Published : 10 May 2022 09:36 PM
Last Updated : 10 May 2022 09:36 PM

திமுக அரசு @ 1 ஆண்டு | வேளாண் துறை - ‘வரலாற்றுச் சிறப்பு நகர்வும், சில குழப்பங்களும்’

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களின் நலன் சார்ந்து அரசின் செயல்பாடுகள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, "திமுகவின் தேர்தல் அறிக்கையின் மீது ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்பார்ப்பின் காரணமாகதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அந்த தேர்தல் அறிக்கையின்படி 90 சதவீத வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றினாலே ஆட்சியில் 100 சதவீதம் வெற்றி பெற்றுவிடும். ஆனால், அதற்கு நிதிச் சுமையை அரசு காரணம் காட்டி சிலவற்றை தவிர்த்துள்ளது.

திமுக பொறுப்பேற்ற பிறகு வேளாண் துறை சார்ந்து தொலைநோக்குப் பார்வையின் கீழும், நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இதனை வணிக ரீதியாக லாபகரமான தொழிலாக மாற்றும் நடவடிக்கைகளாக அரசு முன்னெடுத்துள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை சொல்லலாம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகர்வு.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய விவசாய முறைக்கான ஆராய்ச்சி மையம் நம்மாழ்வார் பெயரில் ஏற்படுத்தி கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சொன்னார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருந்தாலும் வேளாண் கல்லூரிகள் தொடங்கியுள்ளார்கள்.

பி.ஆர்.பாண்டியன்

அதே நேரத்தில் விவசாய மக்களின் உடனடி தேவை என்ற அடிப்படையில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது" என தெரிவித்தார்.

இது தொடர்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக் குழு துணைத் தலைவரும், வழக்கறிஞருமான வெ.ஜீவகுமார் பகிர்ந்தவை: "விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்தது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கிறேன். இருந்தாலும் குளறுபடியான மற்றும் குழப்பமான அறிவிப்புகளை இந்த அரசு அறிவிக்கிறது.

குறிப்பாக, காவிரி விவகாரத்தில் இந்த அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதாக தெரிகிறது. காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது விவகாரம் குறித்து இந்த அரசு பேச மறுக்கிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை மூன்று முறை நடத்தியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் இங்குள்ள கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையை கூட அரசு வெளிப்படுத்தவில்லை. நகைக்கடன் உட்பட கடன் தள்ளுபடி மீதான குளறுபடிகள், மின்சாரக் கட்டணத்தின் மீதான மாற்றுக் கருத்து, நெல் கொள்முதலில் கூட இந்த அரசு தடுமாறுகிறது.

வெ.ஜீவகுமார்

மொத்தத்தில் இந்த அரசு கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், அதை செயல்பட தவறுகிறது. இருந்தாலும் ஆட்சி அமைந்து ஓராண்டு தான் நிறைவு பெற்றுள்ளது. அதனால் இந்த ஓராண்டை வைத்து அரசின் செயல்பாட்டை எடை போட்டுவிட முடியாது. நூறு நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுடன் இணைக்க வேண்டும் என்பது எனது ஆலோசனை" என தெரிவித்துள்ளார்.

வேளாண்மை சார்ந்து அரசின் முக்கிய அறிவிப்புகள்:

> பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு.

> சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் இயக்கம்

> ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்

> மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம்

> உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி

> பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி

> தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி

> தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.

> பசுமைக்குடில், நிழல் வலைக் கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி

> தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி

> உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி

> காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி

> பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி

> பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி

> பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி

> முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் - ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடி

> 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ.10 கோடி

> ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x