Published : 13 Oct 2020 07:23 AM
Last Updated : 13 Oct 2020 07:23 AM

பிஹார் மல்யுத்தம்: பிஹாரில் எந்தக் கூட்டணி வெல்லும்?

சஜ்ஜன் குமார் , ராஜன் பாண்டே

பெருவெள்ளத்துக்கும் பெருந்தொற்றுக்கும் இடையே அல்லாடிக்கொண்டிருக்கும் பிஹார் இதற்கிடையே இன்னும் சில வாரங்களில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. கரோனாவுக்குப் பின் இந்தியாவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் முதல் மாநிலம் பிஹார். பிரச்சாரம், அணிவகுப்புகள் போன்ற வழக்கமான தேர்தல் செயல்பாடுகள் எல்லாமே சிக்கலாகத்தான் இருக்கின்றன. கடுமையான, ஆனால் குழப்பமான வழிகாட்டும் நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தந்திருக்கிறது; அவற்றை யாருமே பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்பது தனிக்கதை. ஆயினும், மாநிலம் முழுவதும் நாங்கள் மேற்கொண்டுவந்த கள ஆய்வின் அடிப்படையில் சொல்வதென்றால், வெளியிலிருந்து பலரும் நினைக்கும் அளவுக்கு பிஹாரில் உள்ள தேர்தல் சூழல் அவ்வளவு குழப்பமானதாக இல்லை. வாக்காளர்களின் தெரிவுகளுக்கான சமிக்ஞைகள் கொஞ்சம் தெளிவாகத் தெரிவதாகவே தோன்றுகிறது.

வலுவான கூட்டணி

பிஹாரின் ஏழு பிராந்தியங்களில் நாங்கள் கள ஆய்வு மேற்கொண்டோம். ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரியவருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த முறை ‘பாஜக + ஐக்கிய ஜனதா தளம்’ என்ற பழைய வியூகத்தை, அதாவது 2013-ல் இரண்டு கட்சிகளும் கூட்டணியை முறித்துக்கொள்வதற்கு முன்பு தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த வியூகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ‘இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா’வும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் மறுபடியும் இணைந்துள்ளது.

எதிரேயுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான எதிரியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைமையிலான ‘மகாகத்பந்தன்’ அல்லது ‘மகா கூட்டணி’ காங்கிரஸையும் சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்.) ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளையும் உள்ளடக்கியது. களத்தில் எங்களுக்கு அறியக் கிடைத்த விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால், நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னொரு முறையும் வெற்றி பெறும் என்று தெரிகிறது; அதே வேளையில், மகாகத்பந்தனோ சமூகப் பிரச்சினைகள், பெருந்தொற்று, பொருளாதாரம், வெள்ளம் போன்றவை தொடர்பான பிரச்சினைகள் இருந்தும் அவர்களின் முக்கியமான வாக்கு வங்கியான முஸ்லிம்கள், யாதவர்களைத் தாண்டிப் பிறரது வாக்குகளை பெறுவது கடினமாகவே இருக்கும். இதற்கு முதன்மையான காரணம், பிஹாரின் சிக்கலான சமூக-அரசியல் சூழல் ஆகும்.

பிஹாரின் சாதிக் கணக்குகள்

பிஹார் மாநில பாஜக பெரும்பாலும் ‘பனியா’ சாதி ஆதிக்கத்தில் உள்ள கட்சியாக இருக்கிறது. இந்தச் சாதியினர் பிஹாரின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவு. இதற்கு நேர்மாறாக, மாநிலத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட யாதவர்கள், முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு இருக்கிறது. ஆக, இதை எதிர்கொள்ள ஏனைய சாதிகளைத் திரட்டுவது பாஜகவுக்கு அவசியம் ஆகிறது. கும்ரிகள், கோயரீகள் போன்ற யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர், நிஷாதுகள், நை-கஹார்கள், மண்டல்கள் போன்ற மிக மிகப் பிற்படுத்தப்பட்டோர், பாஸ்வான்கள், முஸஹார்கள், சாமர்கள் உள்ளிட்ட பட்டியலினத்தோர் போன்றோர்தான் இந்த ஏனைய சமூகங்கள்.

இவர்களில், பட்டியலின சாதிகளில் பாஸ்வான்கள் (துசாதுகள்) ராம் விலாஸ் பாஸ்வானின் ‘லோக் ஜன்சக்தி கட்சி’க்குப் பெரிதும் விசுவாசமாக இருப்பவர்கள். ஏனையோர் நிதீஷ் குமாருக்கே வலுவான ஆதரவைத் தந்துவந்திருக்கின்றனர். இத்தகு சூழலில்தான் பாஜக - நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைவது கட்டாயம் ஆகிறது.

இந்த முறையும் எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. வளர்ச்சியின் நாயகர் (விகாஷ் புருஷ்) என்று நிதீஷுக்கு இருந்த முந்தைய பிம்பம் இப்போது தேய்ந்துவிட்டிருந்தாலும், மாநிலம் எங்கும் நாங்கள் பேசிய மிகமிகப் பிற்படுத்தப்பட்டவர்கள், யாதவரல்லாத இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் ‘வேறு சிறந்த மாற்று நபர் இல்லாததால் நிதீஷுக்கே எங்கள் ஆதரவு தொடரும்’ என்றே கூறினார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 2015-ல், லாலு - நிதீஷ் கூட்டணிக்கு, அதாவது ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான அன்றைய ‘மகா கூட்டணி’க்கு வாக்களித்தவர்கள்; மாறாக, 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவர்கள் வாக்களித்தார்கள். இப்போதும் அதே நிலையே தொடரும் என்கிறார்கள்.

இடதுசாரிகளின் பலம்

இது நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம்; பிஹாரில் பல்வேறுபட்ட சமூகங்களின் கணிசமான ஆதரவைப் பெற்றிருக்கும் மற்றொரு அரசியல் சக்தி இடதுசாரிக் கட்சிகள்தான். பிரச்சினை என்னவென்றால், அவர்களுக்குச் சில இடங்களில் மட்டுமே செல்வாக்கு இருக்கிறது; எப்படிப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக 50 தொகுதிகளை இது தாண்டாது (பிஹார் சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 243). நிலத்துக்கான போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள் போன்ற வரலாறு இருப்பதால் பிஹாரில் உள்ள இடதுசாரிகள் பட்டியலினத்தவர்கள், மிகமிகப் பிற்படுத்தப்பட்டோர் - இதர பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்றோரிடமும், முற்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளிடமும்கூட ஆதரவுத் தளத்தைக் கொண்டிருக்கின்றனர். இடதுசாரிகளிடம் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஏற்பட்டிருக்கும் புதிய காதலுக்கு இதுதான் காரணம்.

அடையாளம் தொடர்பான அரசியல் மிகவும் வலுவடைந்ததால் பிரதான கட்சிகளின் ஆதரவான சமூகத் தளங்கள் துண்டுபட்டுப்போயிருக்கின்றன என்றும் கணிசமான வாக்கு வங்கி கொண்டிருக்கும் பல்வேறு சாதித் தலைவர்களின் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் பிஹாரின் கதையே வேறு. புதியவர்கள், குறிப்பாக நிஷாதுகள் சார்ந்த முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்ஸான் கட்சி (வி.ஐ.பி.), குஷ்வாஹர்கள் சார்ந்த உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சம்தா கட்சி (ஆர்.எல்.எஸ்.பி.), மகாதலித்துகள் சார்ந்த மாஞ்சியின் இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா (எச்.ஏ.எம்.) போன்றவற்றால் பெரிதாக எந்தத் தடத்தையும் பதிக்க முடியவில்லை. அப்போதும்கூட மாஞ்சியைத் தன் வட்டத்துக்குள் கொண்டுவர நிதீஷ் தயாராகவே உள்ளார். ஆனால், குஷ்வாஹா, சஹானி போன்றவர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை வேறுவேறு விதத்தில் நடத்துவதற்கு என்ன காரணம்?

