Published : 10 Dec 2020 12:32 PM
Last Updated : 10 Dec 2020 12:32 PM

சர்வதேச மனித உரிமைகள் தினம்: ஆட்கடத்தல் மற்றும் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு; செயல்படத் தேவையான மாற்றங்கள்

முனைவர் ப. பாலமுருகன்

பின்னணி

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. மனிதக் கடத்தல் என்பது மனிதர்களின் அனைத்து உரிமைகளையும் மீறுவதாக இருக்கிறது. மனிதக் கடத்தல் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல், கட்டாயத் திருமணம், தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், அடிமைகளாக வைத்திருப்பது போன்ற பல காரணங்களுக்காகப் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். இது தனிமனித அடிப்படை உரிமைகளை மீறும் குற்றமாகும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தால், 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல்” குறித்த ஆய்வறிக்கை, காவல்துறை அலுவலர்கள் மத்தியில் கடத்தல் குற்றம் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது; கொலை, திருட்டு, பாலியல் துன்புறுத்தல்கள், சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பதால் கடத்தல் குற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லை என்று சுட்டிக்காட்டியது.

இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் மற்றும் UNODC (united nations office for drugs and crime) இணைந்து கூட்டு முயற்சியாக, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் இந்தியாவில் மனிதக் கடத்தலுக்கான சட்ட அமலாக்கத்தைப் பலப்படுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தை ஏப்ரல் 2006 ஆண்டு முதல் செயல்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு, கடத்தலுக்கான மூலம் (Source), பயண இடைநிலை (Transit), சேருமிடம் (Destination) என மூன்று நிலைகளிலும் முக்கியத்துவம் வகிக்கும் ஐந்து மாநிலங்கள் - மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிஹார் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.

இத்திட்டத்தின் பங்களிப்பாக, 12 வகையான பயிற்சிக் கையேடுகள் - ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கிச் செயல்படுத்த நெறிமுறைகள் (protocol) மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (Standard Operating Procedures) உருவாக்கப்பட்டு, அனைத்துக் காவலர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. இத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக ஆட்கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டது. இதனால், இது ஒரு முன்மாதிரி திட்டமாக உருவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்க அரசு திட்டமிட்டது.

நோக்கங்கள்

மனிதக் கடத்தல் (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்) குற்றத்தின் அனைத்துக் குற்றவியல் அம்சங்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்தல்; தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில், சட்டம், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் வழக்கின் அம்சங்களில் பயிற்றுநர்களுக்கான பயிற்சி (Training of Trainers) அளித்தல்; தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் மனிதக் கடத்தல் குற்றவியல் செயல்பாடு குறித்த விரிவான தரவுகளை உருவாக்குதல்; ஒரு அறிவுக் களஞ்சியமாகவும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நோடல் புள்ளியாகவும் செயல்பட ஒரு கடத்தல் தடுப்பு இணைய முகப்பு (Portal) உருவாக்குதல்; இணையதள அடிப்படையிலான இணைய முகப்பு / தரவுத்தளங்கள்: மின்னஞ்சல்கள், அலைபேசிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / உதவி எண்கள் ஏற்படுத்துதல்; மனிதக் கடத்தலுக்கு எதிராகச் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளை மற்ற பங்காளர்கள், மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், சிறந்த செயல்பாடுகளை (Best Practice) மற்றவர்களும் செய்ய ஊக்குவித்தல்; சட்ட அமலாக்கத் துறை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நிபுணத்துவம், உட்கட்டமைப்பு மற்றும் அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்; நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை (Standard Operating Procedures) செயல்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இப்பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவின் பொறுப்புகள்

ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் நிலையமாக அங்கீகரிக்கப்படவில்லை. எந்தப் பகுதியில் கடத்தல் குற்றங்கள் நிகழ்கின்றனவோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் மூலமாக வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரிவு, தடுப்பு (prevention), பாதுகாப்பு ( protection) மற்றும் வழக்குத் தொடரும் (prosecution) பணிகளைச் செய்ய வேண்டும்.

மனிதக் கடத்தல் குற்றங்களைக் கையாளுவதில் கவனம் செலுத்துவது மற்றும் அனைத்துப் பங்காளர்களுடன் இணைந்து ஒரு பன்முக அணுகுமுறையை கடைப்பிடிப்பதை உறுதி செய்தல்; கடத்தல் குற்றங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் (Organised Crime) கருதி முறையாகக் கையாளுதல்; காவல்துறைக்குள்ளும், பிற துறையினருடன் துறைசார் ஒருங்கிணைப்பைக் கொண்டுவருதல்; எ.கா – சமூகநலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, சைல்ட் லைன், குழந்தைகள் நலக் குழு, சுகாதாரத்துறை போன்றவை; பாதிக்கப்பட்டவரை மையமாகக்கொண்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துதல்; செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் சிறந்த நலனுக்காக (Best Interest of the Victim) இருக்க நடவடிக்கை எடுத்தல்; மீண்டும் அவர்களை பாதிப்புக்குள்ளாகாத வண்ணம் பாதுகாத்தல்; பாலின மற்றும் குழந்தை உரிமைகள் உணர்வுத் திறனுடன் செயல்படும் அணுகுமுறையை உறுதி செய்தல்; அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தகவல் பெற்று, ஒருங்கிணைத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்; கடத்துபவர்கள் / கடத்தல் கும்பல்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் தரவுகளை மாவட்ட / மாநில அளவில் குற்ற ஆவணக் காப்பகத்திற்கு அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் குறித்து தேசிய அளவில் விரிவான தரவுகளைக் கொடுத்து குற்றம் குறைய வழிவகை செய்தல் போன்ற செயல்பாடுகள் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கியப் பொறுப்பாக இருக்கின்றன.

உட்கட்டமைப்பு வசதிகள்

ஐந்து மாநிலங்களில் முன்மாதிரி அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் முடிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தனி அலுவலகம், போதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும். 10 இருக்கைகள், ஒரு கணினி மேஜை, புத்தகம் மற்றும் ஆவணங்கள் வைக்கத் தேவையான அலமாரி, அலைபேசி இரண்டு, (தலா ரூபாய் 3000 மதிப்பில்) டிஜிட்டல் கேமரா, ஒரு நான்கு சக்கர வாகனம் (ஓட்டுநர் மற்றும் எரிபொருள் மாநில அரசுகளின் பொறுப்பு), இருசக்கர வாகனம், தொலைபேசி இணைப்பு (அதிவேக இணையதள இணைப்பு வசதியுடன்), மேசைக் கணினி, சட்டம் சார்ந்த புத்தகங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும். இத்துடன் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அதன்பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, துணி, மனநல ஆலோசனை, வழக்குச் செலவு, போக்குவரத்துச் செலவு போன்ற செலவினங்களுக்கு தேவையான நிதி வருடத்திற்கு ஒரு லட்சம் கொடுக்கப்படும்.

அமைப்பு

ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு, ஆட்கடத்தலைத் தடுக்கவும் மற்றும் எதிர்த்துப் போராடவும் உருவாக்கப்பட்ட ஒரு குழு ஆகும். பயிற்சி பெற்ற உணர்திறனுடைய காவல் அலுவலர்கள் இக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும். இப்பிரிவில் குறைந்தபட்சம், ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு தலைமைக் காவலர், இரண்டு காவலர்கள் இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம். இவர்களுடன் சமூகநலத்துறை, தொழிலாளர் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் வழக்கு விசாரணை (prosecution ) தரப்பில் தலா ஒரு பிரதிநிதிகள் தேவையின் அடிப்படையில் உறுப்பினர்களாக இருக்கலாம். மேலும் இக்குழுவில் உள்ளூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினராக இருக்கலாம்.

தமிழகத்தில் இப்பிரிவின் நிலை

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்க 4/ 6 /2009 அன்று உத்தரவிடப்பட்டது. ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், நான்கு தலைமைக் காவலர்கள் மற்றும் நான்கு காவலர்களுடன் (50% பெண் காவல் அலுவலர்கள்) இருக்க வேண்டும். ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ஒருவர் கூறும்போது, “தொடக்கக் காலத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது; தீவிரமாகப் பணிகளைச் செய்தோம்; குழந்தைகள் இல்லங்களைச் சென்று பார்த்து பதிவு பெறாத இல்லங்களை மூட நடவடிக்கை எடுத்தோம்; குழந்தைக் கடத்தலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளையும் எடுப்போம்; தொடக்கக் காலத்தில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டாலும் காலப்போக்கில் பயிற்சி தருவது நிறுத்தப்பட்டு விட்டது; பெரும்பாலான காவல் அலுவலர்களுக்கு இதன் பின்னணியும் நோக்கமும் தெரிவதில்லை; மேலும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு பெரும்பாலும் பாலியல் சுரண்டல்களுக்காக கடத்தப்படுபவர்களை மட்டுமே கருத்தில் கொள்கிறது; வேலைக்காக கடத்தப்படுபவர்கள் இவர்களது இலக்கில் இருப்பதில்லை என்றார். மேலும், தற்போது இந்த அமைப்புகள் பெயரளவில் இருப்பதாகவும் அதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்றும், அதன் செயல்பாடுகளை யாரும் கண்காணிப்பதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

கடந்த 12/08/2016 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தன் உத்தரவில் (HCP 881/2016), குழந்தைகளை யாருக்கும் தெரியாமல் தூக்கிச்செல்லும் (Child Lifting) பல வழக்குகள் மாநிலம் முழுவதும் நிலுவையில் இருப்பதையும், ஆட் கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்யப் போதிய மனித வளம் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குள்ளாக, குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவை போதிய காவலர்களுடன் உருவாக்குவதன் மூலம் குழந்தைக் கடத்தல் குறித்தும், காணாமல் போன குழந்தைகள் குறித்தும் தீவிர விசாரணை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க இயலும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலின்படி ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் இரண்டு கிரேடு-1 காவலர்களுடன் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக 43 ஆய்வாளர் பதவிகள் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டன. மேலும் அனைத்து மாநகரங்கள், மாவட்டங்கள் மற்றும் ரயில்வேயில், 0 1/ 06/2017 முதல் இந்தப் பிரிவு செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. புதிதாக ஆய்வாளர் நியமிக்கப்படும் வரையில் தற்போது ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தலைமையேற்று வழி நடத்துவார் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அமைப்புகளும் நடைமுறையில் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau) புள்ளிவிவரத்தின்படி, 2016ஆம் ஆண்டு 434 வழக்குகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2017- ல் 13 வழக்குகளுடன் 18-வது இடத்திலும் 2018-ல் வெறும் 8 வழக்குகளுடன் 21-வது இடத்திற்கும் 2019-ல் 16 வழக்குகளுடன் 19-வது இடத்திற்கும் வந்திருக்கிறது.

சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு ஒரு வழக்குகள் கூட பதியப்படாத நிலை, இந்த அமைப்புகளின் செயல்பாட்டைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பெரும்பாலான குழந்தைகள் ரயில் போக்குவரத்து மூலமாகக் கடத்தப்படுகிறார்கள். ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில், கடத்தல் வழக்குகள் ஒன்று கூட தமிழக ரயில் நிலையங்களில் பதிவாகவில்லை. 2019 -ல் வெறும் இரண்டு வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளன.

காணாமல் போன குழந்தைகளைப் பொறுத்தவரை தமிழகம் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இது குறித்து விசாரணைகளை முழுமையாக மேற்கொள்வது போல் தெரியவில்லை. பெயரளவுக்கு இந்தப் பிரிவுகள் செயல்பட்டால், ஆட்கடத்தல் மற்றும் குழந்தைக் கடத்தலைத் தடுக்க முடியாது போகும்.

இதற்கு முன்பு பேரிடர் கால அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பேரிடர் காலங்கள் மற்றும் அதற்குப் பின்பும், பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் பல்வேறு காரணங்களுக்காகக் கடத்தப்படுவது உறுதியாகக் தெரிகிறது. ஆகவே அதைத் தடுக்க முயற்சி எடுக்க வேண்டியது அவசியம். தற்போதுள்ள ஆட்கடத்தல் பிரிவுகளில் மனித வளம் இல்லாதது அல்லது மாற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, நிதி ஒதுக்கீட்டின்மை, திறன் வளர்ப்புப் பயிற்சி இல்லாதது, அவர்கள் வேலையின் தன்மை புரியாதது போன்ற பல பிரச்சினைகள் இருப்பதால், ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவும் செயல்படுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் களையப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டால் மட்டுமே கடத்தலைத் தடுக்க முழு முயற்சிகள் எடுக்க முடியும். தற்போதுள்ள ஆட்கடத்தல் பிரிவு சிறப்பாகச் செயல்பட கீழ்க்கண்ட பரிந்துரைகளை அரசு செயல்படுத்த வேண்டும்.

பரிந்துரைகள்

ஏற்கெனவே காவல் நிலையங்களில் காவலர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. ஆகவே ஆட்கடத்தல் மற்றும் குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கென்று புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு உணர்திறனுடைய காவல் அலுவலர்களை பணியில் அமர்த்த வேண்டும்; திறன் வளர்ப்புப் பயிற்சிகள் குறிப்பிட்ட கால அளவில் வழங்கப்பட வேண்டும்; கடத்தலைத் தடுத்தல், பாதுகாத்தல் மற்றும் வழக்கு தொடர்தலில் அவர்களுக்குள்ள பங்கை உணர்த்த வேண்டும்; இவர்களின் செயல்பாடுகளை மேலதிகாரிகள் மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும்; நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைத் தமிழில் மொழிபெயர்த்து அனைத்து அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும்; உட்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி மற்றும் மீட்புக்குப் பின் தேவைப்படும் செலவினங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்; காணாமல்போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், 2013-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதலின்படி கடத்தப்பட்டவர்களாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், குழந்தைகள் நலக்குழு, காவல் நிலையங்களில் உள்ள குழந்தைகள் நலக் காவல் அலுவலர் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மனிதக் கடத்தல் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்; அரசு ரயில்வே காவலர்களுக்கு (கவர்மெண்ட் ரயில்வே போலீஸ்) உரிய பயிற்சிகள் வழங்கி வழக்குகளைப் பதியவும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால், விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது என்பதை வள்ளுவர் வினை செயல்வகை அதிகாரத்தில் கூறியுள்ளார்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

தமிழக அரசு இதை உணர்ந்து, தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தப்படுவதிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஆட்கடத்தல் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு மற்றும் தனி மனிதனின் அடிப்படைச் சுதந்திரத்தை காக்கும் கடமை அரசுக்கு உண்டு. போதிய மனிதவளம், நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள், கண்காணிப்பு, மற்ற துறையினருடன் இணைந்து செயல்படுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தினால் மட்டுமே ஆட்கடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் பிரிவுகள் சிறப்பாகச் செயல்பட முடியும்..

முனைவர் ப. பாலமுருகன்,

மனித உரிமைச் செயற்பாட்டாளர்,

தொடர்புக்கு: balaviji2003@gmail.com.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x