Published : 20 Jul 2021 02:50 PM
Last Updated : 20 Jul 2021 02:50 PM
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.5 கோடி வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக குறிப்பிட்டுள்ளார். வழக்குகள் தேக்கத்தை வைத்து நீதித்துறையின் செயல்பாட்டை மதிப்பிடுவது நியாயமற்றது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். வசதி படைத்த சிலர் நீதி வழங்கும் அனைத்து அமைப்புகளிலும் மனுக்கள் மீது மனுக்களை தாக்கல் செய்வதே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் வழக்குகள் தேக்கத்தை ஏற்றுக் கொள்ளாத அவர், எல்லா பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தை அணுகாமல் சமரச மையங்கள் மூலம் தீர்வு காண்பதை வரவேற்றுப் பேசியுள்ளார். நாடு முழுவதும் உள்ள 43 ஆயிரம் சமரச மையங்கள் மூலம் 32 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில் 10 லட்சம் வழக்குகள் சுமுகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சமரச மையங்கள் மூலம் தீர்வு காண்பதை ஊக்குவிக்க அதிக முயற்சிகள் எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த தற்போதைய நீதிமன்ற நடைமுறை 1775-ம் ஆண்டு தான் முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பெல்லாம், மத தலைவர்கள், ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வந்தது. ஆங்கிலேய நீதிமன்ற நடைமுறை வந்து ஏற்கெனவே இருந்த நடைமுறைகளை அழித்துவிட்டது. மகாபாரத போருக்கு முன்பாக பாண்டர்கள், கவுரவர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது கிருஷ்ண பகவான் தலையிட்டு சமரசம் செய்ய முயன்ற சம்பவம் நமக்குத் தெரிந்த பழமையான உதாரணமாகும் என்று கூறியுள்ளார்.
இந்தியா போன்ற 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளையும் நீதிமன்றங்களால் தீர்த்து வைக்க முடியும் என்பது இயலாத காரியம் தான். உச்ச நீதிமன்றத்தின் கீழ் 25 உயர் நீதிமன்றங்கள், 672 மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை நிர்வகிக்கும் 16 ஆயிரம் நீதித்துறை நடுவர்களால் மட்டும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது.
இந்த இடத்தில் சமீபத்தில் வெளியான ஒரு செய்தி பற்றி குறிப்பிட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் காதலித்து திருமணம் செய்கிறார். அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிவிட்டு கணவர் தலைமறைவாகி விடுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின் கணவர் காவல்துறையில் பணியாற்றுகிறார் என்பதும், திருமணமாகி வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார் என்றும் தெரியவருகிறது. சேர்ந்து வாழ அழைத்தபோது கணவர் மறுக்கிறார். தன் மகளுக்கு தந்தை அவர் தான் என்று நிரூபிக்க புகார் கொடுக்கிறார். கணவர் தனது காவல்துறை செல்வாக்கைப் பயன்படுத்தி புகாரை முறியடிக்க, வேறு வழியின்றி அந்தப்பெண் நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றத்தில் 45 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. நீதி கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருக்க, ஒரு மனிதனின் வாழ்க்கையில் 45 ஆண்டுகாலம் என்பது சாதாரண காலமல்ல. அந்தப் பெண் இப்போது பாட்டியாகி விட்டார்.
இதுபோன்ற தீர்ப்புகள், நீதிமன்றம் சென்றால் இப்போதைக்கு நீதி கிடைக்காது; 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் போராட வேண்டும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் விதைத்து விடும். இது நீதிமன்றங்களை அணுகாமல் மக்கள் விலகிச் செல்லவே வழிவகுக்கும். தாமதமான நீதி என்பது கசப்பான உண்மை என்பதால், இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற ஆதங்கத்தை தலைமை நீதிபதி தனது பேச்சின்மூலம் வெளிப்படுத்தி உள்ளார். சமரசம் என்பது இந்திய கலாச்சாரத்துடன் ஒன்றிப்போன விஷயம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் குறிப்பிட்டதுபோலவே, சமரச அமைப்புகளை விரிவுபடுத்துவதும், வலுப்படுத்துவதும் இன்றைய காலக்கட்டத்தின் அவசியம். பழைய கிராம பஞ்சாயத்துகள் இன, மொழி, சாதி, மத பாரபட்சங்களுடன் பல தீர்ப்புகளை வழங்கின என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பல பிரச்சினைகளை கிராம அளவிலேயே தீர்த்து வைத்தன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தலைமை நீதிபதி சுட்டிக் காட்டியதுபோலவே, இன்றைய கால மாற்றத்துக்கு ஏற்ப, மத தலைவர்கள், சமூகத்தால் நடுநிலையாக செயல்படும் பெரிய மனிதர்களைக் கொண்டு நம் பாரம்பரிய முறையை புதுப்பிக்கலாம். அவர்களுக்கு நீதித்துறை மூலம் பயிற்சி அளித்து நீதித்துறைக்குக் கட்டுப்பட்டு சிறு சிறு சச்சரவுகளை விசாரித்து தீர்ப்பளிப்பவர்களாக அங்கீகரிக்கலாம்.
நாடு முழுவதும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. அரசு நிர்வாகத்தின் கடைக்கோடி நிர்வாகியாக இருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை சட்ட அறிவை அளிப்பதுடன், அவர்களை நீதிமன்ற அமைப்புகளின் கீழ் கொண்டு வந்து உள்ளூர் பிரச்சினைகளுக்கு ஆரம்பகட்ட நீதி வழங்கி தீர்ப்பு வழங்குபவர்களாக மாற்றலாம். அவர்களை நீதித்துறையின் அங்கமாக விரிவுபடுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரலாம்.
காவிரி நதிநீர் தகராறை உச்ச நீதிமன்றம் விசாரிப்பது நியாயமான ஒன்று. இருதரப்புக்கு இடையே உள்ள சாதாரண கொடுக்கல், வாங்கல், குடும்பத் தகராறு போன்றவற்றை உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற வழக்குகளில் சட்ட நிபுணத்துவம் பெற்ற நீதிபதிகளின் அனுபவமும் அறிவும் வீணாவது தேவையற்றது. வழக்கின் முக்கியத்துவத்தை நிர்ணயித்து அதற்கேற்ப நீதிமன்றங்களுக்கு அனுப்பவும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். சிறு சச்சரவுகளை சிறிய அமைப்புகளிடம் அனுப்பி தீர்வு காண வைக்க வேண்டும். நீதி பரிபாலனத்தின் எல்லை விரிவடைந்தால் மட்டுமே நீதிமன்றங்களின் பளு குறைந்து, தாமதமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும்.
அதிகாரப்பரவலுக்கு நீதித்துறை இணங்கினால் மட்டுமே இது சாத்தியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT