Published : 29 May 2022 09:45 AM
Last Updated : 29 May 2022 09:45 AM
சாத்தூரில் மே 20-23 தேதிகளில் நடந்து முடிந்துள்ள தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-வது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ப.ஜீவானந்தம் வளர்த்தெடுத்த, நா.வானமாமலை போன்ற ஆய்வறிஞர்களால் வழிகாட்டப்பட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில மாநாடுகள் கலைஞர்கள், எழுத்தாளர்களைத் தாண்டி ஆய்வுப் புலத்திலும் ஆவலோடு கவனிக்கப்பட்டுவருகின்றன. ஏனெனில், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழின் படைப்பிலக்கியத்திலும் சமூக ஆய்வுகளிலும் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
சாத்தூர் மாநாட்டில், அதே ஊரில் மக்கள் மருத்துவராகக் கொண்டாடப்படும் த.அறம் மாநிலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலக்கியத் துறையிலும் ஆய்வுத் துறையிலும் பேராளுமைகளாக விளங்குபவர்களை வழிகாட்டும் குழுவாகக் கொண்டிருக்கும் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு, கலை இலக்கியத்துடன் அவ்வளவாக நெருக்கமில்லாத ஒரு மருத்துவர் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆகஸ்ட் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை மன்னார்குடி மாநாட்டில், சிபிஐ மாநில நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்வாயினர். இந்த முறை மாநிலப் பொறுப்புகளுக்குக் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்து இயங்கும் அமைப்பு என்றாலும் சித்தாந்தரீதியிலும் நடைமுறைகளிலும் கட்சி அந்த அமைப்பின் மீது செல்வாக்கு செலுத்த முற்படுவதில்லை. மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்ட படைப்பாளர்கள், ஆய்வாளர்களின் பரந்துபட்ட விவாதங்களுக்குக் களமாகவே பெருமன்றம் விளங்கிவந்திருக்கிறது. அதே நேரத்தில், சிபிஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் தேர்தலில் பெருமன்றத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலாளரும் வாக்களிக்கிறார். எனவே, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தமக்கு ஆதரவான ஒவ்வொரு வாக்கையும் சிந்தாமல் சிதறாமல் கைப்பற்ற தற்போதைய நிர்வாகிகள் முயல்வதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. அதன் காரணமாகவே, வழக்கத்துக்கு மாறாகக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாடு நடந்த மூன்று நாட்களிலும் கட்சி நிர்வாகிகள் சாத்தூரிலேயே முகாமிட்டுள்ளனர். இதற்கு முன்பெல்லாம் எழுத்தாளர்கள் சந்திப்பு, விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் என்பதாகவே இந்த மாநாடுகள் நடந்து முடியும். மாநில மாநாட்டுக்கு முன்னதாக, மாவட்ட அளவிலான மாநாடுகள் நடக்கும்போதே தமக்கு ஆதரவானவர்களைப் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பதில் கட்சித் தலைவர்களில் ஒருசிலர் தீவிர ஆர்வம் காட்டியுள்ளனர்.
சிபிஐ மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் மாநில நிர்வாகக் குழுவில் 135 பேர் அங்கம் வகித்துவரும் நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 101 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இத்தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், சாத்தூரில் தற்போது நடந்து முடிந்திருக்கும் மாநாடு, ஆகஸ்ட்டில் நடக்கவுள்ள கட்சி மாநாட்டுக்கான முன்னேற்பாடு என்பதாகவே அர்த்தமாகிறது. இந்த உட்கட்சி அரசியலுக்கு உடன்படாதவர்களுக்கு எதிரான பிரச்சாரங்களையும்கூட ஃபேஸ்புக் பக்கங்களில் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் சிந்தனைப் போக்கை வடிவமைத்த ஒரு பண்பாட்டு அமைப்பு, கட்சி அரசியலுக்குள் சிக்கித் தனது அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்துகொண்டிருப்பது வருத்தத்துக்குரியது.
- தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT