Published : 06 May 2022 09:16 PM
Last Updated : 06 May 2022 09:16 PM

திமுக அரசு @ 1 ஆண்டு | மருத்துவத் துறை - ‘வெளிப்படைத் தன்மை நன்று, மலைப் பகுதியில் சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டம் தேவை’

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த ஓராண்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும்? - இது குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி...

நிறைகள்: "தமிழக அரசின் இந்த ஓராண்டில் நிறைய நாட்கள் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சென்றுவிட்டன. சுகாதாரத் துறை அமைச்சர் களத்தில் இறங்கி பணியாற்றுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகிறார். 2-வது மற்றும் 3-வது கரோனா அலையை சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். தொற்றா நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க செயல்படுத்தப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் நிறைய நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறை நிர்வாகம் நேர்மையான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டுவருகிறது.

குறைகள்: சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.1,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. திருத்திய நிதி நிலை அறிக்கையில் இந்த நிதியை அளிக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கான நிதியை குறைக்க கூடாது. டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்பின்போது நோய் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஆண் சுகாதார ஆய்வாளர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. கிராம சுகாதார செவிலியர் மற்றும் நகர்புற சுகாதார செவிலியர்களுக்கு இணையாக ஆண் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். வருடத்திற்கு 2,000 பேரை பணியில் அமர்த்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே டெங்கு, கரோனா போன்ற காலங்களில் களப்பணியை சிறப்பாக செய்ய முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

> தொலை தூரப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறைவாக உள்ளன. இன்னும் 200 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க வேண்டும். தூரத்தை கணக்கில் எடுத்தும் இந்த மையத்தை அமைக்க வேண்டும்.

> மலைப் பகுதியில் சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓர் இடத்தில் ஆம்புலன்ஸ் பாயின்ட் ஒன்று அமைத்து, அந்த இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை டோலி மூலம் தூக்கி வந்து வரும் வகையில் இந்தத் திட்டம் இருக்க வேண்டும்.

> இனி வரும் காலங்களில் கரோனா மற்றும் பல சோதனைகளை செய்ய ஏதாவது ஒரு மையத்தை தேர்வு செய்து சிறப்பு மையமாக மாற்றியமைக்க வேண்டும்.

> கிண்டி கிங்ஸ் தடுப்பூசி மையத்தை சீரமைத்து தடுப்பூசிப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x