Published : 12 Aug 2022 08:00 AM
Last Updated : 12 Aug 2022 08:00 AM

சுதந்திரச் சுடர்கள் | ஆட்சி: அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய முதல் அமைச்சரவை

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 அன்று நாட்டின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார்; வெளியுறவுத் துறை, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளைப் பிரதமர் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார்.

அவரைச் சேர்த்து 15 பேர் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். அமைச்சரவையில் நேருவுக்கு அடுத்த நிலையில் வல்லபபாய் படேல் இடம்பெற்றார்; நாட்டின் முதல் துணைப் பிரதமராகச் செயல்பட்ட அவர் உள்துறை, தகவல் ஒலிபரப்புத் துறையையும் கூடுதலாக கவனித்துக்கொண்டார்.

மகாத்மா காந்தியின் ஆலோசனைப்படி, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும், இந்தியாவின் அறிவாளிகள் இடம்பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும் என்று நேரு விரும்பினார்.

அந்த வகையில் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், பார்ஸி சமூகங்களைச் சேர்ந்தவர்களும், தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவரும் முதல் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்றனர்; அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் ராஜ்குமாரி அம்ரித் கவுர்.

சட்ட அமைச்சராக பி.ஆர்.அம்பேத்கர், நிதியமைச்சராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம், தொழில்துறை அமைச்சராக சியாம பிரசாத் முகர்ஜி, கல்வி அமைச்சராக மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

26 ஜனவரி 1950இல் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்படும் வரை, பிரிட்டிஷ் பேரரசின் டொமினியனாக இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக சர் மவுண்ட் பேட்டனும், பிறகு ராஜாஜியும் பதவி வகித்தனர். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார்.

- அபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x