Published : 29 May 2023 06:16 AM
Last Updated : 29 May 2023 06:16 AM
கர்நாடக சட்டமன்றத் தேர்தலை 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் எனத் தேர்தல் அரசியல் ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள். 2019 மக்களவைத் தேர்தலில், பாஜக அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்ததற்கு, கர்நாடகத்தில் பெற்ற வெற்றி முக்கியக் காரணமானது.
மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25ஐ பாஜக கைப்பற்றியது. அதுவரை தென்னிந்தியாவில் அது போன்ற எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாகக்கூட அக்கட்சி பெற்றதில்லை. எனவே, கர்நாடகம் என்பது பாஜகவுக்கு மிகமிக முக்கியமான களம். அந்தக் களத்தில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி, எதிர்காலத்தில் திருப்புமுனையாகும் எனக் கருதப்படுவதில் ஆச்சரியமில்லை.
சிறந்த தேர்வு: காங்கிரஸின் இந்த அபார வெற்றிக்குப் பல்வேறு பங்களிப்புகள் இருந்தாலும், உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரது பங்கு அபாரமானது. தனிப்பட்ட முறையில், பல வகைகளிலும் பாஜகவின் நெருக்கடிகளை எதிர்கொண்டு, தேர்தல் களச் சாகசங்களை முன்னின்று நடத்தி, இந்த வெற்றியைப் பெற்றுத் தந்ததில் சிவகுமாரின் பங்கு மிகப் பெரிதுதான்.
ஆனாலும் அவரை விடுத்து சித்தராமையாவை முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை; மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. இந்திய தேசியவாதத்துக்கு மதச்சாயம் பூசப்பட்டிருக்கும் அரசியல் களத்தில், சமூகநீதி, மாநில உரிமைகள் போன்றவற்றுக்கு ஆதரவுத் தலைவரான சித்தராமையாவின் தேர்வு முக்கியமானது. தான் ஒரு கடவுள் பக்தர் என்று கூறிக்கொண்டாலும், இந்த முறை கடவுளின் பெயரால் பதவி ஏற்றுக்கொண்டாலும், பகுத்தறிவுச் சிந்தனை அவரிடம் உண்டு. அந்த வகையில், காங்கிரஸ் தலைமையின் இந்த முடிவு கவனம் ஈர்க்கிறது.
பாஜக பிரயோகித்த அஸ்திரம்: தன்னை ஒரு தேர்தல் இயந்திரமாகவே கட்டமைத்துக்கொண்டுவிட்ட பாஜகவை எதிர்கொள்வது, இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு மாபெரும் சவாலானது. வட இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்களின் நெறிபிறழ்ந்த பாஜக சார்பு நிலைப்பாடு இன்னொரு சவாலாக இருந்தது. கூடவே, பிரதமர் மோடியின் அயராத பிரச்சாரக் கூட்டங்களும் பேரணிகளும், பாஜகவுக்குப் புதுத் தெம்பை ஊட்டியதை மறுக்க முடியாது.
அவற்றையெல்லாம் தாண்டி, காங்கிரஸின் ஐந்து ‘திராவிட மாடல்’ வாக்குறுதிகள் பாஜகவை அதிரவைத்தது, எதிர்முனைத் தாக்குதலைத் தீவிரமாக்கியது. ஒருநிலையில், காங்கிரஸின் ‘பஜ்ரங் தள்’தடை வாக்குறுதி, மதவாதப் பிளவுப் பரப்புரையை அதன் மோசமான எல்லைகளுக்கு இட்டுச் சென்றது.
உத்தரப் பிரதேச மாடலில் ஒரு இஸ்லாமியவேட்பாளருக்குக்கூட வாய்ப்பளிக்காத பாஜக,கர்நாடகத்தைத் தென்னிந்தியாவின் உத்தரப் பிரதேசமாக மாற்றிவிடுவதில் முனைந்து நின்றது. ‘ஒரு இஸ்லாமியர்கூட எங்களுக்கு வாக்களிக்கத் தேவையில்லை’ எனபாஜக அமைச்சர் ஒருவர் பேசும் அளவுக்குநிலைமை மோசமடைந்தது. அதுவரை காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு பற்றிப் பேசியவர்கள்கூட, பஜ்ரங் தள் விவகாரம் பாஜகவுக்குச் சாதகமாகிவிடுமோ என எண்ணத்தொடங்கினர்.
எடியூரப்பாவின் ‘இடம்’: இந்தக் காரணங்களால்தான், கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி பெரும் ஆசுவாசமானது. இதுவரையிலான கர்நாடக மாநில பாஜக வெற்றிகள், 2014க்குப் பின்னர் உருவாக்கப்பட்டிருக்கும் ‘குஜராத் மாடல்’ அரசியல் பாணியில் இல்லை என்பது கவனத்துக்குரியது.
பாஜக கர்நாடகத்தில் காலூன்றிய 1989 தொடங்கி, 2021இல் கட்டாய ஓய்வளிக்கப்படும் வரை எடியூரப்பா தான் அதன் முகமாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. 2008இல் கர்நாடக சட்டமன்றத்தில் 110 இடங்களை வென்று, தென்னிந்தியாவின் முதல் பாஜக அரசை அமைத்ததும் அவரே. அநேகமாகக் கர்நாடக அரசியலை ‘லிங்காயத்து எதிர் ஒக்கலிகா’ என்னும் சாதிகளின் பலப் பரீட்சையாக்கிய பெருமை எடியூரப்பாவையும் சேரும்.
