Published : 10 Jan 2023 06:51 AM
Last Updated : 10 Jan 2023 06:51 AM
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சி, இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் மனசாட்சியுள்ள எவரையும் உலுக்கி எடுத்திருக்கும். குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து, பட்டியலின மக்களின் மீதான வெறுப்பை, வக்கிரத்தை வெளிப்படுத்திய மனிதர்களின் செயல் நாம் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது. 21ஆம் நூற்றாண்டில், உலகமயம், நவீனமயம், உலகம் ஒரே குடையின்கீழ் என்கிற நிலையில்தான் குடிநீரில் மலத்தைக் கலந்து சாதிக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறது தமிழ்ச் சமூகம்.
தொடரும் அவலங்கள்: வேங்கைவயலில் நடந்த சம்பவம்தான் தமிழ்நாட்டுக்குப் புதிது என்று சொல்ல முடியாது. இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒன்று என தமிழகத்தின் ஏதாவது ஒரு கிராமத்தில் சாதிரீதியிலான இழிவுகள் அரங்கேறிவருகின்றன என்பது நிதர்சனமான உண்மை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியப் பள்ளியில் பட்டியலினத்தவர் சமையலராகப் பணியாற்ற முடியவில்லை.
தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்குப் பெட்டிக்கடைக்காரர் தின்பண்டம் விற்க மறுத்திருக்கிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை, ‘நீ எந்த கம்யூனிட்டி?’ என்று கேட்டு மாணவர்களைத் தரக்குறைவாக நடத்தியிருக்கிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அருகிலுள்ள பாலக்கரை கிராமத்துப் பள்ளியின் கழிப்பறையைப் பட்டியலின மாணவர்களை மட்டும் வைத்து ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் புவனகிரிக்கு அருகிலுள்ள தெற்குத் திரட்டைக் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவரை நாற்காலியில் உட்கார அனுமதிக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தின் பள்ளி ஒன்றில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. ஓர் ஊராட்சி மன்றத் தலைவி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட கோயிலுக்குள் நுழைவதற்கு, 70 ஆண்டுகளாகப் பட்டியலின மக்கள் தொடர் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டியலினத்தவருக்கு முடிவெட்ட முடியாது என்று சலூன் கடைக்காரர் மறுத்திருக்கிறார். இப்படியான சம்பவங்கள் பொது கவனத்துக்கு வந்தவை. வெளியே வராதவை இன்னும் ஆயிரமாயிரம் இருக்கும்.
சாதிய வன்மம்: இந்தச் செய்திகள் எல்லாம் சிறுகதைகளில், நாவல்களில் படித்தவை அல்ல; ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் நடந்தவையும் அல்ல, கடந்த ஓராண்டுக்குள் நடந்தவைதான். பட்டியலின மக்களின் மீது நடத்தப்படும், நாகரிகமற்ற செயல்கள் அனைத்தும் ‘ஊர்க் கட்டுப்பாடு, சாதிக் கட்டுப்பாடு, சாதிப் பெருமை’ என்கிற பெயரில் நடக்கின்றன. இந்தச் சொற்கள் அனைத்துமே தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள, சமாதானப்படுத்திக்கொள்ள, வெளியில் சொல்லப்படுகிற வார்த்தைகள். தமிழ்நாட்டில், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதி சார்ந்த பெருமிதங்கள் இருக்கிற அதேநேரத்தில், சாதி சார்ந்த இழிவுகளும் இருக்கின்றன.
‘நான் சாதி பார்ப்பதில்லை’, ‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’, ‘எல்லாம் மாறிவிட்டது’ என்பதும், ‘முன்புபோல் இல்லை’ என்பதும், ‘இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா?’ என்று கேட்பதெல்லாம் தேர்ந்த நடிகர்களின் வார்த்தைகள். அவை ஒருவிதத்தில் அருவருப்பானவை. தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கிற நாம் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் சாதியவாதிகளே. சாதிய வன்மம் நிறைந்தவர்களே.
தமிழ்நாட்டில் இருக்கிற தனித்தனிச் சுடுகாடுகளும், தனித்தனிப் பள்ளிக்கூடங்களும், தனித்தனி நடைபாதைகளும், தனித்தனியான வசிப்பிடங்களும், வழிபாட்டு இடங்களும், ரேஷன் கடைகளும் எதைக் காட்டுகின்றன? இன்று தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சாதி அடையாளமாகக் கையில் வெவ்வேறு விதமான நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டு வருகிறார்கள்.
பட்டியலின மாணவர் பிற சாதிக்குரிய நிறத்தில் கயிறு கட்டிக்கொண்டு வந்தால், ‘எங்க சாதிக்குரிய கயிற்றை நீ எப்படிக் கட்டலாம்?’ என்று கேட்டு வம்பு வளர்க்கிறார்கள். அதனால் பள்ளியில், கல்லூரிகளில் மாணவர்களிடையே மோதல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் கல்விச் சூழலையே கெடுக்கின்றன. ஒருவகையில் கல்விச் சூழலின் சீர்கேட்டையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சாதிக்கு இன்ன நிறக் கயிறு என்று யார் தீர்மானித்தது?
வலுவில்லா எதிர்வினைகள்: வேங்கைவயலில் நடந்த சம்பவங்கள் போன்று தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் நடக்கின்றனவோ அப்போதெல்லாம் ஆவேசமாகப் பேசுவதும், வீரியமாக எழுதுவதும் நடக்கின்றன. அதோடு எழுத்தாளர்களின், சமூகச் சிந்தனையாளர்களின், சமூகச் செயல்பாட்டாளர்களின், சமூகப் போராளிகளின் அறச்சீற்றம் முடிந்துவிடுகிறது. பிறகு, அடுத்த சம்பவம் எப்போது நடக்கிறதோ அப்போது மட்டுமே சமூகப் போராளிகளின் அறச்சீற்றத்தின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
பிறகு, அடுத்த சம்பவத்துக்காகக் காத்திருக்கத் தொடங்கிவிடுகிறது. தமிழகத்தில் நடக்கிற சாதி சார்ந்த இழிவுகள் தமிழ்ச் சமூகம், படித்த, நாகரிகமிக்க சமூகம் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. அதோடு நம்முடைய கல்வியும் நாகரிகமும் தோற்றுப்போன இடத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. கல்வி நம்மைப் பண்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
வேங்கைவயல் கிராமத்திலும் பிற இடங்களிலும் நடக்கக்கூடிய சம்பவங்களின் மூலம் ‘நல்ல பட்டியலினத்தவராக இருங்கள்’ என்று சொல்வதுதான் தமிழ்ச் சமூகத்தின் உளவியலாக இருக்கிறது. அதாவது, ‘கட்டுப்பட்டு இருங்கள். இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்’ என்பதுதான்.
விடையில்லாக் கேள்வி: கீழ்வெண்மணியில் நடந்த கொடூரம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் தொடர்பாக நடந்த சம்பவங்கள், உத்தப்புரம் சாதிச்சுவர், தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கொளுத்தப்பட்டது, திண்ணியத்தில் வாயில் மலத்தைத் திணித்தது போன்ற விஷயங்கள் இன்றைக்கு மாறிவிட்டன, ஒழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்ல முடியாது.
பட்டியலின மக்களின் மீதான வன்மங்கள் வேறுவேறு வடிவங்களில் இன்றும் தொடரத்தான் செய்கின்றன; இனி தொடராது என்றும் சொல்வதற்கில்லை. பட்டியலின மக்களின் மீதான சாதிய ஒடுக்குதல்கள், வெறியாட்டங்கள் நடக்கும்போதெல்லாம் அரசு இயந்திரமும் சட்டமும் செயல்படத்தான் செய்கின்றன. அரசும் சட்டமும், சாதிய இழிவுகள் ஏற்படாமல் தடுக்க முயல்கின்றன.
ஆனால், தோற்றுப்போகின்றன. சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் ‘சாதி சார்ந்த குற்றங்கள்’ அதிகரித்தவாறே இருக்கின்றன. காரணம், சமூகத்தின் மனம் மாறவில்லை. சமூகத்தில் சாதி சார்ந்த உளவியல் மாறவில்லை. அது மாறும்போதுதான் தமிழகத்தில் சாதி சார்ந்த கொடூரங்கள் குறையும். சமூகத்தில் மனமாற்றம் நிகழாமல், சிந்தனை மாற்றம் நிகழாமல், சாதி சார்ந்த பெருமிதங்களும் இழிவுகளும் குறையாது.
‘எல்லோரும் சமம்தானே டீச்சர்?’ என்று ஒரு மாணவன் தன் ஆசிரியரிடம் கேட்டான். இந்தக் கேள்விக்குத் தமிழ்ச் சமூகம் எப்போது பதில் சொல்லும்?
- இமையம் எழுத்தாளர்,தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com
To Read in English: The spectre of casteism: Which century are we living in?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT