Published : 10 Mar 2021 10:53 AM
Last Updated : 10 Mar 2021 10:53 AM
நான் அரசு பொது மருத்துவமனையில் உதவி மருத்துவராக இருந்தேன். வாரம் ஒரு முறை 24 மணி நேரம் வேலை. காலை 7 மணிக்குப் புற நோயாளிகள் பிரிவில் தொடங்கி, அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் கவனிக்க வேண்டும். அதன் நடுவில் மாணவர்களுக்குப் பாடம்; வகுப்பறையில் அல்ல. ஒரு நோயாளியை எப்படிப் பரிசோதித்து, புத்தகத்திலும் வகுப்பறையிலும் கற்றவை மூலம் நோய்க் காரணம், அறிகுறிகள், சிகிச்சை முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும். சந்தேகம் கேட்கும் மாணவரிடமே மறு கேள்வி கேட்டு அவர் வாயிலிருந்தே பதிலை வரவழைப்பது எனக்குப் பிடிக்கும்.
பிற்பகல் 2 மணியிலிருந்து எல்லா மருத்துவ வார்டுகளிலும் எந்தத் தேவையானாலும் என் பொறுப்புதான். மாலையில் பார்வையாளர்கள் போன பிறகு இளநிலை மருத்துவர்களும் (ஹவுஸ் சர்ஜன்ஸ்) மேற்படிப்பு (எம்.டி.) படிக்கும் மாணவர்களும் புடைசூழ எல்லா வார்டுகளுக்கும் நான் போய் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளைப் பார்வையிடுவேன். மாணவர்களோடு விவாதிப்பதும், நடுநடுவே நகைச்சுவையாய் ‘கலாய்’ப்பதுமாக நேரம் போகும்.
இரவு 9 மணிக்கு எங்கள் வார்டில் மேஜையைச் சுற்றி அமர்ந்து இது தொடரும். சில சமயம் உட்காரக்கூட நேரமின்றி வேலைச்சுமை இருக்கும். 10 மணிக்கு மேல் ‘டீ தாகம்’ என்றும் ‘கேட் டீ’ (gate tea) என்றும்
சலசலப்பு தொடங்கும். அதென்ன ‘கேட் டீ’ என்கிறீர்களா? மருத்துவமனையின் பிரதான வாயிலைத் தவிர வேறு ஒரு வாயில் உண்டு. அது மாலையில் பூட்டப்படும். அதன் நேர் எதிரில் ஒரு டீக்கடை உண்டு. அதில் இரவில் குட்டிக் குட்டி சமோசாக்கள் கிடைக்கும். (உள்ளே வெறும் வெங்காயம் மட்டும்தான்). இந்த கேட் அருகில் போய் கை தட்டினால் அந்தக் கடை நாயர், டீயும் சமோசாவும் கொண்டு வருவார். இதுதான் ‘கேட் டீ’. பில் என் உபாயம்.
ஒரு எதிர்பாரா நிகழ்வினால் இந்த வழக்கம் மாறிவிட்டது. மருத்துவமனைக்குச் சற்று தொலைவில் ‘புஹாரி’ உணவகம் இருந்தது. ஒருநாள் அதன் உரிமையாளரின் மகன் தீவிர நிலையில் அனுமதிக்கப்பட்டார். விடியற்காலை 4 மணி வரை எங்கள் குழு சிகிச்சை அளித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு இந்த ‘கேட் டீ’, ‘சமோசா’ விவரம் தெரிந்துவிட்டது. அடுத்த முறை எங்கள் ‘டியூட்டி’ தினம் வந்தபோது சரியாக இரவு 10 மணிக்கு ‘புஹாரி’யிலிருந்து சுடச் சுட டீயும் சமோசாவும் வந்தது. நல்ல புஷ்டியான சமோசாக்கள். உள்ளே உருளை மசாலா. இந்த விவரம் மற்ற வார்டுகளுக்கு ‘வைரல்’ ஆகப் பரவிவிட்டது. சிலர் இதைப் பங்கு போட்டுக்கொள்ள வரவும் செய்தார்கள். செவிலியர்களும் இந்த ‘டீ சமோசா’வை அனுபவித்தார்கள்.
நிலைமை கட்டுக்குள் இருக்கும் இரவுகளில் பின்னிரவு 2 மணிக்கு நான் என் அறைக்கு ஓய்வெடுக்கச் செல்வேன். தொலைபேசியில் விவரங்களைத் தெரிவிப்பார்கள். அவசியமானால் நான் நேரில் செல்வேன். அன்று விடியற்காலை 4 மணிக்கு ஒரு பெண்மணியைப் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவிலேயே விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டு அவர் நிலைமை சாதாரணமாக இருப்பதாகவும் எனக்குத் தெரிவித்தார்கள். நான் காலை 6 மணிக்கு போய்ப் பார்த்தபோது அவர் வராந்தாவில் போர்த்திப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
காலை 9 மணிக்கு நான் வழக்கம்போல் வேலைக்கு வந்தபோது அந்தப் பெண் உட்கார்ந்து முனகிக் கொண்டிருந்தார். நெற்றியில் முத்து முத்தாக வேர்வை. எனக்கு ‘ஷாக்’. அந்த நேபாளி பெண்மணி நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலியில் இருந்தார். 4 மணிக்கு அவரை வார்டில் அனுமதித்த மருத்துவர் பாம்புக் கடியைப் பார்த்தாரே தவிர மேடிட்ட வயிற்றைக் கவனிக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு நேபாளி மொழியைத் தவிர வேறு தெரியாததால் வந்த வினை. நான் மடமடவென்று சுற்றும் திரையிட்டு கையில் உறையிட்டு அவரைப் பரிசோதித்தால் இன்னும் அரை மணியில் பிரசவம் ஆகும் நிலை! என்னதான் மகப்பேறு மருத்துவத்திலும் ‘கோல்ட் மெடலிஸ்ட்’ ஆக இருந்தாலும் நான் பிரசவம் பார்த்து 20 வருடங்களாவது ஆகியிருக்கும். படித்ததை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து, கூடவே கர்பரக்ஷாம்பிகையை வேண்டிக்கொண்டு வேலையில் இறங்கினேன்.
திடீரென்று ஒன்று நினைவுக்கு வந்தது. பிரசவித்த உடனே ஒரு ஊசி போட வேண்டும். இது கர்ப்பப்பையின் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். உயிர் காக்கும் மருந்து என்றே சொல்லலாம். இந்தப் பொது மருத்துவமனையில் அது இருக்காதே! குழம்பிப் போனேன். எனக்கு உதவிக்கொண்டிருந்த செவிலி நல்ல அனுபவசாலி. ‘‘டாக்டர், நான் இந்த மருந்தை நுரையீரல் அறுவை சிகிச்சையின்போது உபயோகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்’’ என்று கூறி உடனே ஓடினார். அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்து அந்த மருந்தைக் கொண்டுவந்தார். அதற்குள் பிரசவமாகி நஞ்சு வெளியாகிக் கொண்டு இருந்தது. அந்த ஊசியைச் செலுத்திவிட்டு, பிடித்திருந்த மூச்சை விட்டேன். அப்போதுதான் இந்தப் பெண்ணின் கணவர் கையில் ஒரு குழந்தையைப் பிடித்துக்கொண்டு திகைத்து நிற்பதைக் கண்டேன்.
அதற்குள் வார்டில் உள்ள நடமாடும் நோயாளிப் பெண்கள் கூடி குழந்தைக்கு துணி, அந்தப் பெண்ணுக்குத் துணி எல்லாம் பரபரவென்று ஏற்பாடு செய்துவிட்டார்கள். அழகான துணியில் 2 ஓட்டைகள் செய்து ஒரு குழந்தை உடுப்புகூட தயார்! ஆம்புலன்ஸில் தாயாரையும் குழந்தையையும் துணையுடன் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு உட்கார்ந்தேன். அம்பிகை கைவிடவில்லை!
இந்த ‘டிராமா’ என் மனதில் இதுபோன்ற வேறொரு நிகழ்வை நினைவுபடுத்தியது. வேறொரு மருத்துவமனையில் இரவு நேரப் பணி. ஒரு நோயாளி தீவிர நிலையில் புரண்டு புரண்டு ‘பாத்திமா... பாத்திமா... எனக்கு அவளைப் பார்க்கணும்’ என்று அனத்திக் கொண்டு இருந்தார். அவருடைய மனைவி பிரசவத்துக்காக மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இங்கே சேர்க்கப்பட்டிருந்தார். நாடித்துடிப்பு சரியாகாத நிலையில் அவருக்கு வீரியமான தூக்க மருந்து அளிக்க முடியாது. அரைகுறை மயக்கத்தில் அவர் ‘‘டாக்டரம்மா... என்னைப் போக விடு. உனக்குப் பணம் தருகிறேன்’’ என்றார். என் உதவியாளர் அவரிடம் ‘‘உன்னிடம் ஏது பணம்?’’ என்று விளையாட்டாகக் கேட்டார்.
உடனே அவர், ‘‘நான் நன்றாகச் சீட்டாடுவேன். டாக்டரம்மா என்னுடன் விளையாட வாருங்கள். சீட்டாடி ஜெயித்துப் பணம் தருவேன்’’ என்றார். பிறகு அதையே பிடித்துக்கொண்டு ‘சீட்டாட வாருங்கள்’ என்று மறுபடியும் மறுபடியும் பினாத்திக்கொண்டே இருந்தார். அவர் வேதனையைத் தாங்க முடியாமல் நான் அந்த மகளிர் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு விவரம் கேட்டேன். சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம் என்று அறிந்து இவரிடம் கூறியவுடன் அவர் மெல்ல உறங்கத் தொடங்கினார். உடல் நிலையும் முன்னேறத் தொடங்கியது.
நான் மறுநாள் காலை 9 மணிக்கு வார்டில் நுழைந்தபோது அவர் அசட்டுச் சிரிப்புடன் படுத்திருந்தார். சக நோயாளிகளும், செவிலியரும், ‘‘யோவ், டாக்டரம்மா வந்தாச்சு. சீட்டைக் களைத்துப்போட்டு ஆடுறயா?’’ என்று கேலி செய்யத் தொடங்கினார்கள். அவருக்கு இரவில் பேசியது ஒன்றுமே நினைவில்லை. அவர் குணமாகி வீடு திரும்பி ஒரு மாதம் கழித்து மறு பரிசோதனைக்காக வந்தபோது அவர் கையில் ஒரு காகிதப் பொட்டலம். நான் ‘‘என்ன சாயபு... சீட்டுக் கட்டா? விளையாடலாமா?’’ என்று கேட்டதும், அவர் நாணத்துடன் என் கையில் அந்தப் பொட்டலத்தைத் திணித்தார். அதனுள் 4 லுங்கிக் கை குட்டைகள். அவர் லுங்கி நெசவாளி. தானே நெய்தவற்றை எனக்குப் பரிசளிக்க விரும்பினார். நான் வேண்டாம் என்று மறுக்க நினைத்த அந்த கணத்தில் என் மனதில் பளீரென்று ஒரு நினைவு.
பல வருடங்களுக்கு முன், நான் இளநிலை மருத்துவராக இருந்தபோது ஒரு ஏழை விவசாயி அளித்த பரிசு பற்றிய நிகழ்வு. அந்த விவசாயிக்கு உணவுக்குழாயில் கட்டி. அதனால் கழுத்திலிருந்து வயிறு வரை அது அகற்றப்பட்டு இருந்தது. வயிற்றில் ஒரு குழாய் வழியாகத் திரவ உணவு கொடுக்கப்படும். அவரது மனைவி சில நாட்களுக்கு ஒரு முறை
வருவார். வரும்போது மீன் குழம்பு, பூண்டுத் துவையல் என்று கொண்டுவருவார். திட உணவு உண்ண முடியாதவருக்கு இவை எதற்கு என்று நான் குழம்பி, அந்த நோயாளியிடமே கேட்டேன். அவருடைய பதில் என்ன தெரியுமா? ‘‘அம்மா... என் வாய்க்கும் வயிற்றுக்கும் தான் தொடர்பு இல்லை. ஆனால், என் நாக்குக்கும் மனசுக்கும் தொடர்பு இன்னும் இருக்கே? என் நாக்கு இதையெல்லாம் கேட்கிறது. அதனால், நான் இதையெல்லாம் வாயில் போட்டுச் சுவைத்து துப்பி விடுகிறேன். எனக்குத் திருப்தியாக இருக்கு’’ என்றார்.
அவர் வீடு திரும்பும் நாளன்று அவர் மனைவி ஒரு பை நிறைய காய்கறிகள் கொண்டு வந்தார். அதை எனக்குக் கொடுக்கவந்தார். நான் விடுதியில் தங்கியிருந்தேன். பிடிவாதமாக அதை ஏற்க மறுத்தபோது, ‘‘அம்மா... நாங்கள் ஏழைகள். பணம், காசு கொடுக்க முடியாது. இது எங்க தோட்டத்தில் விளைஞ்சது. ஒரு நன்றிக்காக சந்தோஷமாய் கொடுக்கிறோம். வாங்கிக்கோங்க’’ என்றார் என் கையைப் பிடித்துக் கொண்டு. எனக்குப் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது.
அந்த நிகழ்வையும் இந்த லுங்கி கைக்குட்டைகளையும் ஒருசேர நினைத்தேன். உடனே அவர் கையைப் பிடித்து ‘‘இந்த மாதிரியான லுங்கிக் கைக்குட்டைகள் என் கணவருக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றேன். அப்போது அவரது இதழ் ஓரத்தில் தொடங்கி, கன்னத்தைக் கடந்து விழிகளில் ஆனந்தப் புன்னகை.
கொடுப்பதில் மட்டுமல்ல, ஏற்பதிலும் ஒரு கண்ணியம் வேண்டும். அது மகிழ்ச்சி அளிக்கும்.
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT