Published : 09 Jun 2021 01:07 PM
Last Updated : 09 Jun 2021 01:07 PM

குழந்தைகளிடையே காணப்படும் கோவிட்-19ஐ எப்படிக் கையாள்வது மற்றும் தடுப்பது?- தேசிய கோவிட்-19 பணிக்குழுவின் மூத்த உறுப்பினர் பேட்டி

டாக்டர் நரேந்திர குமார் அரோரா

இரண்டாவது அலையின்போது, நாடு முழுவதிலும் அனைத்து வயதுடைய, ஆயிரக்கணக்கான குழந்தைகள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பெற்றோர்களிடேயே மிகுந்த பயத்தை உருவாக்குகிறது. பெரும்பாலான குழந்தைகள் லேசான நோய்த் தொற்றே பெற்றிந்தாலும், நோய்த்தொற்றுப் பரவாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கோவிட்- 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது மற்றும் பராமரிப்பது என்று குழந்தை இரைப்பைக் குடல் ஆய்வாளரும் தேசிய கோவிட்-19 பணிக்குழுவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் நரேந்திர குமார் அரோரா கூறுகிறார்.

சமீபத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகப் பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. தொற்றின் இரண்டாவது அலையில் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

குழந்தைகள் பெரியவர்களைப் போலவே கோவிட்-19 நோய்த்தொற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் சமீபத்திய தேசிய செரோ-கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் 25 சதவிகிதம் குழந்தைகள் கோவிட்- 19 ஆல் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும்கூட பிற வயதினரைப் போலவே பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 இன் முதல் அலையின் போது சுமார் 3-4 சதவிகித குழந்தைகள் அறிகுறிகளைப் பெற்றிருந்தனர் என்றும் இரண்டாவது அலையின்போதும் இந்த சதவிகிதம் அப்படியே உள்ளது என்றும் இந்த நோய் குறித்த தேசியத் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மொத்த தொற்று பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இது இந்த முறை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பாதித்துள்ளது என்பது உண்மை.

இந்த முறை அதிகமான குழந்தைகள் கடுமையான நோய்த் தொற்றைப் பெற்றிருக்கிறார்களா?

பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லமால் இருக்கிறார்கள் அல்லது லேசான அறிகுறியைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு வீட்டில், பல பெரியவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், குழந்தைகளும் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இது போன்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் குறிப்பாக 10 வயதிற்கு குறைவானவர்கள் அறிகுறியற்றவர்கள் அல்லது பொதுவான சளி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள்.

இருப்பினும், பிறவி இதய நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா அல்லது குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் கடுமையான நோய்த் தொற்றைப் பெறும் அபாயத்தில் உள்ளனர். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தொற்றுநோயைப் பெற்ற 2 வாரத்திலோ அதற்குப் பிறகோ, குழந்தைகளில் பலருக்கும் கடுமையான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, இந்த அலையின்போது குழந்தைகளுக்கு கோவிட்-19 நோய்த் தொற்றை பெறுவதற்கான சிறப்புக் காரணி உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதிக எண்ணிகையிலான நபர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான சிகிச்சை பெரியவர்களுக்கான சிகிச்சையிலிருந்து எப்படி எப்படி வேறுபட்டது?

அறிகுறிகள் அற்ற எந்தக் குழந்தைக்கும் எந்த மருந்தையும் நாங்கள் பரிந்துரைப்பதில்லை. லேசான தொற்றின்போது, காய்ச்சல் மற்றும் பிற லேசான அறிகுறிகளைச் சரிசெய்ய எளிய பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கவும். இதேபோல், வயிற்றுப்போக்கிற்கு உப்பு சர்க்கரைக் கரைசல் மற்றும் அதிகமான நீராகாரம் கொடுக்கப்பட வேண்டும். மிதமான தொற்று முதல் கடுமையான தொற்று வரை, சிகிச்சையானது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சமமானதாகும்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகரித்தல், கடுமையான இருமல், ஹைபோக்ஸியா, தொடர்ந்து காய்ச்சல், அல்லது தோலில் சொறி ஏற்படுதல், அதிக தூக்கம் போன்ற அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

குழந்தைகளிடையே நெடுங்கால கோவிட்-19 தொற்றும் உள்ளன. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து 3 முதல் 6 மாதங்கள் கழித்து கூட சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் புதிதாக ஏற்படுகின்றன. கடுமையான கோவிட் தொற்றிலிருந்து மீண்ட குழந்தைகளின் பின்தொடர் சிகிச்சைக்கு பெற்றோர்கள் தங்கள் மருத்துவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

பெற்றோர் இல்லாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் எப்படிப் பராமரிப்பது? தொற்றுநோய் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள பராமரிப்பாளர் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

குடும்பத்திற்கு வெளியே யாரிடமாவது குழந்தை தொடர்பு கொண்டிருந்தால் நோய்த்தொற்று ஏற்படலாம். எனவே, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கோவிட்- 19 பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைக்கு உணவளிக்கும் பராமரிப்பாளர் முழுப் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதாவது இரண்டு முகக்கவசம் அணிதல், முகம் மறைக்கும் படியான ஷீல்டு அணிதல், கையுறை அணிதல் வேண்டும். ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும். பராமரிப்பாளரும் குழந்தையும் குடும்பத்தின் மற்றவ நபர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

புதிதாக தொற்று பெற்ற இளம் தாய்மார்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்று ஏற்படாமல் தன் குழந்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கோவிட் தொற்று இல்லாத ஒரு நபர் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அல்லது அந்த பாலூட்டும் தாய் தனது பாலை அழுத்திப் பிரித்தெடுத்து குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும். குழந்தையை கவனித்து கொள்வதற்கு வேறு யாரும் இல்லையென்றால், தாய் இரண்டு முகக்கவசம் மற்றும் முகம் மறைக்கும் படியான ஷீல்டு அணிந்து, கைகளைக் கழுவி, தனது சுற்றுப்புறங்களைத் தவறாமல் சுத்தம் செய்து பாலூட்ட வேண்டும். குழந்தையின் சரியான போசாக்கு மற்றும் வளர்ச்சிக்கு தாயின் பால் முக்கியமானது. பாதிக்கப்பட்ட தாயின் பாலில் கரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உள்ளன.

கோவிட்-19 நோய்த்தொற்று வராமல் பாதுகாக்க கோவிட்-19 லிருந்து காத்துக்கொள்ளும் பொருத்தமான நடத்தைகளைப் பின்பற்ற பெரியவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்?

வளர்ந்த குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கோவிட்-19 லிருந்து காத்துக்கொள்ளும் பொருத்தமான நடத்தைகளைப் பின்பற்றலாம்.

2 வயதுக்குக் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. உண்மையில் 2 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் முகக்கவசம் அணிவது கடினம் என்பதை நாங்கள் கவனித்து இருக்கிறோம். எனவே, அவர்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது நல்லது. ஆனால் குழந்தையின் மன மற்றும் உடல் வளர்ச்சிக்கு முதல் ஐந்து ஆண்டுகள் மிக முக்கியமானவை என்பதால் அவர்களை விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த மறவாதீர்கள்.

18 வயது நிரம்பிய நிரம்பிய மற்றும் அதற்கும் மேற்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தடுப்பூசி போட வேண்டும். பெரியவர்கள் பாதுகாக்கப்பட்டால் நம் குழந்தைளும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசி பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவர்களும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

(குழந்தை இரைப்பைக் குடல் ஆய்வாளரும் தேசிய கோவிட்-19 பணிக்குழுவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் நரேந்திர குமார் அரோராவுடன் யுனிசெஃப் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x