Published : 13 Oct 2020 08:13 AM
Last Updated : 13 Oct 2020 08:13 AM
சிறுவர்களிடம் நாம் இப்படி இந்தக் கதையைத் தொடங்கலாம். ‘ஒரே ஒரு கழிப்பறைக்கு ரூ.168 கோடி செலவிட்டிருக்கிறது நாஸா. அப்படி என்ன அதில் விசேஷம்?’ இது விண்வெளியில் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைச் சாதனம். சரி, அதற்கும் மேலே இந்தச் செய்தியில் என்ன விசேஷம்? இருக்கிறது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இன்று பயன்பாட்டில் உள்ள கழிப்புச் சாதனங்கள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேற்பட்டவை. இந்தப் புதிய கழிப்பறை இரண்டு தசாப்த ஆராய்ச்சிகளின் விளைவு!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இப்போதுள்ள கழிப்பறைகள் ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை. பொதுவில் கழிப்பறை என்று நாம் அழைத்தாலும், நாம் புவியில் பயன்படுத்தும் கழிப்பறைகளோடு இவற்றை அப்படியே ஒப்பிட முடியாது. புவியில் உள்ள கழிப்பறையில் கழிவுகளெல்லாம் கழிப்புக் குழி வழியாகக் கீழே சென்று புதைச்சாக்கடையிலோ கழிப்புத் தொட்டியிலோ சென்று சேர்ந்துவிடும். ஆனால், விண்வெளியிலோ ஈர்ப்புவிசை மிகக் குறைவு. மனிதர்கள், பொருட்கள் எல்லாம் மிதக்கும் இடம் அது. மேலும் புவியில் கிடைப்பதுபோல தட்டுப்பாடற்ற நீர் விநியோகம் அங்கு கிடையாது. ஆகையால், அங்குள்ள கழிப்பறைகள் ஒருவிதத்தில் கழிப்பறைகள்; மறுவிதத்தில் விண்வெளி வீரர்களுக்கான குடிநீர்த் தொட்டிகள். ஆம், மலத்தையும் சிறுநீரையும் தனித்தனியாகப் பிரித்து, சிறுநீரை மட்டும் மறுசுழற்சி செய்து விண்வெளி நிலையத்தின் குடிநீர் தேவைக்கு நீர் அளிக்கும் விதத்திலேயே இப்போதைய கழிப்புச் சாதனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
பயன்படுத்தப்பட்ட நீரை புவி எப்படி மறுசுழற்சி செய்துகொண்டிருக்கிறதோ அதே போன்றதொரு வழிமுறையை விண்வெளி நிலையமும் செய்துகொண்டிருக்கிறது. நீண்ட கால விண்வெளிப் பயணங்களின்போது நீர் போன்ற வளங்களின் தேவை மிக முக்கியமானதாக இருப்பதால் 90% நீரானது மறுசுழற்சி முறை மூலம் பெறப்படுகிறது. வியர்வைகூட மறுசுழற்சி செய்யப்படும். ஆகையால்தான் நாஸாவின் விண்வெளி வீராங்கனை ஜெஸிகா மெய்ரின் வேடிக்கையாக இப்படிக் கூறுவார், “இன்றைக்கு நாங்கள் குடிக்கும் காபிதான் நாளைக்கு நாங்கள் குடிக்கப்போகும் காபியாக மாறும்!”
புதிய மாற்றம்
சரி, இப்போதைய புதிய கழிப்புச் சாதனத்தில் உள்ள விசேஷம் என்ன? அது பாலின சமத்துவத்தைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் முதன்மையான விசேஷம். விண்வெளி வீரர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்திருப்பதால், இதுவரை உருவாக்கப்பட்ட கழிப்புச் சாதனங்கள் அதிகம் ஆண்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. புதிய கழிப்புச் சாதனம் பெண்களுக்கு ஏற்ற விதத்திலும், ஒரே நேரத்தில் சிறுநீரும் மலமும் கழிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கழிப்புச் சாதனத்துக்கு ‘அனைத்துலகக் கழிவு மேலாண்மை அமைப்பு’ (Universal Waste Management System) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் பெயருக்கேற்ப விண்வெளி நிலையத்திலும் சரி, வேறு விண்கலங்களிலும் சரி இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்வெளி நிலையங்களின் நீண்ட காலப் பயன்பாட்டுக்கும் இது உகந்தது; குறுகிய கால விண்வெளிப் பயணங்களுக்கும் இது உகந்தது.
விண்வெளி நிலையத்தில் இதில் கழிக்கப்படும் சிறுநீர் மறுசுழற்சி செய்யப்படும் என்றால், குறுகிய பயணங்களில் சிறுநீர், மலம் உள்பட எல்லாம் பொதிகளாக ஆக்கப்பட்டு, புவிக்குத் திரும்பும் வழியில் வளிமண்டலத்தில் எரிக்கப்பட்டுவிடும். இந்தக் கழிப்புச் சாதனத்தின் எடை வெறும் 45 கிலோ மட்டும்தான். இது 71 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. சிறுநீரில் உள்ள அமிலங்களால் அரிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக இது டைட்டானியத்தால் செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கழிப்புச் சாதனங்களைவிட இது 65% சிறியது, அவற்றில் பாதியளவே எடை கொண்டது. இந்தப் புதிய கழிப்புச் சாதனம் நிரந்தரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல. நிலவைத் தாண்டிச் செல்லும் விண்வெளிப் பயணம், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் பயணம் போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களைப் பயன்படுத்தச் செய்து வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அங்கே இந்தச் சாதனம் அனுப்பப்பட்டிருக்கிறது.
கல்பனா சாவ்லா கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்தக் கழிப்புச் சாதனம் மட்டும் அனுப்பப்படவில்லை, கூடவே அங்குள்ள பசுமைத் தோட்டத்துக்கென்று முள்ளங்கி விதைகள், 360 டிகிரி மெய்நிகர் கேமரா உள்ளிட்ட 3,600 கிலோ கொண்ட பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இவற்றைக் கொண்டுசெல்லும் கலத்துக்கு இந்தியத் தொடர்பொன்றும் இருக்கிறது. ஆம்! 1997, 2003 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விண்வெளி சென்றவரும், 2003-ல் புவிக்குத் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இந்தியருமான கல்பனா சாவ்லாவின் பெயர் இந்தக் கலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2 அன்று இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இவற்றையெல்லாம் படிக்கும்போது இந்தியர்களை வழக்கமான ஒரே கேள்விதான் திரும்பத் திரும்பச் சூழ்கிறது; எப்போது நூறு சத இந்திய வீடுகளிலும் நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் எனும் நிலைமையை நாம் எட்டப்போகிறோம், நம் சகோதரிகளின் கண்ணீருக்கு முடிவுகட்டப்போகிறோம்? பாலினச் சமத்துவம் கழிப்பறைகளிலும் பிரதிபலிக்கிறது!
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT