Published : 30 Dec 2020 11:19 AM
Last Updated : 30 Dec 2020 11:19 AM
குரங்குகள் புத்திசாலித்தனமான சேட்டைகள் செய்யும் என்று தெரியும். வீட்டில் மண்ணெண்ணெய் ‘டின்’ ஒன்று இருந்தது. மேலும் கீழுமாய் அடித்துக் குப்பியில் எண்ணெய் நிரப்பும் ‘பம்ப்’ நினைவிருக்கிறதா? ஒருமுறை குரங்கு ஒன்று சாமான் அறையில் புகுந்து இந்த ‘பம்ப்’பை அடித்து தரை முழுவதும் மண்ணெண்ணை ஆக்கி, பாத்திரத்தில் இருந்த அரிசி மாவைத் தரையில் தூவி, லூட்டி அடித்துவிட்டது. மற்றொரு முறை குரங்கு ஜன்னல் வழியாகப் புகுந்து பற்பசையை நீளமாகப் பீச்சி விட்டு, இருமல் ‘சிரப்’ குப்பியைத் திறந்து ருசி பார்த்துக் கொண்டிருக்கும்போது, நான் உள்ளே நுழைய அது குப்பியை போட்டுவிட்டு ஓடியது. நல்லவேளை... குப்பி பிளாஸ்டிக்கினால் ஆனது. உடையவில்லை. ‘சிரப்’பையும், பற்பசையையும் சுத்தம் செய்ய நேர்ந்ததே ஒழிய கண்ணாடித் துகள்களை அகற்றும் சிரமம் ஏற்படவில்லை.
அக்கா வீட்டில் முன்புறம் தோட்டத்தில் இரண்டு இலவம் பஞ்சு மரங்கள். இதில் காய்கள் முற்றி வெடித்துள்ள காலம். குரங்குகள் வந்து பஞ்சைப் பிய்த்து அதனுள் உள்ள விதைகளை ஆவலாகத் தின்றன. அவற்றை விரட்ட முற்பட்டபோது, ‘‘அம்மா... விடு.. இவை என் வேலையைச் சுலபமாக்குகின்றன. இனி பஞ்சை மட்டும் பொறுக்கி சுத்தம் செய்யும் வேலையின்றி நான் தலையணைகள் செய்ய முடியும்’’ என்றார்கள். இதை நாங்கள் முன் வராந்தாவில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்ன நடந்தது தெரியுமா? நானே இதை நேரில் பார்த்ததால்தான் நம்பினேன்.
ஒரு தாய்க்குரங்கு, அதை மார்பில் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு குட்டிக் குரங்கு. வீட்டின் முன் ஒரு அல்லிக்குளம் (அநேகமாக இலைகள்தான் இருக்கும்) இந்தத் தாய்க்குரங்கு தாகம் தீர்க்க அந்தக் குளத்தின் சிமென்ட் விளிம்பில் அமர்ந்து குனிந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கியது. நீரின் அளவு கீழாக இருந்ததால், அதிகம் குனிந்தது. உடனே குட்டி ‘கீச் கீச்’ என்று சப்தமிட்டது. தாய் சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தது. அதிகம் குனிந்ததால் குட்டியின் காதுகளில் நீர் புகுந்து விட்டது. தாய்க் குரங்கு குட்டியின் காதைப் பிடித்து ஊதியது! நம்பவே முடியவில்லை.
குரங்கு மட்டுமல்ல, பாம்புகளும் தெய்வமாகப் போற்றப்படுகின்றன. என் மகளுக்கு ஐந்து ஆறு வயதிலிருந்தே பாம்புப் பண்ணைக்குப் போய் அவற்றைப் பார்ப்பதில் மிக்க ஆர்வம். வெளியே போகலாமா என்று கேட்டால், விரலை உயர்த்தி 'Snake Park'-குக்கா என்பாள். அங்கே பாம்புகளைப் பற்றி விளக்குபவர்கள் விஷமில்லா பாம்புகளைக் குழந்தைகளைத் தொடச் சொல்லியும், கையில் கொடுத்தும் பயத்தைப் போக்குவார்கள். என் மகள் கண்டிப்பாகக் கை நீட்டுவாள். ஒரு முறை பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டாள். ‘சில்க் மாதிரி இருக்கு’ என்றாள்.
இதே பெண்ணுக்குப் புழுக்களைக் கண்டால் பயம். அருவருப்பு. மல்லிகைப் பூவிலும், காலிபிளவரிலும் உள்ள சின்ன பச்சைப் புழுவைக் கண்டு அலறுவாள். ஒருமுறை என் மாமியார் அறையில் ஒரு பச்சைப் பாம்பு கொடியில் சுற்றியிருந்தது. அதை இவள் லாவகமாகப் பிடித்துப் பையில் போட்டு சைக்கிளில் போய் பாம்புப் பண்ணையில் விட்டாள்.
இந்த மாதிரி பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் மகளுடைய, புலிக்குட்டியைத் தோளில் போட்டிருக்கும் மகனுடைய புகைப்படங்களும் வேறு யாரிடமாவது இருக்குமா என்பது சந்தேகம்.
என் மாமியார் தன் தம்பியைப் பற்றி ஒரு பாம்புக் கதை சொல்வார். பள்ளிப் பருவத்தில் தம்பி ஒருநாள் ஜன்னல் அருகில் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தாராம். தற்செயலாக ஜன்னல் பக்கம் பார்த்தபோது ஒரு பாம்பு படுத்துக்கொண்டிருந்தது. அது விஷமற்ற சாரைப் பாம்பு என்று நினைத்து பென்சிலால் தட்டியபோது, அது நகரவில்லை. இரை தின்ற மயக்கமோ என்னவோ. மீண்டும் மீண்டும் தட்டியபோது அது மெதுவாக உள்ளே இறங்கி, தரையில் வாயிலை நோக்கி ஊர்ந்தது. மேலே பென்சிலால் தட்டியவாறே அதைத் தொடர்ந்தார். வாயிற்படியை பாம்பு கடந்தபோது வெளியே ஒரு சப்தம். உடனே இந்த ‘சாரைப்பாம்பு’ தலையைத் தூக்கி படம் விரித்தது. மாமா அலறிப் புடைத்துக் கதவைச் சாத்தினாராம். மிருகங்கள் பயத்தின் வாசனையை முகரும் என்று கேட்டிருக்கிறேன். மாமா பயப்படுத்தாதவரை பாம்பு கொடூரத்தைக் காட்டவில்லை. வெளியே சப்தம் அதை பயப்படுத்தியபோது படம் எடுத்துவிட்டது.
சமீபத்தில் கூடலூரில் ஒரு பாம்பு அனுபவம். ஒரு வீட்டுக்கு மாலையில் போயிருந்தேன். அந்த வீட்டு அம்மையார் தன் அறைக்குள் ஏதோ எடுக்கப் போனவர் அலறிக்கொண்டு வெளியே வந்துவிட்டார். உள்ளே போய்ப் பார்த்தால் ஒரு பாம்பு அவர் படுக்கையில் நீண்டு படுத்திருந்தது. எங்களுடன் ஒரு ஆதிவாசி இளைஞர் இருந்தார். அவர், அது விஷமற்ற பாம்பு என்று கூறி, மேலே ஒரு துணியைப் போட்டு லாவகமாகப் பிடித்து வெகு தொலைவில் விட்டுவிட்டு வந்தார். பிறகு சொன்னார்: ‘‘நல்ல கோடைக்காலம் (100 டிகிரி ஃபாரன்ஹீட்). ஜன்னல் அருகில் செடிகள் இருந்தால் பாம்புகள் ஏறி வரும். வெறும் சுவரில் ஏற முடியாது’’. ‘சேஷசயனம்’ கேட்டிருக்கிறோம். இங்கு ‘சேஷமே’ சயனித்துக்கொண்டிருந்தது.
இன்னும் பலப்பல அனுபவங்கள். தண்ணீர் தொட்டியில் இறங்கிவிட்டுக் குளிக்கத் தயங்கும் புறா, ஒரு கால் வளைந்துள்ள காகம், ஒரு பாதமே இல்லாத ஒரு புறா, தினந்தோறும் சரியாக இரண்டு மணி சுமாருக்கு தொலைவில் உள்ள மரத்தைக் கொத்தும் மரங்கொத்தி, பல நாட்களில் மாலை நான்கு மணிக்கு வரும் மீன்கொத்தி, ‘மாடல்’ அழகி வீசிவிடும் புடவைத் தலைப்பைப் போல் அந்த மீன் கொத்தி சிறகு விரிக்கும்போது, ஒளிரும் அந்தப் ‘பளீர்’ நீலம்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எந்தன் இறைவா! மனத்தைத் திறந்து சுற்றுச் சூழலைக் கவனித்தால் என்னவெல்லாமோ பார்க்கலாம்.
ஆமாம், ஒரு சந்தேகம். ஒருசில குணம் கெட்ட மனிதரை நாம் ‘மிருகம்’ என்று ஏன் வர்ணிக்கிறோம்? எனக்குப் புரிவதில்லை. விலங்குகள் துரோகம் செய்வதில்லை. தன் இனத்தைத் தானே கொன்று தின்பதில்லை. பசி தீர்க்கவோ, தன்னையோ, தன் குட்டிகளையோ காப்பாற்றிக் கொள்ளவோதான் வேட்டையாடுகின்றன. மனித குலம் அப்படியா?
விஞ்ஞான வளர்ச்சியால் ஒரு அறையில் அமர்ந்து கண்ணுக்குத் தெரியாத, யாரென்றே தெரியாதவரை பல்லாயிரக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்து ஒரு பட்டனைத் தட்டி சாம்பலாக்கி விடுகிறோம்.
இன்னொன்றை யோசித்திருக்கிறீர்களா? மனிதன் உண்ணும் மாமிசங்கள் எல்லாம் சைவ உணவு உண்ணும் மிருகங்களிலிருந்துதான். ஒரு புலி, சிங்கம் அல்லது ஒரு ஓநாயையோ தின்பதில்லை.
ஐந்தே அறிவு என்று நாம் நினைக்கும் ஜீவராசிகள் சமயோசிதமாக எவ்வளவு ரசிக்கும் செயல்களைச் செய்கின்றன! ஆனால் ஆறறிவு கொண்ட பிறவி எடுத்ததினால் அல்லவா நாம் இவற்றை ரசிக்க முடிகிறது. இறைவா... நன்றி!
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT