Published : 10 Apr 2022 06:05 AM
Last Updated : 10 Apr 2022 06:05 AM
நவீனத் தமிழ்க் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் பிரமிள். அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தை தங்கம் இயக்குகிறார். அதை வெற்றிமாறன் தயாரிப்பதுடன் பிரமிளின் அடக்க ஸ்தலமான வேலூர் மாவட்டம் கரடிக்குடி கிராமத்தில், அவருக்கு மணிமண்டபம் எழுப்பும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இலக்கியமும் சினிமாவும் இவ்வளவு காதலுடன் இணைந்திருக்கும் இந்த முன்னெடுப்பின் பின்னணியில் வழிகாட்டியாக இருப்பவர் எழுத்தாளர், பதிப்பாளர் கால சுப்ரமணியம். பிரமிள் படைப்புகளை 3,400 பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாக வெளியிட்டவர். பிரமிளுடன் பழகியவர். அவரிடம் பிரமிள் ஆவணப்பட உருவாக்கத்தின் பின்னணியைக் கேட்டபோது மனம் திறந்தார்.
“திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் தங்கம் என்கிற தங்கவேலவன் கோயமுத்தூரைச் சேர்ந்தவர். கடந்த 30 வருடமாக அவரை அறிவேன். பாலுமகேந்திராவிடம் அவர் உதவி இயக்குநராக இருந்தபோது, வெற்றிமாறனும் அங்கே பணிபுரிந்தார். பிரமிளின் படைப்புகளை தங்கம் தொடக்கம் முதலே வாசித்து, அவர்மீது பற்றுக்கொண்டிருக்கிறார். பிரமிளைச் சந்தித்து அவருடன் பழகியுமிருக்கிறார். ஃபேஸ்புக்கில் ‘மெய்காண் கலைஞர் தமிழ்ச் சங்கம்’ என்கிற பெயரில் பிரமிள் வாசகர் குழு ஒன்றையும் ஒருங்கிணைத்திருப்பவர். திரையுலகில் தனது வட்டத்தில் உள்ள அனைவரிடமும் பிரமிளின் படைப்பாளுமை குறித்துப் பேசாமல் இருக்க மாட்டார்.
‘‘தற்போது ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்கிற அவருடைய கதையை இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து திரைக்கதையாக்கம் செய்ய, அதை அமீர் திரைப்படமாக இயக்குகிறார். ‘விசாரணை’ படத்தை வெற்றிமாறன் உருவாக்கவும் தங்கமே காரணமாக இருந்தார். இதைப் போல் இலக்கிய உலகத்துக்கும் திரையுலகத்துக்கும் பாலமாக இருக்கும் பலரில் தங்கம் மிக முக்கியமானவர். பிரமிளின் படைப்புகளை நான் வெளியிட்டபோது, தங்கம்தான் வெற்றிமாறனிடம் சொல்லி, சென்னையில் மிகப் பெரிய வெளியீட்டு விழாவை நடத்திக்கொடுத்தார்.
“பிரமிளின் எழுத்துகளை அணுஅணுவாக வாசித்து லயித்த தங்கம், அவரைப் பற்றிய ஆவணப்படத்தை இயக்குவதும் அதை அவருடைய நண்பரும் இலக்கிய வாசகருமான வெற்றிமாறன் தயாரிப்பதும், மற்றொரு முக்கிய இயக்குநர், ஒளிக்கலைஞர் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்வதும் தமிழ் சினிமாவிலும் இலக்கிய உலகிலும் அரிய நிகழ்வு.
‘பிரமிள் ஆவணப்படத்தில் நினைவுகூரப்பட வேண்டிய மற்றொருவர் மருத்துவர் சிவமணி. இவர் கோவையைச் சேர்ந்தவர்; பிரமிள் எழுத்துகளுக்குத் தீவிர வாசகர். பிரமிள், உணவுக் குழாய் புற்றுநோயால் சென்னை மருத்துவமனையில் தனது இறுதி நாட்களில் போராடிக்கொண்டிருந்தபோது, சிவமணிதான் அவரை கரடிக்குடியில் அவர் பணியாற்றிவந்த சமுதாய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, அவரது மறைவு வரை பராமரித்தவர். பிரமிள் மறைவுக்குப் பின் அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது பிரமிளின் சமாதி இருக்கும் இடத்திலேயே அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்படுகிறது. அதில் நிறுவப்படவிருக்கும் பிரமிளின் மார்பளவுச் சிலையை சிற்பி சந்துரு வடிவமைக்கிறார். ஆவணப்பட வெளியீடும் மணிமண்டபத் திறப்பு விழாவும் மே முதல் வாரத்தில் கரடிக்குடியிலேயே நடக்கவிருக்கின்றன. அதில் திரையுலகமும் இலக்கிய உலகமும் பங்கேற்கவிருக்கின்றன” என்றார் கால சுப்ரமணியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT