Published : 15 Aug 2022 07:48 AM
Last Updated : 15 Aug 2022 07:48 AM
தென்னாப்பிரிக்காவில் இனவெறி அரசாங்கத்தை எதிர்த்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் போராட்டங்களை நடத்திக்கொண்டிந்த காந்தியை, இந்தியா உற்றுக் கவனித்து வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கும்படி காந்திக்கு கோபால கிருஷ்ண கோகலே அழைப்புவிடுத்தார்.
1915 இல் இந்தியா திரும்பிய காந்தி, ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். 1920இல் அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொண்ட காந்தி, தானே கைராட்டை மூலம் தன் துணிக்கான நூலை நெய்துகொண்டார். காந்தியின் சிந்தனைகளும் செயல்களும் நாடு முழுவதும் சென்றடைந்தன.
ஜலியான்வாலா பாக் படுகொலைகளை எதிர்த்தும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட குறைவான அதிகாரங்களை எதிர்த்தும் ‘ஒத்துழையாமை' இயக்கத்தை காந்தி முன்னெடுத்தார். இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. சட்டத்தை மீறியதற்காக காந்திக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
உணவுக்கு அத்தியாவசியமான எளிய மூலப்பொருளான உப்புக்கு ஆங்கிலேய அரசு வரி விதித்ததை எதிர்த்து, 1930இல் உப்புச் சத்தியாகிரகத்தை அறிவித்தார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 385 கி.மீ. தூரம் நடைபயணத்தை மேற்கொண்டார். அகிம்சை வழியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் மூலம் பெருமளவு மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை 1942இல் ஆரம்பித்தார். காந்தி உள்பட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. புனேயில் உள்ள ஆகா கான் மாளிகையில் காந்தியும் கஸ்தூர்பாவும் சிறை வைக்கப்பட்டனர்.
18 மாதங்களுக்குப் பிறகு கஸ்தூர்பா அங்கேயே மறைந்தார். 1944இல் சிறையிலிருந்து வெளிவந்த காந்தி, இந்தியாவுக்கு விரைவில் சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயே அரசுக்கு ஏற்பட்டிருந்ததை அறிந்தார்.
இந்து, முஸ்லிம் பிரச்சினையை வைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கியது ஆங்கிலேய அரசு. பிரிவினையை காந்தி எதிர்த்தார். 1947இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்து, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குச் சுதந்திரத்தை ஆங்கிலேய அரசு அறிவித்தது.
தன் வாழ்நாளில் ஏராளமான நாள்களைச் சிறையில் கழித்து, உண்ணாவிரதங்களை மேற்கொண்ட போராட்டக்காரரான காந்தி, சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரிவினையால் ஏற்பட்ட வன்முறைகளைத் தடுப்பதற்காக, கண்ணீருடன் போராடிக்கொண்டிருந்தார்.
அகிம்சையையே உயிர்மூச்சாகக் கொண்ட 78 வயது காந்தியை, அவரது கொள்கைகளை வெறுத்த நாதுராம் கோட்சே நாடு சுதந்திரமடைந்து ஐந்தே மாதங்களுக்குள் சுட்டுக் கொன்றார்.
‘அகிம்சை’ என்கிற போராட்ட வடிவத்தை அறிமுகப்படுத்திய காந்தியின் கொள்கைகளை அமைதியை விரும்பும் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
- ஸ்நேகா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT