Published : 16 Aug 2022 07:37 AM
Last Updated : 16 Aug 2022 07:37 AM
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இலக்கியத்தின் பங்களிப்பும் கவனம் கொள்ளத் தக்கது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்னும் ஒருமைப்பாட்டை விதைத்து அதன் மூலம் இந்திய விடுதலை என்னும் சிந்தனையின் கீழ் மக்களைத் திரட்டப் பாடல்கள் ஒரு காரணியாக இருந்தன. அந்த வகையில் மகாகவி பாரதியார், முக்கியமானவர்.
பாரதியின் கவிதைகள், தமிழ் உலகுக்கு தமிழையும் தேசிய உணர்வையும் ஊட்டக் கூடியதுமாக எல்லாத் தரப்பினராலும் இன்றைக்குக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சுதந்திரத்துக்கு முன் பாரதியின் கவிதைகள் ஒரு தீவிரவாதச் செயற்பாட்டாளரின் எழுத்துகள் என்ற ரீதியில்தான் பார்க்கப்பட்டன.
அதனால் அவர் பெரும் வேதனைப்பட்டார். பாரதியின் பாடல்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது பாடப்பட்டு, எழுச்சி ஊட்டப் பயன்படுத்தப்பட்டன. அதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளார்கள், அவரது பாடல்களுக்குத் தடைவிதித்தனர். பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட பாண்டிச்சேரியில் பாரதி தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிவந்தது.
அவரது தேசிய உணர்வுமிக்க பாடல்கள் இன்றும் மிகப் பிரபலம். தேச விடுதலையின் மீது பிடிப்பைக் கொண்டிருந்த பாரதி, தன் கவிதைகளில் அதை வெளிப்படுத்தினார். ‘வந்தே மாதரம்’ என்கிற பாட்டில் அன்றிருந்த இந்திய மக்கள் தொகை முப்பது கோடியைக் குறிப்பிட்டு ‘இந்திய மக்கள்’ எனப் பொதுமைப்படுத்தியிருப்பார்.
'மன்னும் இமயமலையும் இன்னறு நீர்க்கங்கையும் எங்கள் பாரத நாட்டினுடையது' என ’எங்கள் நாடு’ பாடலில் உரிமை பாராட்டுகிறார் பாரதி. ‘முப்பது கோடி முகமுடையாள்/ உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என ‘எங்கள் தா’யில் இந்தியாவை ஒரு தேவியாக்கி வர்ணிக்கிறார்.
‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்/முழுமைக்கும் பொது உடைமை/ஒப்பிலாத சமுதாயம்/உலகத்துக்கொரு புதுமை’ எனத் தனித்துவமான சுதந்திர இந்தியத் துணைக்கண்டத்தைப் பற்றி பாரதி முன்பே முன்னுணர்ந்து எழுதினார். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே மகாகவி பாரதி சுதந்திரப் பள்ளுப் பாடியுள்ளார். தாயின் மணிக்கொடி பறப்பதையும் சிலாகித்துள்ளார்.
இந்தியாவில் மலரவிருக்கும் ஜனநாயக அரசு அமைப்பைப் பற்றி ’எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை/எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதி சுதந்திர இந்தியாவை வரவேற்றும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவுக்கு விடை கொடுத்தும் தனித்தனியே இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். சுதந்திர இந்தியாவை வரவேற்கும் பாடல் இன்றைய இளைய தலைமுறைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.
"ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம்
ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!"
- விபின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT