Published : 16 Nov 2022 06:49 AM
Last Updated : 16 Nov 2022 06:49 AM
மனிதர்கள் மட்டுமே சாலையில் விபத்துக்குள்ளாவது இல்லை; விலங்குகளும் விபத்துக்குள்ளாகின்றன. சாலையில் அடிபடும் விலங்குகள் அடுத்தடுத்து விரையும் வாகனங்களால் அங்கேயே பலியாகி, சாலையோடு நசுங்கிப்போகும் சம்பவங்கள் பரவலாகிவிட்டன. ரயில் தண்டவாளங்கள், சாலைகள் ஆகியவற்றைக் கடக்க முற்பட்டு, விபத்துக்குள்ளாகி இறக்கும் விலங்குகளை முகச்சுளிப்புடன் கடந்து செல்கிறோமே தவிர, அடிபட்ட அவற்றைக் காப்பாற்றப் பெரிதாக யாரும் முன்வருவதில்லை. இறந்துவிட்ட விலங்குகளை அப்புறப்படுத்துவதும் பெரும்பாலும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு வர்க்கத்தினர் மீது சுமத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சாலையில் அடிபட்டு இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றனவா குறைகின்றனவா என்பது பொதுமக்களின் கவனத்துக்கு வராத ஒன்றாகவும் இருக்கிறது.
ஆதரவற்ற பெண் நாய்க் குட்டிகளைத் தத்தெடுக்கும் இளைஞர், சாலையில் அடிபட்டு இறக்கும் விலங்குகளை அடக்கம் செய்யும் சமூக ஆர்வலர், தெரு நாய்களுக்கு உணவிடும் மனிதர், சாலையோரம் பிரசவ வலியால் துடித்த பசுவுக்குப் பிரசவம் பார்த்தவர், சாலையில் அடிபட்ட குரங்குக்கு உயிர்க்காப்புச் சிகிச்சை அளித்து உயிரை மீட்ட நபர் என சமூக வலைதளப் பக்கங்கள் விலங்குகள் பற்றிய காணொளிகளால் நிறைந்துள்ளன. எல்லோருக்கும் இது சாத்தியமில்லை எனினும், அடிபட்ட விலங்குகளின் முதலுதவியை அனைவரும் கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் முயல்வது அவசியம்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழகத்தில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அது மாவட்டத்துக்கு ஒன்று என விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், இது போதுமானதாக இல்லை என்கிற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் எனக் கால்நடை - மீன்வளப் பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அது விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். சாலையில் அடிபடும் விலங்குகளை அப்படியே விட்டுவிடாமல், அவை உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டெனில், கால்நடை ஆம்புலன்ஸின் இலவச அழைப்பு எண்ணை (1962) அழைக்குமளவுக்கு அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக்கப்பட வேண்டும். விலங்குகள் நடமாடும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகளுடன் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட வேண்டும். சாலையில் விபத்துக்குள்ளாகும் விலங்குகளைக் காப்பாற்றுவது குறித்த அரசு சார்பிலான விழிப்புணர்வுக் குறும்படங்களும் மாணவர்கள் மனதில் பதியும் வகையிலான கலைப் போட்டிகளும் பாடத்திட்டங்களும் கொண்டுவரப்பட வேண்டும். உரிமையாளர் இல்லாமல் சாலையோரம் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அவற்றை முறைப்படுத்தும் திட்டத்தையும் மேம்படுத்த வேண்டும். - யுவராஜ் மாரிமுத்து, மின்னஞ்சல் வழியாக...
கலையின் ‘அரசியல்’!
தமிழ் ஆடற்கலையான பரதநாட்டியத்தை அரச சபைகளிலும், கோயில் விழாக்களிலும் பாரம்பரியமாக ஆடிவந்த கலைஞர்களை இழிவானவா்களாகவும், பரதக் கலையே நீசமானது எனவும் பொதுச் சமூகத்தில் கட்டமைத்தவா்கள், பின்னா் மேல்தட்டு வர்க்கத்தைச் சாா்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கானதாகச் சொந்தம் கொண்டாடச் செய்ததிலும், நாட்டிய சாஸ்திரம், பரத முனிவா் என்றெல்லாம் இட்டுக்கட்டி பரதநாட்டியத்தைச் சம்ஸ்கிருதத்துடன் இணைத்துக் கருத்துருவாக்கம் செய்ததிலும் உள்ள நுண்ணரசியலைத் தோலுாித்துக் காட்டியுள்ள நிருத்யா மிகுந்த பாராட்டுக்குரியவா். ஆடற்கலை மூலம் அவர் நிகழ்த்தும் அரசியல் செயல்பாடுகள் இசைக்கலை, பாடற்கலை அனைத்தையும் மீட்டெடுக்க வாழ்த்துகள்! - பாலுச்சாமி, மின்னஞ்சல் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT