Published : 10 Mar 2023 07:09 AM
Last Updated : 10 Mar 2023 07:09 AM
தெற்கு ஆசியாவுக்கு வெளியே, சாதிப் பாகுபாடுகளுக்குத் தடை விதித்த முதல் நகரமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது அமெரிக்காவின் சியாட்டில். இனம், மதம், பாலினப் பாகுபாடுகளுக்குத் தடை இருப்பதுபோல, சாதிப் பாகுபாடுகளுக்கும் ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் பிப்ரவரி 21 அன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழரை லட்சம் மக்கள் வசிக்கும் இந்நகரத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தெற்காசியர்கள் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சியாட்டில் நகர மன்றத்தில் உறுப்பினராகப் பதவிவகிக்கும் இந்திய-அமெரிக்கப் பெண்மணியான ஷாமா சாவந்த் முன்மொழிந்த சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதும், அவை உறுப்பினர்கள் ‘ஜெய்பீம்’ என்று முழங்கி ஆரவாரம் செய்துள்ளனர்.
தெற்காசியச் சமூக மக்களிடையே சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகளவில் கடைப்பிடிக்கப்படுவதாக, National Academic Coalition for Caste Equity and Equality Labs என்கிற அமைப்பு, 2018 இல் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடைய குடும்ப உறவுகளை விட்டுவிட்டுச் சென்றாலும் சாதி உறவுகளையும் அதன் அடிப்படையில் அமைந்துள்ள பாகுபடுத்தும் பண்பாட்டையும் கைவிடத் தயாராக இல்லை என்பது சியாட்டில் புதிய சட்டத்தின் மூலம் புலப்படுகிறது. அதனால்தான் சாதி என்றால் என்னவென்றே தெரியாத நாடுகளில்கூட, சாதிப் பாகுபாடுகளுக்குத் தடைவிதிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
அயல்நாடுகளின் சூழல்: பத்தாண்டுகளுக்கு முன்பே (10 அக்டோபர் 2013), ஐரோப்பிய நாடாளுமன்றம், சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகக் கடுமையான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ‘ஒருங்கிணைந்த ஐரோப்பிய நாடுகளில் சாதிப் பாகுபாடுகளை ஒழிக்க முன்னுரிமை வழங்கப்படும்.
தீவிரப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும். உலகின் மிக மோசமான மனித உரிமைச் சிக்கல்களில் முதன்மையானது சாதிப் பாகுபாடே ஆகும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் இதை முறியடிக்க முக்கியப் பங்காற்றும்’ என்கிறது அந்தத் தீர்மானம்.
இந்தியாவில் அரசுத் துறைகளில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் கோலோச்சுவதால், தலித் மக்கள் மீதான பாகுபாடுகளுக்கு நீதி கிடைப்பது மிக அரிது; 4-5% குற்றவாளிகளே தண்டிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படும் பெரும்பாலானோர் நீதியைப் பெற பெரும் பொருள்செலவு செய்து, நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அயல்நாடுகளில் அந்தச் சூழல் இல்லை என்பதால், சாதிப் பாகுபாடுகளுக்கு இரையாகும் தலித் மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பலாம்.
சாதி எனும் நச்சுக் கருத்தியல்: இனம், பாலினம், மொழி, வட்டாரம், சாதி ஆகியவற்றின் பெயரால், ஐந்து விதமான பாகுபாடுகள் உலகில் உள்ளன. பல்வேறு இனங்கள், பாலினங்கள் இருப்பதை எளிதில் கண்டுணர முடியும். வட்டாரப் பாகுபாடும் வெளிப்படையானது. மொழியைக் காண முடியாதென்றாலும், கேட்க முடியும். ஆனால் சாதியைக் காண முடியாது; கேட்க முடியாது; உணரவும் முடியாது.
ஏனெனில், அதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனாலும் சாதி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கிறது. அது, இந்தியாவில் பிறப்பவர்களிடையே மதப் பண்பாட்டின் மூலம் பன்னெடுங்காலமாகத் திணிக்கப்பட்டுவரும் ஒரு நச்சுக் கருத்தியல்.
மேலும், ஒவ்வொரு சாதியும் ஓர் இனம் என்று பரவலாக ஒரு கருத்து இங்கு ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை அம்பேத்கர் விளக்குகிறார்: “இந்திய இனங்கள் தமக்குள் ரத்தத்திலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்ததற்கு நெடுங்காலத்துக்குப் பின்னர்தான் சாதி அமைப்பு நடைமுறைக்கு வந்திருக்கிறது.
சாதிப் பாகுபாட்டை இனப் பாகுபாடாகச் சொல்வதும் பல்வேறு சாதிகளும் பல வேறுபட்ட இனங்களே எனக்கொள்வதும் உண்மைகளை அப்பட்டமாகத் திரித்துக் கூறுவதே ஆகும்.’’
பிறகு எதன் அடிப்படையில் இன்றளவும் இந்நாட்டின் தொல்குடி மக்களான 20 கோடிப் பேர் ஊருக்கு வெளியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்? இந்தியாவில் ஓரளவேனும் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடுகளும் அரசுப் பதவிகளும் பொருளாதாரத் திட்டங்களும் கல்வி மேம்பாடும் நிலப்பங்கீடுகளும் சட்டப் பாதுகாப்புகளும் தலித் மக்களின் வாழ்வாதாரத்தைச் சற்று மேம்படுத்தியிருக்கலாமே தவிர, அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பிறவி இழிவை ஒழித்துவிடவில்லை.
இந்திய அரசு என்ன செய்தது? - 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 20 கோடியே 10 லட்சம் தலித் மக்கள் உள்ளனர். தலித் கிறித்துவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட 12 கோடிப் பேரையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 32 கோடியாகிறது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உள்ள மக்கள் நாள்தோறும் சாதிப் பாகுபாடுகளால் சந்திக்கும் வன்கொடுமைகள் உலக அரங்கில் எதிரொலிக்கவில்லை.
‘உலக அரங்குகளில் இனவெறி பற்றி விவாதிக்கப்படுவது போல சாதி வெறியும் விவாதிக்கப்பட வேண்டும்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, 2001இல் ஐநா சார்பில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டர்பன் மாநாட்டில் நூற்றுக்கணக்கான தலித் இயக்கங்கள் பங்கேற்றன.
இருப்பினும், ‘இது உள்நாட்டுப் பிரச்சினை; எனவே இதை விவாதிக்க முடியாது’ என இந்திய அரசு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்திய நாடாளுமன்றத்திலும் இது குறித்து விவாதிக்க முன்வரவில்லை. 131 தலித் மற்றும் பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கரின் ஆதங்கம்: சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான குரல் உலகளவில் ஒலிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை அம்பேத்கர் மேற்கொண்டார். 1951இல் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது அதை ஆதங்கத்தோடு அவர் குறிப்பிட்டார்: ‘பட்டியல் சாதியினருக்கு அரசமைப்புச் சட்டரீதியான பாதுகாப்புகள் குறித்த நேர்வில் தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளிலிருந்து ஆங்கிலேயர்கள் பின்வாங்கிவிட்டனர்.
மேலும், தங்களுக்காக அரசியல் நிர்ணய அவை என்ன செய்யும் என்பது குறித்துப் பட்டியல் சாதியினர் எதையும் அறிந்திருக்கவில்லை. கவலையளித்த அந்தக் காலகட்டத்தில் ஐநா அவைக்கு வழங்குவதற்காக, பட்டியல் சாதியினர் நிலை குறித்து ஓர் அறிக்கையை நான் தயாரித்திருந்தேன். ஆனால், அதை நான் ஐநா அவையில் சமர்ப்பிக்கவில்லை.
ஏனெனில், அரசியல் நிர்ணய அவையும் வருங்கால நாடாளுமன்றமும் இது குறித்து ஒரு முடிவுக்கு வரும்வரை காத்திருப்பது உகந்தது என்று உணர்ந்தேன். பட்டியல் சாதியினரின் நிலையைப் பாதுகாப்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் எனக்கு நிறைவை அளிக்கவில்லை.
இருப்பினும் அரசாங்கம் அவற்றைப் பயனுறுதியுடையதாக்க ஓரளவாவது முயற்சி செய்யும் என்ற நம்பிக்கையில் அவற்றை ஏற்றுக்கொண்டேன். ஆனால், பட்டியல் சாதியினரின் நிலை பழைய வகையிலேயே இருக்கிறது.
அதே கொடுங்கோன்மை, அதே பாகுபாடு காட்டும் நிலை ஆகியவை முன்னர் இருந்ததுபோலவே இன்றும் இருந்துவருகின்றன; சொல்லப்போனால் மிக மோசமான முறையில் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் போலக் கொடூரமான முறையில் வேதனைகளைச் சந்திக்கும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று வியப்புடன் நோக்கினேன். வேறு எவரையும் என்னால் காண முடியவில்லை.
இருப்பினும் பட்டியல் சாதியினருக்கான உதவிகள் எதுவும் ஏன் இன்றளவும் வழங்கப்படவில்லை?’ நாடாளுமன்றத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் அம்பேத்கரின் உருவச் சிலை இந்தியர்களின் மனசாட்சியை நோக்கி எழுப்பும் கேள்விக்கு விடையளிக்கத்தான் எவருமில்லை!
- புனித பாண்டியன் | ‘தலித் முரசு’ ஆசிரியர்; தொடர்புக்கு: dalitmurasu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT