Last Updated : 26 Apr, 2023 06:12 AM

3  

Published : 26 Apr 2023 06:12 AM
Last Updated : 26 Apr 2023 06:12 AM

நொச்சிக்குப்பம்: மீனவர் துயரத்தின் புதிய குறியீடா?

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய ஒரு தொலைக்காட்சி விளம்பரம் வெளியாகியிருந்தது. கடற்கரையில் குப்பைகளும் சில கட்டுமரங்களும் தெரிகின்றன. பின்னணியில் கடற்கரை மாசுபட்டுக் கிடப்பதாக ஒரு குரல்; அடுத்த காட்சியில், அதே கடற்கரை பளிச்சென்று இருப்பதாய்க் காட்டப்படுகிறது; அதில் குப்பைகளுடன் கட்டுமரங்களும் காணாமல்போயிருக்கின்றன. ‘நமது சுற்றுப்புறம் இப்படி இருக்க வேண்டும்’ என்கிறது பின்னணிக் குரல்.

அழகியல் x கவிச்சி: நொச்சிக்குப்பம் மீன் கடைகள் குறித்து 2023 ஏப்ரல் 11 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவுசெய்து எழுப்பிய ஒரு கேள்வி, மீனவர் வாழ்வுரிமை சார்ந்த கவன ஈர்ப்புத் தீர்மானமாக உருவெடுத்திருக்கிறது.

‘மெரினாவை அழகுபடுத்தல்’ என்கிற முழக்கத்துக்குள்ளே ‘அசுத்தம்’, ‘கவிச்சி’ என்பதான மேட்டிமைவாதம் ஒளிந்து நிற்கிறது. தமிழகத்தில் கடற்குடிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருவதும், வரிசைகட்டி நிற்பதுமான பெருந்திட்டங்களின் முத்தாய்ப்பாக இம்மேட்டிமைக் கருத்தியலைக் காணலாம்.

‘வரலாறு என்பது மறதிக்கு எதிராக நினைவு நிகழ்த்தும் போராட்டம்’ என்பார்கள். “வரலாற்றை அடித்தள மக்கள் எளிதில் மறந்துவிடுகிறார்கள்; போராட்டத்தின் படிப்பினைகளைத் தவறவிட்டுவிடுகிறார்கள்.

அரசுகள் மாறினாலும் அரசு இயந்திரம் ஆவண நினைவின் பலத்துடன் அதே தாக்குதல்களை மீண்டும் மீண்டும் மக்களின் மீது நிகழ்த்திக்கொண்டிருக்கிறது” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி (நொச்சிக்குப்பம்). மெரினா போராட்ட வரலாற்றை இங்கு சற்று நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

முந்தைய முயற்சிகள்: 1985 நவம்பர் 3 அன்று, அன்றைய முதல்வர் எம்ஜிஆரின் ‘மெரினா கடற்கரையைஅழகுபடுத்தும் திட்ட’த்தின் கீழ் மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்திக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் கடற்கரைகளில் இருந்த படகுகள், வலைகளைச் சென்னை மாநகராட்சி, இரவோடு இரவாக எடுத்துச் சென்றுவிட்டது.

இதற்கு எதிராக நவம்பர் 5 அன்று காந்தி சிலையருகே மீனவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.கருணாநிதி, மழையில் நனைந்துகொண்டே பேசினார்.

டிசம்பர் 4 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு மீனவர்கள் பலியாயினர். “இன்று மாட்டாங்குப்பம் தொடங்கி நொச்சிக்குப்பம் வரை கடற்கரையில் மீனவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் செய்த ஆறு மீனவர்கள்தான்” என்கிறார் பாரதி.

மலேசியத் தூதரகத்தை அமைப்பதற்காக சீனிவாசபுரம் வரையுள்ள அத்தனை கடற்கரைக் கிராமங்களையும் இடம்பெயர்க்கப் போவதாக 2002இல் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். மீனவர்கள் மீண்டும் போராடினர். பின்னர், “கடற்கரை மீனவர்கள் வாழுமிடம்; அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு எந்தத் திட்டத்தையும் எனது அரசு கொண்டு வராது” என்று அவர் அறிவித்தார். 2005இல் அறிவிக்கப்பட்ட பறக்கும் சாலைத் திட்டமும் மீனவர்களின் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது.

அன்றைக்கு மெரினாவை அழகுபடுத்தும் எம்ஜிஆரின் திட்டத்துக்கு எதிராக மீனவர்களோடு நின்று போராடியவர் கருணாநிதி. இன்றைக்கு அவரது மகன் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் நீதிமன்ற உத்தரவைக் காட்டி, நொச்சிக்குப்பத்தில் மீனவர்களின் மீன் கடைகளை அகற்றும் முயற்சிகள் நடந்ததை எப்படி எடுத்துக்கொள்வது? கூடவே, மீனவர்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து, கருணாநிதியின் சமாதிக்கு நேராகக் கடலுக்குள் ரூ.80 கோடி மதிப்பில் பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதற்கான பூர்வாங்க வேலைகளையும் அரசு தொடங்கியிருக்கிறது.

உரிமைக் குடிகளா, ஆக்கிரமிப்பாளர்களா? - சென்னையின் பூர்வகுடி மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பது, நகரத்தின் வரலாற்றை மறுதலிப்பதாகும். ஒரு மீனவக் குடியிருப்புதான் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக மாறி, இன்றைக்குப் பெருநகரமாக விரிந்து கிடக்கிறது என்பதை மதராசப்பட்டினத்தின் 400 ஆண்டு கால நவீன வரலாற்றை வாசித்தால் புரிந்துகொள்ளலாம்.

சென்னைப் பெருநகரத்தின் ‘வளர்ச்சிப் பசி’க்குக் காவு கொடுக்கப்பட்டது செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் நீர்நிலைகள், பசுமைப்பரப்புகள் மட்டுமல்ல, கடற்கரைகளும், கடற்குடிகளின் நலவாழ்வும்கூடத்தான்.

அரசு இயந்திரம் புரிந்துகொள்ள மறுக்கும் மற்றொரு வரலாற்று உண்மை உண்டு - கடற்குடிகளே நெய்தல் பொதுச்சொத்து வளங்களின் காவலர்களும் பராமரிப்பாளர்களும் ஆவார்கள் என்பதுதான் அது. ஆம்! கரைக்கடலும் கடற்கரையும் அவர்களின் பாரம்பரியப் பயன்பாட்டு உரிமைப் பகுதி ஆகும். 1991 கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கை, இவ்வுரிமையைத் தெளிவாக வரையறுத்திருந்தது. ஆனால், சுனாமி மறுகட்டுமான காலத்தில், ‘கடற்கரை நிலத்துக்குப் பட்டா வைத்திருக்கிறாயா?’ என்று அதிகாரிகள் மீனவர்களிடம் கேட்டனர். கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் சுனாமி மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மீனவர்களின் துயரத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. மீனவர் இடம்பெயர்ப்பு எப்போதுமே துயரக் காவியம்தான்.

நொச்சிக்குப்பத்தில் மீனவர்களுடைய வழமையான, புழங்கு பகுதியைச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுஒவ்வொரு கட்டமாகக் குறுக்கிவிட்டது; எளிமையானவை என்றாலும், பரந்த மணல்வெளியில் அவர்களுடைய வீடுகள் அமைந்திருந்தன. அவை அடுக்ககங்களாகக் குறுக்கப்பட்டன. காலங்காலமாய் மீனவர்கள் புழங்கிவந்த பகுதியில்தான் லூப் சாலை போடப்பட்டது. அச்சாலை, அவர்களின் கடற்கரையைக் கூறுபடுத்தி, சுதந்திரமான தொழில் நடவடிக்கைகளை ஊடறுத்துவிட்டது.

ஆக்கிரமித்தது யார்? - 1996இல், சென்னை மேயராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் நொச்சிக்குப்பம் மக்களின் ஒப்புதலைப் பெற்று, லூப் சாலையில் ஒரு மணிநேரப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். 2006இல் அவர் துணை முதல்வராய் இருந்தபோது அதை இரண்டு மணி நேரமாக நீட்டிக்கவும் அம்மக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்.

கூடாரத்தை ஆக்கிரமித்த ஒட்டகத்தின் கதைபோல, மீனவர் வாழிடத்தில் நுழைந்தவர்கள் இன்று அம்மக்களையே ஆக்கிரமிப்பாளர்களாகச் சித்திரிக்கிறார்கள். இது கடற்கரையிலிருந்து மீனவர்களைப் பூண்டோடு பிடுங்கியெறிவதற்கான மற்றொரு ஒத்திகையாகவே தெரிகிறது.

உண்மையில் ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருப்பது எங்கே? சாந்தோம் சாலையில்! அச்சாலையின் இருபுறமும் 10 அடி அளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சி 2000ஆம் ஆண்டு போட்ட தீர்மானம் ஏன் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை?

இரண்டு பெரிய சிக்கல்கள்: சென்னைப் பெருநகரம் எதிர்கொள்ள வேண்டிய ஆகப் பெரிய சிக்கல்கள் நீர் மேலாண்மையும் கடல் மட்ட உயர்வும்தான். 2015 சென்னைப் பெருவெள்ளப் பேரிடர் அந்நகரத்துக்குச் சில செய்திகளைச் சொல்லிச் சென்றது: மழை வெள்ளத்தின் வழமையான தடங்களையும், அவை சேகரமாகும் ஏரி, குளங்களையும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்காமல் வெள்ள மேலாண்மைக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்காது.

அடுத்த சிக்கல், கடல் மட்டம் உயர்தல். காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழு (ஐ.பி.சி.சி.) விடுத்துள்ள அறிக்கை நமக்கு நிறைய அதிர்ச்சிச் செய்திகளைச் சொல்கிறது. கடல் மட்டம் 25 சென்டிமீட்டர் உயர்ந்தால் போதும், கிழக்குக் கடற்கரை நகரமான சென்னையின் சரிபாதி கடலில் மூழ்கிப்போகும் என்பது அதில் ஒரு செய்தி.

‘சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம்’ என்கிற முழக்கமெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் சென்னையைக் காப்பாற்ற என்ன வழி என்று யோசிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, மெரினாவைப் பன்னாட்டுத் தரத்தில் மேம்படுத்துகிறோம், கோவளம் வரை வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரப் போகிறோம் என்று கடலோடு மல்லுக்கட்டுபவர்களை, அதைச் செயல்படுத்துவதற்காகக் கடலே கதியென்று வாழ்கிற எளிய மீனவர்களை இடம்பெயர்க்கத் தலைகீழாக நிற்பவர்களை நாம் எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

- வறீதையா கான்ஸ்தந்தின் | பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்; தொடர்புக்கு: vareeth2021@gmail.com

To Read in English: Nochikuppam, a new symbol of fisherfolk’s woes?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x