கொடுக்கப்பட்டது என்றும் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் திருவாவடுதுறை ஆதீனம் கூறி இருக்கிறார். இது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். சரித்திரத்தில் எல்லாமே பதிவாகும் என்று சொல்ல முடியாது. பதிவு செய்யாமல் சில விடுபட்டிருக்கலாம் அல்லது பதிவு செய்ய வேண்டிய அளவில் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். நானே சில நேரங்களில், நாம் நிறைய பணிகளைச் செய்கிறோமே, பலவற்றை பதிவு செய்யாமல் இருக்கிறோமே என வருத்தப்படுவேன். பணிச்சுமை காரணமாக நான் செய்த சில முக்கிய நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யாமல் விட்டுவிடுவேன்.
செங்கோலைப் பொறுத்தவரை அதனை செய்து கொடுத்தவர், நாங்கள்தான் செய்து கொடுத்தோம் என்கிறார். ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத்தான் செங்கோல் கொடுக்கப்பட்டது என திருவாவடுதுறை ஆதீனம் சொல்கிறார். அதை அரசும் சொல்கிறது. இருந்தும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்; மறுக்கிறார்கள். நான் கேட்கிறேன், எப்படி இருந்தாலும் செங்கோல் தமிழ்நாட்டைச் சேர்ந்ததுதானே. தமிழர்களின் அடையாளம்தானே அது. ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை; சரித்திரத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும்கூட, தமிழ் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறது என்பதற்காகவாவது, தமிழக முதல்வர் வாழ்த்து கூறி இருக்க வேண்டாமா? நீங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கிறீர்கள் என்றால் அதில் அப்பட்டமாக அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு தமிழரும் ஏற்றுக்கொள்ளும்போது, தமிழக முதல்வரும் அதனை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். தமிழக அரசு செய்தது, அரசியல்வாதிகள் புறக்கணித்தது ஒரு வரலாற்றுப் பிழை. தமிழ் அன்னையே இதை மன்னிக்க மாட்டாள்.
நாடு மத ரீதியாக பயணிக்கக்கூடாது என்றும் அறிவியல் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி இருக்கிறார். அவரது கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஒரு அப்பட்டமான அரசியல் கருத்து. அவர்கள் வீட்டில் மத ரீதியில் விழாக்கள் கொண்டாடாமல் இருக்கிறார்களா? நாடாளுமன்றம் என்பது என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செல்லும் இடம். மக்களிடம் எத்தகைய பழக்க வழக்கங்கள் இருக்கின்றனவோ, அதுதான் அங்கு இருக்கும். மக்கள் மதம் சார்ந்து இருக்கிறார்கள் எனும்போது எவ்வாறு அதனை முற்றாக விட்டுவிட முடியும். அமெரிக்க அதிபரின் மாளிகையிலேயே தீபாவளி கொண்டாடப்படுகிறது. கனடா நாட்டின் அதிபர் மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. விஞ்ஞானம் என்றால் என்ன? விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்ன மாறுபாடு இருக்கிறது?
நமது வீட்டில் ஒரு கிரஹ பிரவேசம் நடந்தால் எப்படி நடக்குமோ அதுதான் நாடாளுமன்றத் திறப்பு விழாவில் நடந்தது. நமது வீடு வேறு; நாடாளுமன்றம் வேறு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அரசுக்கு, மக்களின் பழக்க வழக்கங்கள்தானே இருக்கும். மதம் வாழ்க்கையில் இருக்கும் வரை, நாடாளுமன்றத்திலும் அரசாங்க நிகழ்வுகளிலும் மதம் இருக்கும். முற்றிலுமாக மதம் இல்லை என்று ஆகிவிட்டால், அப்போது அது இல்லாமல் போகலாம். அதுவரை மதம் இருப்பது தவறில்லை என்றுகூட அல்ல சரி என்றுதான் சொல்வேன்.
பொது வாழ்வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். உங்களின் அடுத்த இலக்கு எது?
ஆண்டவரும் ஆண்டு கொண்டிருப்பவரும் எனக்கு என்ன வழியைக் காட்டுகிறார்களோ அந்த வழியை நான் தேர்ந்தெடுப்பேன். பாஜக மாநில தலைவராக முழு திருப்தியோடு பணியாற்றினேன். எதிர்வினைகள் தீவிரமாக இருந்தபோது கடுமையாக உழைத்து அந்த இயக்கத்தின் பெயரை ஓரளவு நிலைநிறுத்தினேன். எல்லோருமே இதை ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல், ஆளுநராகவும் எனது சக்திக்கு மீறி நேரத்தை செலவிட்டிருக்கிறேன். எனது சக்திக்கு மீறிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். பாஜக மாநில தலைவராக எவ்வாறு உழைத்தேனோ அதைவிட பன்மடங்கு ஆளுநராக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருந்தாலும் இரண்டு மாநிலங்களிலும் ஒரு முழு நேர ஆளுநர் எவ்வாறு பணியாற்றுவாரோ அவ்வாறு நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 24 மணி நேரத்தில் 48 மணி நேர வேலையை செய்யும் அளவுக்கு கடவுள் எனக்கு சக்தியை கொடுத்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அடுத்து என்ன பணி என்பதை ஆண்டவரும் ஆண்டு கொண்டிருப்பவர்களும் பார்த்துக்கொள்வார்கள். எந்த பணிக்கும் நான் தயாராக இருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT