Published : 11 May 2022 08:00 AM
Last Updated : 11 May 2022 08:00 AM

வளரிளம் பருவத்தினர் செய்யும் குற்றங்களுக்கு பொறுப்பாளி யார் ?

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை, சாதி ரீதியாக கயிறு கட்டுவதில் மோதல், ரயிலில் இளம்பருவத்தினர் பட்டாக்கத்தியை சுழற்றி பொதுமக்களை அச்சுறுத்தியது, பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கும் மாணவர், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது பின் இருக்கையில் மொபைல் போனில் பாடல் கேட்டபடி ஆட்டம் போடும் மாணவர்கள், பேருந்தில் பொதுமக்கள் முன்னிலையில் பீர் அருந்தும் மாணவிகள், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்யும் இளம்பருவத்தினர் என அன்றாடம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வளரிளம் பருவத்தினர் செய்யும் தவறுகளுக்கு யார் பொறுப்பாளி என்ற கேள்வி விவாதிக்க வேண்டிய விஷயம். சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பரபரப்பு தீர்ப்பு இந்த விவாதத்தை துவக்கி வைத்துள்ளது.

அந்த வழக்கில் 15 வயது சிறுவன் 17 வயது பெண்ணுடன் பழகி இருவரும் உடல்ரீதியாக தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதில் அந்தப் பெண் கர்ப்பமாகிறாள். சிறுவனை குற்றவாளி என்று கருதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து இளஞ்சிறார் நீதி வாரியத்திடம் அனுப்புகிறது. அவர்கள் சிறுவன் குற்றவாளி என்று உறுதி செய்து செங்கல்பட்டு இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்க உத்தரவிடுகின்றனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுவனின் தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இருவரையும் விடுதலை செய்து உத்தரவிடுகிறார்.

இந்த உத்தரவை மேலோட்டமாக பார்த்தால் நீதிமன்றம் தவறாக தீர்ப்பளித்துவிட்டது என்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை உன்னிப்பாக கவனித்தால் தான் உண்மை விளங்கும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: வளரிளம் பெண் கருவுற்றது தான் குற்றத்தின் அடிப்படை. இதில் குற்றவாளியாக இருவரில் யாரை கொண்டு வருவது என்பது கேள்விக்குரிய விஷயம். 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் உடலுறவு கொள்ளும்போது அது சட்டத்தின் இருண்ட பகுதியாகி விடுகிறது. உடலுறவுக்கு இளம்பருவத்தினர் தெரிவிக்கும் சம்மதத்தை முழுமையானதாக சட்டம் ஏற்பதில்லை. இளம்பருவத்தினர் சமூக ஊடகங்கள், சினிமா, நண்பர்கள், குடும்ப சூழ்நிலைகளிடம் இருந்து பாலியல் ரீதியான சிறு விஷயங்களைக் கூட ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர். அதன்மூலம் எதிர்பாலினத்தின்மீது ஈர்ப்பு, இனக்கவர்ச்சியை வளர்த்துக் கொள்கின்றனர்.

இதுபோன்ற தவறுகள் நடக்கும்போது அவர்களை குற்றவாளிகளாக ஆக்காமல் வழிகாட்டுதல் மற்றும் கவுன்சிலிங் மூலம் நெறிப்படுத்த வேண்டும் என்று கென்யா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குற்றம் நடந்தபோது மைனர் தான் என்பதை காவல்துறை விசாரித்து ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. இளஞ்சிறார் மீதான குற்றங்களை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை. 15 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக சொன்ன வாக்குறுதியை 17 வயது பெண் நம்பி உறவில் ஈடுபட்டார் என்பதை ஏற்க முடியவில்லை. இனக்கவர்ச்சியால் நடந்த ஒரு தவறுக்கு குற்றச்சாயம் பூசப்பட்டுள்ளது. அவர்கள் செய்தது குழந்தை விளையாட்டு போன்ற தேவையற்ற உடல்ரீதியான உறவாகும். பொறுப்பற்ற செயலாக மட்டுமே இதை கருத வேண்டும்.

