Last Updated : 05 Oct, 2020 07:44 AM

 

Published : 05 Oct 2020 07:44 AM
Last Updated : 05 Oct 2020 07:44 AM

சச்சி: வாசகன்,ஊர்சுற்றி, எழுத்தாளன்!

‘கல்குதிரை’ இதழ் சார்பில் வெளியிடப்பட்ட ‘தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பித’ழில்தான் முதன்முறையாக கி.அ.சச்சிதானந்தத்தின் பெயரைப் பார்த்தேன். நெய்வேலியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ‘வேர்கள்’, தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை கி.அ.சச்சிதானந்தம் மொழிபெயர்ப்பில் புத்தகமாகக் கொண்டுவரும் திட்டத்தின் விளம்பரம் அது. அந்த நாவல் முழுக்க மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் ஏனோ அந்த வெளியீடு முழுமையாகக் கைவிடப்பட்டது.

புதுமைப்பித்தனின் கதைகளுக்கே முறையாகப் பதிப்பு இல்லாத அந்தக் காலகட்டத்தில் மௌனி கதைகள், கி.அ.சச்சிதானந்தத்தின் ‘பீக்காக்’ பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தின் வழியாகத்தான் 1990-களில் அறிமுகமானது. பி.ஆர்.ராஜம் அய்யரின் ‘ரேம்பிள்ஸ் இன் வேதாந்தா’ மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்து பெரும் பொருள் நஷ்டத்துக்கு ஆளானவர். மௌனியை மூன்று மணி நேரத்துக்கு நேர்காணல் கண்டு ஒரு காணொளி ஆவணத்தையும், கு.அழகிரிசாமியின் புதல்வரும் விளம்பரப் பட இயக்குநருமான சாரங்கனுடன் சேர்ந்து எடுத்திருக்கிறார். கி.அ.சச்சிதானந்தம் ‘ஏஜிஎஸ்’ அலுவலகத்தில் பணியாற்றியபோது, ஆய்வுக்குச் செல்லும் ஊர்களிலெல்லாம், கிடைக்காமல் இருந்த மௌனியின் கதைகளைச் சேர்த்து இந்தத் தலைமுறைக்குக் கொடுத்ததிலும் அவருக்குப் பங்குண்டு.

மௌனி, சி.சு.செல்லப்பா, பிரமிள், வெங்கட் சாமிநாதன், ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், ராஜமார்த்தாண்டன், சி.மோகன், ‘தமிழினி’ வசந்தகுமார், ‘சந்தியா’ நடராஜன் தொடங்கி இயக்குநர் மிஷ்கின் வரை பெரும் நண்பர் வட்டத்தைக் கொண்டிருந்தவர். சென்னையின் பிரதான நூலகங்கள், தனிநபர், நிறுவனங்களின் நூல் சேகரிப்புகள், பழைய நூல் கடைகளில் அடிக்கடி பார்க்க முடியும். முழுக்க நரைத்துவிட்ட, அலையும் வெள்ளிச் சிகையுடன் ஜோல்னா பையோடு போகும் உருவத்தைப் பின்னால் இருந்தே சச்சி என்று தெரிந்தவர்களால் கண்டுகொள்ள முடியும். கோபாலபுரத்தில் இருக்கும் அவரது பூர்வீக வீடு பழைய சென்னையின் சரித்திரத்தோடு இணைந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் முதலில் வாடகைக்கு இருந்த இல்லம் இவருடையது. இலக்கியம், கலைகள், தத்துவம் எனப் பல துறைகளில் ஈடுபாடு கொண்ட கி.அ.சச்சிதானந்தம், சாமுவேல் பெக்கட்டின் ‘கோடாவுக்காகக் காத்திருத்தல்’, ஆனந்த குமாரசாமியின் ‘சிவானந்த நடனம்’ உள்ளிட்ட நிறைய மொழிபெயர்ப்புகளும் செய்தவர். ‘உயிரியக்கம்’, ‘அம்மாவின் அத்தை’ என்ற இரண்டு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. கி.அ.சச்சிதானந்தம் மிகப் பெரிய ஊர்சுற்றியும்கூட. இந்தியா முழுவதும் இலக்கற்று அலைந்திருக்கிறார். அந்தக் காலத்திலேயே லடாக்குக்குச் சென்ற தமிழர் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x