இதற்கான விடையானது புதிய சாதித் தலைவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கூட்டணிகளின் திசையில்தான் இருக்கிறது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு அதற்கு முன்பே ஏதாவது அரசியல் கட்சி மீது சாய்வு இருக்கும்; தங்கள் சாதி சார்ந்து உருவாகும் கட்சியின் தலைவர் ஏற்கெனவே தாங்கள் சாய்வு கொண்டிருக்கும் கூட்டணியின் திசையில் செல்ல வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்படி அந்தத் தலைவர் அந்தச் சமூகம் விரும்பிய திசையில் சென்று மேலும் மேலும் அதிக அதிகாரங்களைக் குவித்துத் தரும் வரை அவர் கொண்டாடப்படுவார். இதற்கு மாறாக எதிர்த் திசையில் அவர் எடுத்து வைக்கும் எந்த நகர்வும் அவர் சார்ந்த மக்களால் புறக்கணிக்கப்படும். ஆக, இது தலைவர்களுக்கான ஒரு வலுவான அச்சுறுத்தல்.

கும்ரி-குஷ்வாஹர்கள் நிதீஷ் குமாரின் வாக்கு வங்கியாகத் திகழ்ந்ததை உடைக்க உபேந்திர குஷ்வாஹா மேற்கொண்ட முயற்சிகளை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இம்முயற்சிகள் தோல்வி அடைந்தன. விளைவாக உபேந்திர குஷ்வாஹாதான் அவரது சமூகத்தினரால் நிராகரிக்கப்பட்டார். அதேபோல், சஹானியைப் பலரும் புகழ்ந்தாலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்ததால் கடந்த காலத்தில் அவரது சமூகத்தின் வாக்குகள் அவருக்குக் கிடைக்காமல் போனது. எங்கள் கள ஆய்வில் தர்பங்கா (பகதூர்பூர்), சமஸ்திபூர் (மோர்வா), மதுபானி (ஹர்லக்கி), பெகுசராய் (பாச்வாரா) போன்ற இடங்களில் உள்ள நிஷாதுகள் நிதீஷையே தங்கள் தேர்வாக அறிவித்தார்கள். ஆகவே, வலுவாக இருக்கும் ஏற்கெனவே உள்ள அமைப்பை உடைத்துவிட்டுவருவது இப்படியான சிறிய கட்சித் தலைவர்களுக்கு எளிதல்ல.
முஸ்லிம்களின் சாய்வு

இதற்கிடையே, உணரத் தக்க மாற்றம் ஒன்று முஸ்லிம் வாக்காளர்களிடையே ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. பெரும்பாலான முஸ்லிம்களின் ஆதரவு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கே எனும் வேளையில், ‘குடியுரிமை திருத்தச் சட்ட’த்தால் ஏற்பட்ட நெருக்கடியான சூழலுக்குப் பிறகு முஸ்லிம்கள் மத்தியில் நிதீஷுக்கு இருந்த கொஞ்சம் ஆதரவும் காணாமல் போய்விட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசதுதீன் ஒவைஸி ஒரு வலுவான தலைவராக உருவாகியிருக்கிறார். 2015 தேர்தலின்போது முஸ்லிம் வாக்குகளைச் சிதைத்து, அதனால் பாஜகவுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் என்று ஒவைஸி மீது கணிசமான முஸ்லிம்கள் கோபம் கொண்டிருந்ததையும் நாங்கள் கண்டோம்.

முடிவாக, பல்வேறுபட்ட முற்பட்ட வகுப்பினரின் ஆதரவுத் தளம், யாதவரல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெரும்பாலான தலித் மக்கள் போன்றோரின் ஆதரவினால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தனைவிட கூடுதல் அனுகூலம் இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், முஸ்லிம்கள், யாதவர்களின் ஆதரவுத் தளத்தைத் தாண்டி மகாகத்பந்தன் ஆதரவு பெறுவதில் திணறிக்கொண்டிருக்கிறது.

- ராஜன் பாண்டே, குவாஹாத்தியில் உள்ள ராயல் குளோபல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் போதிக்கிறார்; சஜ்ஜன் குமார், அரசியல் ஆய்வர். இருவரும் ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

© ‘தி இந்து’, தமிழில்: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x