ஆனால், அவரது இந்தத் தொடர் இருப்பை பாஜக ரசிக்கவில்லை. விளைவாக, எடியூரப்பா 2011இல் முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும், 2012இல் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி கண்டதும்அரங்கேறின. 2013 தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று, சித்தராமையாதலைமையில் அமைந்தது.
எடியூரப்பா வெற்றிக் கோட்டை எட்டும் ‘மேஜிக்’ வாக்குகளைக் கொண்டிருக்கிறார்என்பதாலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள் மோடியும் அமித் ஷாவும். எனினும், அந்த வியூகம் இத்தேர்தலில் பாஜகவுக்கு முழுப் பலனைத் தந்துவிடவில்லை.
தேசியவாதக் கட்சிகளின் தீராத பிணி, மாநிலத் தலைமைகளை முடக்கி மூலையில் வைப்பதுதான். திமுக, பஞ்சாபின் அகாலி தளம், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தவிர்த்து, இப்போது இருக்கும் மாநிலக் கட்சிகள் உருவாக வழிவகுத்தது காங்கிரஸ் தலைமைதான். அதே வழியில்தான் இப்போதைய பாஜகவின் போக்கும் இருக்கிறது. ஆனால், பாஜகவிலிருந்து எந்த மாநிலக் கட்சியும் ஒருபோதும் உருவாக முடியாது என்பதற்கு எடியூரப்பாவே சாட்சி.
திராவிடத் தலைவர்களின் முக்கியத்துவம்: மத, மொழி, இனச் சிறுபான்மைகளை எதிரிகளாக, தேச விரோத சக்திகளாகச் சித்தரிப்பதில் பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல், இந்துப் பெரும்பான்மை என்னும் தொகுப்பைக் கட்டுவதில் பல நுட்பமான வழிமுறைகளைக் கையாள்கிறது.
இந்து/சமணத் தொழிலதிபர்கள், வியாபாரிகள், முன்னேறிய சமூகத்தினர் எனத் தொடங்கிய கட்சி, இப்போது அழுத்தம் தாங்காமல் இதர பிற்படுத்தப்பட்டோரையும், பட்டியல் சாதியினரையும் அவர்களது மொழி, இன, தொல்குடி மதநம்பிக்கை போன்ற பன்மைத்துவங்களைப் பண்புநீக்கம் செய்து, இந்துவாக ஒருங்கிணைப்பதில் முனைந்து செயல்படுகிறது.
அதற்கு எதிரான அரசியல் போக்குக்கான சரியான ‘மாதிரி’களாகத் தற்போதைய தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்களான மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், சித்தராமையா ஆகியோர் தென்படுகிறார்கள். பகுத்தறிவு, சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சிக்கான ஓங்கிய குரல் என்னும் தளத்தில் இணையும் இவர்களின் கரங்கள், பாஜகவின் திட்டங்களை முறியடிக்கும் வல்லமை கொண்டவை.
பாஜகவை முறியடிக்கும் அரசியல் என்பது, அதனுடைய சாயலில் அல்லது அதன் நீர்த்துப்போன மாதிரியாக இருக்கவே முடியாது. மதவாத தேசியத்துக்கு எதிராக அனைத்துவிதமான இன, மொழி தேசியவாதங்களும், சாதியவாதங்களும் தோற்றுப்போவது அல்லது அதன் பகுதியாகிப்போவது உறுதி. பாஜகவின் ‘ஒற்றை இந்தியா’ கனவின் மறைபொருளாக இருப்பது இந்தியக் குடியரசின் அடிப்படைகளைப் புரட்டிப் போடுவதே.
2024 தேர்தலில் பாஜக வெற்றி பெறுமானால், உலகின் பெருந்திரள் மக்கள்தொகை கொண்ட இந்தியா, அரசமைப்பின்படியான ஆட்சியை முற்றிலுமாக இழந்துவிடுமோ என்னும் எண்ணம் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் தேசியம் நாட்டின்உயிர்நாடியான பன்மைத்துவத்தை அழிப்பதாக ஒருபோதும் இருக்க முடியாது. எந்த ஆட்சிமாற்றத்தையும் நிகழ்த்த வல்லவர்கள் எளிய மக்கள் மட்டுமே; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அவர்களுக்கான உந்துதல்.
இந்திய ஒன்றியத்தைக் காப்பதற்கான போரில் மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்னும் அரசியலே நிச்சயமாக உதவும். அந்த வகையில், அதற்கான மாதிரியையும் முன்னெடுப்பையும் தென்னிந்தியாவே, அதிலும் இவர்களின் கொள்கை அடிப்படைகளே வழங்க முடியும்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்த / கொண்டுவர முயன்ற சில திட்டங்கள் அக்கட்சியின் அடிப்படைச் சித்தாந்தத்துக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. கர்நாடக சட்டமன்றத்தைக் கோமியம் கொண்டு ‘தூய்மை’ப்படுத்தியிருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.
இதுபோன்ற சில சறுக்கல்களைக் கடந்து, பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிரான கருத்தாக்கத்தை மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்து, அதை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டால், 2024இல் தேசிய அளவில் ஒரு மாற்றம் வரும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT