Published : 18 Oct 2022 06:50 AM
Last Updated : 18 Oct 2022 06:50 AM
சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் திரைப்படம் ஒன்றின் வரவு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஐந்து மொழிகளில் 5,500 திரையரங்குகளில் உலகம் முழுவதும் ஒரே நாளில் வெளியானது. இந்தப் படமும் பெயரும் வரலாறு குறித்த ஒரு மீள் ஆய்வைக் கோருகின்றன. ‘பொன்னி’ என்பது காவிரி நதியின் மற்றொரு பெயர். சண்டேசுவர நாயனார் ‘பெரியபுராண’த்தில் காவிரியைப் ‘பொன்னி’ என்றழைக்கிறார். மூன்றாம் குலோத்துங்க சோழனும் தனது பட்டயங்களில் காவிரிக்குப் ‘பொன்னி’ என்று பெயரிட்டுள்ளார். கார்பன்-14 கால நிர்ணய முறையிலும் செயற்கைக்கோள் நிழற்படங்கள் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுச் சோதனைகளிலும் காவிரியின் வயது சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகள் எனக் கணக்கிடப்படுகின்றது. காவிரியின் இப்போதைய வடிவம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குள் பெறப்பட்டதுதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘பொன்னியின் செல்வன்’ என்பது அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜ சோழனைக் குறிக்கிறது. ராஜராஜனுக்கு முன்பே காவிரி பிறப்பெடுத்து ஓடத் தொடங்கிவிட்டது. ராஜராஜன் அடையாளப்படுத்தும் பிற்காலச் சோழப் பேரரசு, பொ.ஆ. (கி.பி) 9 ஆம் நூற்றாண்டில் கொடிகட்டிப் பறந்தது; பொ.ஆ. 1115இல் உச்சத்தில் இருந்தது. எனினும் காவிரியோடு தொப்புள்கொடிச் சொந்தம் கொண்டவர்கள் முற்காலச் சோழர்களே. நெய்தலங்காலத்து இளஞ்சேட்சென்னி, சேட்சென்னி, நலங்கிள்ளி, கிள்ளிவளவன், முதலாம் மற்றும் இரண்டாம் கரிகாலன்கள் என இவர்களிலும் ஒரு நீண்ட வரிசை உண்டு. பொ.ஆ.மு. (கி.மு) 60 முதல் பொ.ஆ.மு. 10 வரை இவர்களின் காலத்தை ஆய்வுகள் வரையறுக்கின்றன. பொங்கிப் பிரவாகமெடுத்த காவிரியில் அணை கட்டியவன் இரண்டாம் கரிகாலன் என்போர் உண்டு.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் தொல்பொருள் அகழாய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது உண்மைதான். எனினும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி சுட்டிய திசையில் இந்த ஆய்வுகள் இல்லை என்பதும் உண்மை. கருணாநிதி ‘ரோமாபுரிப் பாண்டியன்’ என்ற நவீனத்தை எழுதினார். 1939இல் எழுதிய ‘செல்வச் சந்திரா’ என்ற கதையில் ‘நீர்வளம், நிலவளம் தங்கிய திராவிட நாட்டின் கண் காவிரிப்பூம்பட்டினம் என்னும் நகரில்’ என்ற வரிகளை நினைவுகூர்கிறார். பாபிலோனிய நாகரிகம், போனீசிய நாகரிகம், கிரேக்க மற்றும் எகிப்து நாகரிகங்களின் முன்னோடியாக புகார் நாகரிகத்தை வரிசைப்படுத்துகிறார். மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம், நாளங்காடி என்ற நகர அமைப்புகளும் இலவந்திசைச் சோலை, உண்ணாவனம், சம்பாபதி வனம், உவவனம் ஆகிய சோலைகளும் வெள்ளிடை மன்றம், பாவை மன்றம், நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், கொற்றைப்பந்தல் போன்ற மன்றங்களும் பூம்புகாரில் இடம்பெற்றதைப் பற்றி தொன்மை இலக்கியங்கள் பேசுகின்றன.
பொன்னி நதிக்கரையின் தொன்மை நாகரிகத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்பது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சொல்லும் மற்றொரு செய்தி. இந்திய வரலாற்றைப் பல்லாயிரம் ஆண்டுகள் விரிவாக்கும் சான்றுகள் கடலடியில் கிடைத்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் நிலப்பகுதி ஒட்டுமொத்தமும் ஒரே கண்டமாக இருந்ததாக ஜெர்மானிய அறிஞர் ஆல்பிரட் லோதர் வெகனர் 1912இல் கூறினார். இமயமலை இப்போதிருக்கும் இடமும் அப்போது கடல்தான்; அரபிக் கடலும் வங்கக் கடலும் அப்போது இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. ஒருகாலத்தில் மனிதன் வாழ்ந்த நிலம் இன்று கடலாகிவிட்டது. அந்தக் கடல் அடிதான் மனிதகுலத்தின் தொட்டில் என்பது அறிஞர்களின் கூற்று.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்த நிலத்தடி ஆய்வுகளைவிட நீரடி ஆய்வுகள்தான் இப்போது அதிகம் தேவைப்படுகின்றன. நிலத்தடி ஆய்வுகளிலே இறுமாந்து கிடக்கிற ஒரு போக்கு எங்குமே உள்ளது. கடலியலுக்கான இந்திய தேசிய நிறுவனம், தமிழக அரசின் தொல்லியல் கடலாய்வு, உலகக் கடலடி ஆணையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பயணித்தால் மனிதகுல வரலாற்றில் இதுவரை எழுதப்படாத புதிய பக்கங்கள் இயற்றப்படும். கடல் விழுங்கி அழிந்த பூம்புகாரின் தடயம் 6 கி.மீ. வரை கடலில் உள்ளதாகத் தமிழக அரசின் தொல்லியல் துறை கூறுகிறது.
இந்தியாவில் முதல் கடல் அகழாய்வு 1981இல் குஜராத்தில் துவாரகையில் நடத்தப்பட்டது. அதற்குப் பத்தாண்டுகள் கழித்து 1991இல் பூம்புகாரில் கடலடியில் அகழாய்வு நடந்தது. காவிரி கடலுடன் கலக்கும் இடத்தில் பூம்புகாரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பல திருப்பங்களை உருவாக்கின. ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், பிராமி எழுத்துடன் கூடிய சிவப்பு நிறப் பானை ஓடுகள், விலை உயர்ந்த கற்கள், செப்பு சதுரக் காசுகள், உடைந்த கப்பல்கள், கட்டிடச் சிதைவுகள், முட்டை வடிவக் கட்டிடங்கள், செம்புரான் கற்கள், சாம்பல் நிறப் பானை ஓடுகள், செங்கல், கருங்கல் கட்டிடப் பகுதிகள், படகுத் துறைகள், செங்கல் தளங்கள், 18 ஈயக்கட்டிகள், வெடிமருந்துப் பெட்டி, பீரங்கி முதலியவை இருந்த ஐரோப்பிய காலக் கப்பல் எனக் கடல் புதிய அடையாளங்களைக் காட்டியது. இந்த ஆய்வுகள் பாதியில் நிற்கின்றன. கடல் அகழாய்வு என்பது பெரும் நிதி தேவைப்படக்கூடிய ஒன்றுதான்.
புவி தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதில் பரிணாம வளர்ச்சியுற்ற மனிதன் தோன்றி சில லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. எனினும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தொன்மையும் நாகரிகமும் கடலின் அடி ஆழத்தில் கும்மிருட்டில் கிடக்கிறது. பொன்னி நதிக் கரையில் புகார் உள்ளிட்ட கடல் பகுதிகளில் நடத்தப்படக் கூடிய ஆய்வுகள் பல திடுக்கிடுதல்களையும் பெருமிதங்களையும் தரும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. அரசு வெளிச்சம் பாய்ச்சுமா?
வெ.ஜீவகுமார்
வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: vjeeva63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT