Published : 09 Sep 2022 06:34 AM
Last Updated : 09 Sep 2022 06:34 AM

சுதந்திரச் சுடர்கள் | கல்வி: மறுக்கப்பட்டோருக்கான கல்வித் திட்டங்கள்

நந்தன்

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியக் கட்டுமானத்தின் கீழ்நிலையில் ஒடுக்கப்பட்டுவந்த பட்டியலினத்தவர்களும் மலைப் பகுதிகளில் வாழ்ந்ததால் பட்டியல் பழங்குடியினரும் கல்விரீதியாகப் பெரிதும் பின்தங்கியிருந்தனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட அரசமைப்பின் வழிகாட்டு நெறிகளில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்குமான உரிமையைப் பெற்றவர்களாக அங்கீகரிக்கிறது. அரசமைப்பின் கூறு 46, பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு கல்வி -பொருளாதார வாய்ப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும் என்கிறது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையம், தேசிய கல்விக்கொள்கைகள் உள்ளிட்டவை வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் கல்வியைக் கொண்டுசேர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறுவதற்கு கல்வி இன்றியமையாதது என்பதை அங்கீகரித்தன.

குறிப்பாக தேசிய கல்விக்கொள்கை 1986 பட்டியல் பிரிவினர், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை முன்மொழிந்தது. இதன் அடிப்படையில் பட்டியல் பிரிவினர், பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வி) இயக்கத்தின் கீழ் இந்த இரண்டு பிரிவினரும் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டன. பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்காக கல்வி உதவித்தொகை அளிப்பது, உயர்கல்வி ஊக்கத்தொகை ஆகியவை பட்டியல் பிரிவினருக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவருகின்றன.

மத்திய அரசு, அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் அளவு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 73%. இதில் பட்டியலினத்தவருக்கான விகிதம் 66%, பழங்குடியினருக்கான விகிதம் 59%. பன்னெடுங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி வழங்க அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஓரளவு பலன் அளித்துள்ளன என்றாலும், இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருப்பதையே இந்த எளிய புள்ளிவிவரம் உணர்த்துகிறது.

இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாகப் பின்பற்றாததால் உயர் கல்வியிலும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணிகளிலும் இவ்விரு பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குற்றச்சாட்டும் களையப்பட வேண்டியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x