இளஞ்சிறார்கள் தவறு செய்து சட்டத்தின் முன் நிற்கும்போது அவர்களை குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும் என்று சிறார் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. சிறார் நீதிச் சட்டம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் குழந்தைப் பருவத்திலேயே உள்ளது. நம்முடைய சட்ட, நீதி அமைப்புகள் சிறார்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்ப்பதால் கூர்நோக்கு இல்லங்கள் ஜூனியர் சிறைகளாக மாற்றப்பட்டுள்ளன. குற்றத்தில் சிக்கும் இளஞ்சிறார்கள் குற்றவாளிகள் அல்ல; உண்மையில் அவர்கள் இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இதுபோன்ற சம்பவங்கள் சமூகம் விழிப்படைய வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு கூறி நீதிபதி அவர்களை விடுதலை செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இளஞ்சிறார்களின் குற்றச் செயல்மீது சமூகம் இதுவரை கொண்டுள்ள பார்வையை மறுசீரமைப்பதன் அவசியத்தை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

சிறார் ஓட்டுனர் உரிமம் கொடுக்கலாமே?

சமீபகாலமாக வளரிளம் பருவத்தினர் ‘பைக் ரேஸ்’ போன்ற சாகசங்களில் ஈடுபட்டு காவல்துறையிடம் சிக்குகின்றனர். தற்போது 30 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வளரிளம் பருவத்தினர் சமூகத்திடம் இருந்து தான் கற்றுக் கொள்கின்றனர். வீடுதோறும் வாகனங்கள் இருக்கும்போது வளரும் பருவத்தினர் ஆர்வம் மிகுதியால் அவற்றைப் ஓட்டிப் பார்க்க நினைக்கின்றனர். அவர்களை தண்டிப்பதும், பெற்றோர்களுக்கு தண்டனை வழங்குவதும் சரியான அணுகுமுறையாக இருக்காது. இதுபோன்ற வளரிளம் பருவத்தினருக்கு தனியாக 15 வயது முதல் 18 வயது வரை ஒரு ஆரம்பகட்ட பழகுனர் உரிமம் ஒன்றை உருவாக்கி, போக்குவரத்து விதிகள், வேகத்தை குறைத்து ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை வழங்கி அவர்கள் அந்த உரிமத்துடன் ஓட்டும் வகையில் நெறிப்படுத்துவதே தேவைக்கேற்ற மாற்றமாக அமையும்.

குற்றங்களை யார் விசாரிக்க வேண்டும்

இளஞ்சிறார் தொடர்பான குற்றங்களை இளஞ்சிறார் நீதி வாரியம் மட்டுமே விசாரிக்க வேண்டும். இதில் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் அல்லது முதல்வகுப்பு நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சமூக சேவகர்கள் இருக்க வேண்டும். அவர்கள் சிறார் உளவியல் குறித்த அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இளஞ்சிறார் மீதான குற்றங்களை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் எழுத்துமூலம் அனுமதிபெற்று கூடுதலாக 2 மாத அவகாசம் பெறலாம். அதற்கு மேல் நீடித்தால் வழக்கு முடிந்து விட்டதாக கருத வேண்டும்.

இளஞ்சிறார்களை விசாரிக்கும்போது நீதிமன்றம் போன்ற தோற்றமே இருக்கக் கூடாது. விசாரணை உறுப்பினர்கள் நீதிமன்ற உடைகளிலோ, காவல்துறையினர் சீருடைகளையோ அணிந்திருக்க கூடாது. உயர்ந்த மேடையில் அமர்ந்து விசாரிக்க கூடாது. நீதிமன்றம் போன்ற குற்றவாளி கூண்டு அமைப்பு இருக்கக் கூடாது. குழந்தையோடு குழந்தையாக சமமாக அமர்ந்து விசாரிக்க வேண்டும் என்கிறது இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டம். ஆனால் பல இடங்களில் நீதிமன்றங்களில் தான் நீதி வாரியமே விசாரணை நடத்துகிறது.

இந்தியாவில் சிறார் பாதுகாப்பு சட்டங்கள்

சிறார் சட்டம் 1960
சிறார் நீதிச் சட்டம் 1986
சிறார் நீதிச் சட்டம் 2000
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து சிறார் பாதுகாப்புச் சட்டம் (போக்ஸோ) 2012
சிறார் நீதிச் சட்டம் 2015
சிறார் நீதிச் சட்டம் 2021

இதில் நிர்பயா வழக்கிற்குப் பின்னர் 16 முதல் 18 வயது வளரிளம் பருவத்தில் இருப்போர் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களை பெரியவராக கருதி சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்ற திருத்தம்
2015-ம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 350 குற்றங்கள்

தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு சராசரியாக 350 குற்றங்கள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள் திருமணம் 50 சதவீதமும், இணையத்தை தவறாக பயன்படுத்தும் குற்றங்கள் 400 சதவீதமும் அதிகரித்துள்ளாக தெரியவந்துள்ளது.

வளரிளம் பருவம் எது?

உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி, 10 வயது துவக்கத்தில் இருந்து 19-வது வயது நிறைவு வரை ஒருவரை வளரிளம் பருவத்தினராக கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் உடல்ரீதியான, மனரீதியான, உணர்வுரீதியான மற்றும் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதால் இந்த காலகட்டத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

வளரிளம் பருவத்தின் செயல்பாடு

# உணர்வுரீதியாக கோபத்தை வெளிக்காட்டுதல்
# சிறு திருட்டுகள்
# போதை பழக்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம்
# ஆவேசம் மற்றும் கோபமான செயல்கள்
# மோசமான குற்றங்கள்

இவை அனைத்தும் தவறானவையாக இருந்தாலும், வளரிளம் பருவத்தினர் இவற்றை கற்றுக் கொண்டு செய்ய நினைப்பது வளர்ச்சியின் ஒரு பகுதிதான். பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளிகள், கல்வித்துறை, சமூகத்தினர், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் என அனைவரும் சிறார்களின் இந்த நிலையை புரிந்து கொண்டு சிக்கல்களில் இருந்து அவர்களைக் காக்க வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, மறுசீரமைப்பு வழங்கி சமூகத்துடன் இணங்கிச் செல்ல கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த முயற்சியில் பெரும்பாலான குழந்தைகள் சரியான நிலைக்கு வந்துவிடுவார்கள் என்று நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிடியில் சிக்கும் இளஞ்சிறாரின் உரிமைகள்

1 வழக்கறிஞர் உதவி பெறுதல்
2 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தல்
3 தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க சாட்சிகளை அழைத்தல்
4 பதில் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கும் உரிமை
5 மேல்முறையீடு செய்தல்
6 விசாரணை விவரங்களின் நகலைப் பெறுதல்
7 நியாயமான வேகமான விசாரணை நடத்தக் கோருதல்
8 நீதிபதிகள் யாரும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்
9 பெற்றோர், பாதுகாவலர்கள் விசாரணையின்போது உடனிருத்தல்

கூர்நோக்கு இல்லங்களின் கடமை

இளஞ்சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டு சட்டத்தில் சிக்கும்போது அவர்களை தண்டனைகளில் இருந்து பாதுகாப்பதாகும். அவ்வாறு நெருக்கடியில் சிக்கும் சிறுவர்களை குற்றவாளிகளாக பார்க்காமல் அப்பாவி குழந்தைகளாகவே பார்க்க வேண்டும் என்கிறது சட்டம். பாதிக்கப்பட்டு கூர்நோக்கு இல்லங்களுக்கு வரும் சிறார்களுக்கு கல்வி வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல், தொழில்பயிற்சி வழங்குதல், கவுன்சிலிங், அணுகுமுறை மாற்றங்களுக்கான பயிற்சி, உளவியல்ரீதியான உதவி ஆகியவற்றை அவர்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் அளித்து அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணக்கமாக செல்ல வழிவகுக்க வேண்டும். கூர்நோக்கு இல்லங்கள் அமைக்கப்பட்ட நோக்கம் இதுவாக இருந்தாலும் உண்மையில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைப் போல் அவை ஜூனியர் சிறைகளாகவே நடைமுறையில் மாறிப் போயிருக்கின்றன.

சட்ட திருத்தம் அவசியம்

குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் இன்னும் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்(என்சிபிசிஆர்) பரிந்துரை அளித்துள்ளது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மையங்களைப் பொறுத்தமட்டில், அவை 90 சதவீதம் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுவதால் அவற்றை கண்காணிப்பதும், தணிக்கை செய்வதும் அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் கருத்து

வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்: பிறக்கும் யாருமே குற்றவாளிகளாக பிறப்பதில்லை. எல்லோரும் குழந்தை, சிறார் மற்றும் விடலைப்பருவத்தைக் கடந்து வந்தவர்களே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். இது அவரவர்களின் குடும்ப, சமூக, பொருளாதார கட்டமைப்பு மற்றும் வளர்ப்பு சூழலைப் பொருத்து மாறுபடும். தடம் மாறும் சிறார்கள் வாழ்நாள் முழுவதும் குற்றப்பின்னணிக்குள் சிக்கி விடக்கூடாது. அந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பை, பராமரிப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்தையே சாரும். தமிழகம் முழுவதும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி முழு வீச்சில் செயல்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.

சிறார் காப்பகங்களை முறைப்படுத்த, புதுப்பிக்க லட்சங்களை செலவிடும் மத்திய, மாநில அரசுகள் குற்றம் புரிந்த மனதோடு காப்பகங்களுக்கு வரும் சிறார்களின் மறுவாழ்வியல் சிந்தனைகளை உளவியல் ரீதியாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கிறது, அதில் எந்தளவுக்கு வெற்றி கண்டுள்ளது என்பது கேள்விக்குறி. நம்மிடம் சட்டம் இருக்கிறது. ஆனால் பலன் இல்லை. குற்றச் செயலில் ஈடுபட்ட பிறகு சிறார்களை நல்வழிப்படுத்துகிறோம் எனக்கூறாமல், குற்ற மூலத்தைக் கண்டறிந்து, குற்றம் செய்ய விடாமல் தடுக்க வேண்டும். அதுபோல குழந்தைகளைக் கண்காணிக்கவும், கண்காணிக்கத் தவறும் நபர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் கொண்டுவந்து, அந்த பொறுப்பை சமூகத்தின் கையில் ஒப்படைக்கும் வகையில் பிரத்யேக அமைப்பை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்யும் சிறார்களை சட்டத்தின் மூலமாக திருத்தாமல் உளவியல் ரீதியாக திருத்த வேண்டும்.

வழக்கறிஞர் வி.அனுஷா: சமீபத்தில் 15 வயது சிறுவன் 17 வயது வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறுவனை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டம் பற்றிய புரிதல் விசாரணை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. பதின்ம வயதில் காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கரோனா ஊரடங்கால் பெற்றோருடன் நெருக்கம் குறைந்து மொபைல் போன்களின் ஆதிக்கத்தால் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து பதின்ம வயது சிறார், சிறுமியர் மன ரீதியாகவும் பாதிப்பில் உள்ளனர். அவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை ஆராய்ந்து பார்க்கும் மனோபாவம் இருக்காது.

கொடுங்குற்றத்தில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களை சட்ட ரீதியாக தண்டிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும். முதன்முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்களுக்கு அந்த சம்பவமே மீண்டும், மீண்டும் குற்றம் புரிவதற்கான தூண்டிலாக அமைந்துவிடக்கூடாது. தகாத பழக்க வழக்கங்கள், போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற சிறார்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்து கொடுப்பதுதான் அரசு இயந்திரங்களின் முதல் பணி. அதற்கு கண்காணிப்பு, கூர்நோக்கு இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நல்ல தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நமது நாட்டில் சட்டங்கள் சிறப்பாகத்தான் உள்ளது. அவை முறையாக அமலில் உள்ளதா என்றால் இல்லை.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலதலைவர் இரா.இளங்கோவன்: மாணவ, மாணவியருக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு கற்பிக்க, ஒழுங்குபடுத்த வேண்டிய ஆசிரியர்களின் கைகளும், வாய்களும் பூட்டப்பட்டுள்ளது. தவறுசெய்யும் மாணவர்களை கண்டிக்க முடியாமல் ஆசிரியர்கள் உள்ளனர். கரோனா காலத்தில் பள்ளிக்கு வர முடியாமல் ஆன்லைன் வகுப்பின்போது குறிக்கிடும் தேவையற்ற இணையதளங்கள் மூலம்மாணவர்கள் தவறான பாதைக்கும், பழக்கத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

வழிதவறும் மாணவர்களை கண்டிக்க முடியாததால், மாணவ, மாணவியர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வர யார் பொறுப்பேற்பது என்பதற்கு அரசிடமே தீர்வு இல்லை. மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் தன்முனைப்போடு செயல்படாவிட்டால் தவறான வழியில் சென்றுவிடுவர். தவறுசெய்யும் மாணவர்களை கண்டிக்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கினால்தான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும், என்றார்.

சீனிவாசகன், அருள்தாசன், பாலசரவணக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x