Published : 28 Mar 2022 06:24 AM
Last Updated : 28 Mar 2022 06:24 AM

பெட்ரோல் விலை உயர்வு: தீர்வைகள், வரிகள் குறைக்கப்பட வேண்டும்!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் உயர்ந்துகொண்டே செல்வது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையை உயர்த்தியாக வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. பெருந்தொற்றின் பரவல் காரணமாக சுணங்கிக்கிடந்த பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் தேவையும் பயன்பாடும் தவிர்க்கவியலாதது. உற்பத்தியில் தொடங்கி விநியோகம் வரையில் தொழில் நடவடிக்கைகளின் அனைத்து நிலைகளிலும் எரிபொருட்களின் பயன்பாடு முக்கியமானது.

ஆனால், தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர்த் தாக்குதல்கள் காரணமாக கச்சா எண்ணெயின் விலை குறித்த நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஐந்து மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவிருந்த நிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கேற்ப உயர்த்தும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, மார்ச் 22-ம் தேதியிலிருந்து மீண்டும் விலை உயர்வு தொடங்கியிருக்கிறது. மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் படிப்படியாக இந்த விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இந்தியா தனது பெட்ரோலியத் தேவையில் ஏறக்குறைய 85%-ஐ இறக்குமதியைக் கொண்டே சமாளித்துவருகிறது. சற்றேறக்குறைய நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் மாற்றம் இல்லாதிருந்த நிலையில், இடைப்பட்ட காலத்தில் சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்திருப்பதோடு, தற்போது இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. எனவே, இந்த நிதிச் சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது தொடர்ந்து நீண்ட காலத்துக்குச் சுமத்த முடியாது.

பிரபல முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடி’ஸ் மார்ச் 24-ல் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் மார்ச் மாத இழப்பு மட்டுமே ரூ.19,000 கோடியாக இருக்கும் என்று தெரிகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப சில்லறை விலையை ஏற்றாததன் காரணமாகவே இந்நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன.

இனிவரும் நாட்களில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் சில்லறை விலை உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்த எதிர்பாராத தொடர் விலையேற்றத்தின் சுமையிலிருந்து அவர்களைச் சற்றே விடுவிக்க வேண்டுமெனில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் மீது விதிக்கும் சிறப்புத் தீர்வைகளைக் குறைந்தபட்ச காலத்துக்கு விலக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுகளுக்கும் உண்டு. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை மாநில அரசுகள் குறைத்துக்கொண்டு, சில்லறை விற்பனையைக் கட்டுக்குள் வைக்க முயல வேண்டும். இல்லையென்றால், பெட்ரோலிய எரிபொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்திவிடக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x