Published : 18 May 2022 02:19 PM
Last Updated : 18 May 2022 02:19 PM
அற்புதம் அம்மாள்... இந்தப் பெயரே ஒரு தனிக் கட்டுரைதான். பத்திரிகை துறையில் உள்ளவர்களில் பலருக்கும் அற்புதம்மாளை பேட்டி எடுக்கவோ, நேரில் சந்திக்கவோ வாய்ப்பு வெகு நிச்சயமாக கிடைத்திருக்கும். எனக்குக் கொஞ்சம் வித்தியாசமாக, ஒரு நாள் மதிய உணவை அவருடன் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.
ஒருநாள் 'இந்து தமிழ் திசை' அலுவலகத்திற்கு வந்திருந்தார் அற்புதம் அம்மாள். எங்களுக்கு மதிய உணவு அலுவலகத்திலேயே தரப்படும். கேன்டீனில் சாப்பாட்டு தட்டுடன் நின்றிருந்த என்னருகில் திடீரென வந்து நின்றார் அற்புதம் அம்மாள். அதுவரை நான் அவரை நேரில் பார்த்ததேயில்லை. "அம்மா வணக்கம்" என்று சொல்ல, ஒரு புன்னகையுடன் "உன் பேரு மா..." என்றார். பெயரைச் சொல்லிவிட்டு இருவரும் ஒரே மேஜையில் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்து கொண்டோம்.
மிகவும் குறைவாகவே சாப்பிட்டார். "இன்னும் கொஞ்சம் சோறு" என்றேன். "இல்லம்மா... சாப்பாடு அளவெல்லாம் குறைஞ்சுடுச்சு மா" என்றார். நிறைய விஷயங்களை வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே இருந்தார். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தேன். கை கழுவச் செல்லும்போது "அறிவு வெளிய வந்தது கல்யாணம் பண்ணி வைக்கணும்" என்றார்.
ஒரு தாய் எப்போதுமே குழந்தையை வளர்த்துக் கொண்டே அதன் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொண்டிருப்பாள். வயிற்றில் கருவாக இருக்கும்போது அதற்குப் பெயரைத் தேடுவாள், பெயருள்ள பிள்ளையாய் விளையாடும்போது அதற்கு அறிவு தரும் பள்ளியைத் தேடுவாள், பள்ளிக்குச் சென்றால் அதன் எதிர்காலத்தை கட்டமைக்க உதவுவதைப் பற்றி யோசிப்பாள். அவளோ / அவனோ வேலையில் அமர்வதற்கு முன்னரே அவர்களின் திருமணத்தைப் பற்றி கனவு காண்பாள். அம்மாக்கள் அப்படித்தான். ஆனால் அற்புதம் அம்மாள் அப்படிப்பட்ட அம்மா மட்டுமல்ல.
"ராஜீவ் காந்தி கொலைக்கும், என் மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." - இந்த ஒற்றைப் புள்ளியில்தான் அற்புதம் அம்மாள் தனது சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். அதிலிருந்து 31 ஆண்டு காலம் கழித்து அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. உடலில் பலமும், தோற்றத்தில் இளமையும் இருந்த காலத்தில் போராட்டத்தை ஆரம்பித்தவர் முதுமையின் பிடிக்கு வந்த வேளையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
31 ஆண்டு காலம் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. மனித வாழ்வில் அது ஒரு பெம்பகுதி. பேரறிவாளனுக்கும் தான். அப்படியான, வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறைச்சாலையில், எண்ண அலைகள் அனைத்தையும் வழக்கின் வசமே வைத்துவிட்டு இன்று வருமா, நாளை வருமா என 31 ஆண்டுகள் காத்திருப்பு பேரறிவாளனுக்கு விடியலைத் தந்துள்ளது. அந்த விடியலுக்கு வித்திட்டவர்தான் அற்புதம் அம்மாள். அவர் தான் முழுமுதற்க் காரணமும் கூட. அப்படித்தானே பேரறிவாளனும் சொல்கிறார்.
அன்பு, அறிவு, அருள் என மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் குயில்தாசனுடன் வெகு இயல்பான வாழ்க்கையைத்தான் அற்புதம்மாள் வாழ்ந்து கொண்டிருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக சிபிஐ சொல்லும் வரை அவர் சாதாரண குடும்பப் பெண்ணாகத்தான் இருந்தார். ஆனால், "செய்யாத தவறுக்கு என் மகன் சிறை அனுபவிக்கக் கூடாது" என்ற வாதத்துடனான வேகம் அவரை சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வைத்தது.
ஆரம்ப நாட்களில் பேரறிவாளனைப் பார்க்கவே நாள் கணக்கில் காத்திருந்து, ஜோலார்பேட்டைக்கும், சிபிஐ அலுவலகத்துக்கும், சிறைச்சாலைக்கும் அலைந்து வந்தவர் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று மகனை வென்றெடுத்துள்ளார். 1991 ஜூன் மாதம் தொடங்கிய அவரது போராட்டம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுபெற்றுள்ளது.
எத்தனை துணிச்சல், எத்தனை வைராக்கியம் அந்த மனதில் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு தாயாக எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
மகனைப் பற்றி காதுபட கேலி பேசியவர்களுக்கு மத்தியில் மகனுக்காக அறப்போராட்டங்களை முன்னெடுத்தார். உண்ணாவிரதம், பேரணி, பிரச்சாரக் கூட்டங்கள் என்று முன்னெடுத்தார். அவருக்காக சில அமைப்புகள் இன்றுவரை பக்கபலமாக இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆட்சிகள் மாறினாலும் அவருடைய கோரிக்கை மகன் விடுதலையைப் பற்றி மட்டுமே இருந்தது.
இந்நிலையில்தான் கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் மற்றும் மற்ற 3 பேர் அனுப்பிய கருணை மனு மீது எந்த முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. "பிழைத்தான் மகன்" என்ற பெருமகிழ்ச்சியோடு போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்தார்.
அவரது அறப்போராட்டத்துக்கு கிடைத்த இமாலய வெற்றிதான் விசாரணை அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். 2017-ல் அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். "பேரறிவாளனிடம் நான் நடத்திய விசாரணையின் போது அவர் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொன்னதை நான் அறிக்கையில் பதிவு செய்யத் தவறிவிட்டேன்" என்றார்.
எறும்பு ஊற பாறை கரையுமோ என்று நினைப்பவர்களுக்கு அது பொய் என அற்புதம் அம்மாள் நிரூபித்த தருணம்தான் அதிகாரி தியாகராஜனின் அந்த அறிவிப்பு. அவருடைய அந்த அறிவிப்பு வழக்கிற்கு பேருதவியாக அமைந்தது.
அதன்பின்னர்தான் இன்னும் உத்வேகத்துடன் அற்புதம்மாள் சுழன்றடிக்க ஆரம்பிக்கிறார். 2017 ஆகஸ்டில் முதன்முறையாக பேரறிவாளனை பரோலில் எடுத்தார் அற்புதம் அம்மாள். அப்போதும் அவரது எண்ணம் விடுதலையை நோக்கியே இருந்தது. அதன்பின்னர் பலமுறை பரோல் நீட்டிக்கப்பட்டது. அற்புதம் அம்மாளின் அலைச்சல்கள் குறைந்தது. ஆனால், அவரது போராட்டம் சுணக்கம் காணவே இல்லை. அற்புதம்மாள் சட்டப்போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே அவர் 12 ஆண்டுகள் போராடியிருக்கிறார்.
ஒருவழியாக கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது அவர் சொன்னது: "இந்த ஜாமீன் ஒரு இடைக்கால நிவாரணம் மட்டுமே. என் மகன் பேரறிவாளன் உள்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, எங்கள் சட்டப்போராட்டம் தொடரும்." இன்று மே 18, 2022 வரலாற்றில் ஒரு முக்கியப் பக்கத்தை அற்புதம் அம்மாள் எழுதியிருக்கிறார். மகனின் விடுதலை அவரின் வெற்றியாக அமைந்திருக்கிறது.
"தாயால் விடுதலையானேன்" என்று நெகிழும் பேரறிவாளன், தன் தாயை மாக்சிம் கார்கியின் 'தாய்' புதினத்தில் வரும் தாய்க்கு இணையாக ஒப்பிட்டுப் பேசுகிறார். ’இத்தனை ஆண்டு போராட்டத்தில், அம்மாவின் தனிப்பட்ட வாழ்வை நான் திருடிவிட்டேனோ என வருந்துகிறேன்’ எனக் கூறுகிறார்.
ஆனால், அற்புதம் அம்மாள் அப்படி நினைக்கவில்லை. இத்தனைப் போராட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தாலும் பேட்டியில் அவர், "31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்றாரே தவிர, "நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று சொல்லவில்லை. அதனால்தான் அவர் ஓர் அற்புதமான அம்மா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT