Published : 28 Jul 2022 06:30 AM
Last Updated : 28 Jul 2022 06:30 AM
1990-களில் ஆனந்தை முழுமையான செஸ் வீரராக ரஷ்ய ஊடகங்கள் அங்கீகரிக்கவில்லை. அந்தச் சூழலில்தான், 1991இல் மணிலாவில் நடைபெற்ற போட்டியில் அலெக்ஸி ட்ரீவ் எனும் ரஷ்ய வீரருடன் ஆனந்த் மோதினார்.
எளிதில் வீழ்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 4.5 - 1.5 என்கிற கணக்கில் ட்ரீவை ஆனந்த் வீழ்த்தினார். 1995இல் காஸ்பரோவ் உடன் ஆனந்த் மோதினார். முதல் 8 போட்டிகளைச் சமன் செய்து காஸ்பரோவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
காஸ்பரோவுக்கு ஆனந்த் முடிவுரை எழுதும் நேரம் என்று கருதப்பட்ட சூழலில், காஸ்பரோவ் வீறுகொண்டு எழுந்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றார். காஸ்பரோவும் ஆனந்த்தும் மோதிய 10ஆவது போட்டி செஸ் விளையாட்டின் சிறந்த போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
காஸ்பரோவின் ஓய்வுக்குப் பின்னர் செஸ் உலகில் ஆனந்த்தின் ஆதிக்கம் அசைக்க முடியாததாக மாறியது. 2007இல் உலக சாம்பியன் பட்டத்தை ஆனந்த் வென்றாலும், அந்தப் போட்டி நடைபெற்ற முறை ரஷ்யாவின் கிராம்னிக் உள்ளிட்டோரால் விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்குப் பதில் அளிப்பதுபோல் 2008இல் கிராம்னிக்கை வீழ்த்தி ஆனந்த் உலக செஸ் சாம்பியன் ஆனார். 2012 வரை அந்தப் பட்டத்தைத் தக்கவைத்திருந்தார். செஸ் உலகில் ஆனந்தின் ஆதிக்கம் 2012 வரை தொடர்ந்தது.
2013இல் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘செஸ் உலகின் விந்தைக் குழந்தை’ எனக் கருதப்படும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள முடியாமல் ஆனந்த் தடுமாறினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற அந்தப் போட்டியில், ஆனந்த் தோல்வியடைந்தார்.
2007க்குப் பின்னர் கார்ல்சனை பலமுறை ஆனந்த் வென்றிருக்கிறார் என்றாலும், 2013 முதல் கார்ல்சனே உலக செஸ் சாம்பியனாகத் தொடர்ந்துவருகிறார். அதே நேரம், சர்வதேச செஸ் உலகில் இந்தியாவின் பெயரை உயரத்துக்கு எடுத்துச்சென்றவர் விஸ்வநாதன் ஆனந்த் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கார்போவ் - காஸ்பரோவ்
செஸ் விளையாட்டுக்குத் தேவைப்படும் அனைத்து திறன்களையும் கொண்டவர் அன்றைய ரஷ்யாவின் அனடோலி கார்போவ். அமைதியும் பொறுமையும் அவருடைய அடையாளங்கள். ஆனால், அஸர்பைஜான் நாட்டிலிருந்து சோவியத் யூனியனில் அகதியாகக் குடியேறிய கேரி காஸ்பரோவ் இதற்கு நேரெதிரானவர்.
தன்னிருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்யும் ஆளுமையைக் கொண்டவர் அவர். அமைதியைவிட ஆர்ப்பாட்டத்தையே அவர் விரும்பினார். பொறுமையைவிட அதிரடியே அவருக்கு முக்கியமாக இருந்தது. இந்த இரண்டு ஆளுமைகளுக்கு இடையிலான போட்டிகளும் மோதல்களும் நிகழ்ந்த 7 ஆண்டுகள் செஸ் உலகின் பொற்காலம்.
1975இல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் பாபி பிஷர் போட்டியிட மறுத்த காரணத்தால், அனடோலி கார்போவ் உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டார். இது கார்போவின் தவறில்லை என்றாலும், அதன் காரணமாகச் சற்று ஏளனத்துக்கு ஆளானார்.
அவருடைய திறமைக்கான அங்கீகாரமும் முழுமையான அளவில் அவருக்கு கிடைக்கவில்லை. இந்தப் புறக்கணிப்பின் காரணமாகவோ என்னவோ, கார்போவ் தொடர்ந்து அபார வெற்றிகளைக் குவித்துவந்தார். கார்போவ் அளவுக்கு நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் இல்லையென்றுகூடச் சொல்லலாம்.
வயதில் இளையவரான காஸ்பரோவ் செஸ் விளையாட்டுக்கு வந்த புதிதில், எலியை பூனை வேட்டையாடுவதுபோல காஸ்பரோவை கார்போவ் வேட்டையாடினார். காஸ்பரோவ் தனது செஸ் வாழ்க்கையில் பெற்ற மோசமான தோல்விகள் கார்போவிடம் பெற்றவையே. வேறு எந்த வீரராக இருந்தாலும், மோசமான தோல்விகளுக்குப் பின்னர் செஸ் விளையாட்டை விட்டே விலகியிருப்பார்கள்.
ஆனால், காஸ்பரோவ் தொடர்ந்து போராடினார். தனக்குப் பிடிக்காத பொறுமையையே ஆயுதமாகப் பயன்படுத்தி கார்ப்போவை வீழ்த்தினார். ஆட்டங்களைத் தொடர்ந்து சமன் செய்வதன் மூலம் கார்போவை களைப்படையவைத்து, பின்னர் பொறுமையாக காஸ்பரோவ் வெற்றியடைந்த விதம் கார்போவ் சற்றும் எதிர்பாராதது; செஸ் உலகும் எதிர்பாராத ஒன்றுதான்.
காஸ்பரோவ் – டீப் புளூ
செஸ் விளையாட்டில் கணினியின் நுழைவு 1950-களிலேயே தொடங்கிவிட்டது. செஸ் விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்த அமெரிக்காவின் பாபி பிஷர், 1977இல் கிரீன்ப்ளாட் எனும் கணினியுடன் மோதி அபார வெற்றிபெற்றார். 1980-களின் பிற்பகுதியில்தான் செஸ் விளையாட்டில் கணினிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றது. உலகின் வலுவான வீரர்களைக் கணினிகள் வெல்லத் தொடங்கின.
இருப்பினும், 1996இல் ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய ‘டீப் புளூ’ எனும் கணினிக்கும் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவுக்கும் இடையிலான போட்டியில் காஸ்பரோவ் அபார வெற்றிபெற்றார். மே 11, 1997இல் மேம்படுத்தப்பட்ட ‘டீப் புளூ’ கணினியுடன் காஸ்பரோவ் மோதினார்.
அந்தப் போட்டியில் செஸ் உலகின் அசைக்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்த காஸ்பரோவை ‘டீப் புளூ’ வீழ்த்தியது. உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், போட்டி நடைபெற்ற அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் செஸ் பலகையை வெறித்துப் பார்த்தது பார்வையாளர்களை உறையவைத்தது.
அந்தத் தோல்வியை காஸ்பரோவ் ஏற்றுக்கொள்ள மறுத்தார். போட்டியின் நடுவே கணினியில் மனித உள்ளீடு இருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அதை ஐபிஎம் ஏற்க மறுத்தது. கணினிப் பதிவுகளை வெளியிட வேண்டும் என அவர் வற்புறுத்தினார். அந்தக் கோரிக்கையை ஏற்க ஐபிஎம் அப்போது மறுத்தாலும், பின்னர் அந்தப் பதிவுகளை வெளியிட்டது.
அந்தக் காலத்தில், ‘டீப் புளூ’ கணினியிடம் மோத நான் தயார் என செஸ் உலகிலிருந்து ஒதுங்கியிருந்த பாபி பிஷர் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னரே ஐபிஎம் நிறுவனம் ‘டீப் புளூ’ கணினியைச் செயலிழக்கவைத்துவிட்டது.
- முகமது ஹுசைன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT