Published : 21 Apr 2022 10:08 PM
Last Updated : 21 Apr 2022 10:08 PM
இளையராஜா என்றுமே நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இசைத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த சமூக வலைதளமும் இளையராஜாவை சுற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது. காரசார பேச்சுக்கும் காற்றில் கரையும் இசைக்கும் பொருத்தமாகத் தான் இல்லை. ஆனால், விவாதிக்கப்பட வேண்டியவை நிறைய இருப்பதாலேயே பொதுவெளி துடித்துக் கொண்டிருக்கிறது. 'ஆரோகணத்தில் மட்டுமே மெட்டுப் போடத் தெரிந்தவர் இன்று மக்கள் இதயத்தில் அவரோகணமாக ஒலிக்கிறார்' என்ற கடுமையான விமர்சனங்களால் சமூக வலைதளம் தகித்துக் கொண்டிருக்கிறது.
இளையராஜா மீதான விமரசனங்கள் இது முதன்முறை அல்ல. பாடகர் எஸ்பிபி வெளிநாட்டில் பாடல் கச்சேரி அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது ராயல்டி பிரச்சினையை எழுப்பி அதற்கு முட்டுக்கட்டை போட்டது, கேள்வி கேட்ட நிருபரை 'அறிவிருக்கிறதா' என்று கேட்டது, மேடைகளில் தற்பெருமை பேசுவது என்று அவர் மீது விமர்சனங்களுக்குப் பஞ்சமில்லை. அப்போதெல்லாம் அந்தப் பிழைகளை குழந்தையின் பிழை போலவே இந்த பொதுச் சமூகம் 'மன்னித்தருளியது'. ஆனால், இன்று அவர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது பொறுக்க முடியாது எனக் கூறுகின்றது பொதுவெளியின் ஒரு தரப்பு. ஆனால், வெறும் கண்டிப்பாக மட்டுமே அந்த விமர்சனங்கள் இல்லை. மாறாக தரம் தாழ்ந்த வார்த்தைகள், கொச்சைப்படுத்தும் கருத்துகள் எனக் கண்டு கொண்டு காண முடியாத அளவுக்கு சமூக வலைதளம் நிரம்பி வழிகின்றன.
இந்த இடத்தில்தான் படைப்பையும் படைப்பாளியையும் தனித்தனியாக இந்த சமூகம் அணுக வேண்டுமா? - இந்தக் கேள்வியும் எழுகிறது.
இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், இளையாராஜா கூறிய கருத்துகள் என்னவென்பதைப் பார்த்துவிடுவோம். ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று கூறியுள்ளார் அந்தப் புத்தகத்தை எழுதியவர் யார், அந்த முன்னுரையை எழுத இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எப்படி வாய்ப்பு வந்தது? வாய்ப்பா அல்லது திணிப்பா? என்பதெல்லாம் இதுவரை விடையில்லாத கேள்விகள். ஆனால், அது வெளியாவதற்கு முன்னதாகவே விமர்சனங்கள் வரிசைகட்டத் தொடங்கிவிட்டன.
படைப்பையும் படைப்பாளியையும் தனித்தனியாக அணுக வேண்டுமா?
படைப்பையும் படைப்பாளியையும் தனித்தனியாக இந்த சமூகம் அணுக வேண்டுமா என்ற கேள்வியை கலை - இலக்கிய விமர்சகரான இந்திரன் ராஜேந்திரனிடம் முன்வைத்தோம். அதற்கு அவர் கூறியது: "அரசியல் மற்றும் வாழ்க்கை குறித்து பிரச்சினைகளுக்கு சினிமாக்காரர்களிடம் தீர்வு கிடைக்கும் என நினைப்பது தமிழக மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கை. இது மாபெரும் அபத்தம். சினிமாக்காரர்கள் கனவுத் தொழிற்சாலையில் இருக்கின்றனர். அதில் இளையராஜா ஒரு மேதை. அந்த இசை மேதை தமிழர்களுக்குக் கிடைத்த வரம். ஆனால், இளையராஜா அரசியலில் ஞானியாக இருப்பார், அவர் மூலம் நமது சமூக, வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது அபத்தம். அவர் இசையில், தனது தொழிலில் நேர்மையானவர். அந்த நேர்மையின் விளைவைதான் நாம் அன்றாடம் ரசிக்கிறோம். இளையாராஜா என் பார்வையில் எப்போதுமே தனது சனாதான ஈர்ப்பை மறைத்ததில்லை. அவர் தன்னை திராவிட மாடலாகக் காட்டியதில்லை. தெளிவாக தன்னை சனாதான மாடலாகவே காட்டினார். அதை அவர் மறைக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது.
இளையராஜா அரசியல் மேதையோ, பொருளாதார நிபுணரோ இல்லை. அதனால் நான் சொன்ன இந்தக் கருத்தை பொருளாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்த விவாதங்களுக்கு தமிழ்ச் சமூகம்தான் காரணம். காலங்காலமாக சினிமாக்காரர்களை இந்த தமிழ்ச் சமூகம் அதிகமாக நம்பிக் கொண்டிருக்கிறது. இளையராஜா, பாக்யராஜாவோ அரசியல் அறிவுடன் இருப்பார்கள் எப்படி நம்ப முடியும். இதில் இலக்கிய மேதைகளும் சளைத்தவர்கள். இலக்கியவாதிகளிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். படைப்பாளிகளிடம் தீர்வைத் தேடக்கூடாது. Death of the Author என்றொரு கருத்துரு உண்டு. ஒரு படைப்பை உருவாக்கிய பின்னர் அதற்கான படைப்பாளி மறைந்துவிட்டான் எனக் கூறுவார்கள். அதன் பின்னர் அந்தப் படைப்பு மக்களிடம் வந்துவிடுகிறது. அவர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள். விமர்சிப்பார்கள். கருத்துகளை கற்பிப்பார்கள். அதுபோல் தான் நாம் இளையாராஜா என்ற படைப்பாளியிடம் இத்தனை ஆண்டுகளாக படைப்புகளை வாங்கிக் கொண்டுள்ளோம். இதில் திடீரென அவரை அவருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் ஏன் இழுக்க வேண்டும். எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்து கொண்டிருக்கிறோம். அம்பை எய்தவனின் நோக்கம் என்னவென்று தான் நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் அறிவு என்பது அடிப்படையிலாவது இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அப்படி இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது. அம்பேத்கர் நவீன இந்தியாவின் சிற்பி. ஆனால் அது இங்கு தன்னை முற்போக்குவாதிகள் என அடையாளப்படுத்துபவர்களுக்கே கூட அது தெரியாது. அதனால் தான் இன்று பலரும் அம்பேத்கரை சாதித் தலைவராக உருவாக்கி வைத்துள்ளனர். சனாதான சக்திகள் அம்பேத்கரை சாதி சிலுவையில் அறைந்தன. இன்றும் செய்கின்றன. இந்தப் புரிதல் இருந்திருந்தால் இளையராஜா, அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டிருக்க மாட்டார் தானே!
அரசியலில் மொன்னையானவர்களிடம் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை தமிழ்ச் சமூகம் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒட்டுமொத்த சர்ச்சையிலும் ஒரே ஒரு நன்மை, பாஜகவுக்கு ஓர் எதிர்வினை கிடைத்துள்ளது. நீங்கள் எப்படி முயன்றாலும் நாங்கள் எதிர்ப்போம் என்பதுதான் அந்த எதிர்வினை" என்றார்.
இளையராஜாவின் இசைக்கு யாரும் சான்றிதழ் தரத் தேவையில்லை என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதைவிட நிதர்சனம் அம்பேத்கரின் பெருமையை யாரும் அளந்து சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பது. இது இளையராஜா வீட்டின் அரசியலாகக் கூட இருக்கலாம். கங்கை அமரன் ஒன்று பேசுகிறார், யுவன் சங்கர் ராஜா ஒன்று பேசுகிறார். இளையராஜா பின்வாங்க மாட்டார் என்று கங்கை அமரன் சொல்கிறார். அவருடைய சார்பு வேறு, யுவனின் சார்பு வேறு. இளையராஜாவை நேசிப்பதும், நிந்திப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், உலகம் அறியும் பிம்பம் கொண்டவர்கள் பேச்சில் பொறுப்பு வேண்டும். பொறுப்பற்ற பேச்சுக்கள் நிந்தனைகளையே அதிகம் ஈட்டும் என்பதற்கு இளையராஜாவே உதாரணம் எனக் கூறுகின்றனர் இப்பிரச்சினையில் விலகி நிற்கி விரும்புவோர்.
சமூக வலைதளத்தில் வெளியான விமர்சனங்களில் ஒரு விமர்சனம் கவனம் ஈர்த்தது. இளையாராஜா தன்னை, தனது வெற்றியை பெரியார், திராவிட கொள்கைகளால் நிலைநாட்டப்பட்ட சமூக நீதிக்கு உரித்தாக்கவில்லை என்ற கோபம் இருக்கிறதோ என்ற கேள்வியை அந்தப் பதிவர் முன்வைத்திருந்தார். எந்த அடையாளங்களுக்குள்ளும் அடங்காதவர், மோடியை அரசியல் சாசன மேதையுடன் ஒப்பிட்டுப் பேசியபோது புகைந்து கொண்டிருந்த கோபம் பூதாகரமாகிவிட்டதோ என்ற ஐயத்தை அவர் எழுப்பியிருந்தார். அதற்கான பின்னூட்டங்கள் பெரும்பாலும், அடையாளங்களுக்குள் அடங்காதவர் அடிபணிந்துவிட்டார் என்றே சுட்டிக்காட்டின.
வலதுசாரிகளின் பார்வையில் ராஜா - இளையராஜா ஒரு தனி மனிதர். அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. இசை ஞானியே மோடியை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். அவரை தமிழ்ச் சமூகம்தான் புரிந்து கொள்ளவில்லை. அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழிந்தால் வரவேற்போம். - இதுதான் வலதுசாரிகளின் பார்வையில் பார்வையில் ராஜா. இன்னும் ஆழமாகக் கருத்துக் கேட்க முயன்றபோது, பலரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...