Published : 23 Sep 2020 07:36 AM
Last Updated : 23 Sep 2020 07:36 AM
ஐ.நா. பொது அவையின் 75-வது அமர்வு தொடங்கி நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப ஐ.நா. அமைப்புக்குள் சீர்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு அவையானது மேலும் ஜனநாயகபூர்வமாகவும், பல்வேறு தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருக்க வேண்டுமென்று ஐ.நா. பொது அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வோல்க்கன் போஸ்க்கிர் கவலை தெரிவித்திருக்கிறார். அவர் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரியும் அரசியலருமாவார். ஆனால், ஜி4 நாடுகள் என்றழைக்கப்படும் பிரேசில், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள், தங்களுக்குப் பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம் வேண்டுமென்று வெகு காலமாக எழுப்பிவந்த கோரிக்கைக்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஐ.நா. பாதுகாப்பு அவையின் ஐந்து உறுப்பினர்களுக்கு உள்ள வீட்டோ அதிகாரம் தற்காலத்துக்கு ஒவ்வாததாக இருந்துவருகிறது. போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது பொருட்படுத்தப்படுவதில்லை. 2003-ல் இராக்குக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் ஒன்றாகச் சேர்ந்து போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் தேவை என்ற குரலுக்கு வலு கிடைத்துவருகிறது.
2008-ல் கூடிய பொது அவையின் அனைத்து உறுப்பினர்களின் 122-வது சந்திப்பில் சமத்துவமான பிரதிநிதித்துவம், ஐ.நா. பாதுகாப்பு அவையின் விரிவாக்கம் போன்றவை தொடர்பாக ‘அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை’ (ஐ.ஜி.என்.) சட்டகத்தின் மூலம் சீர்திருத்தம் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு அவையில் சீர்திருத்தம் செய்வதற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலம் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வலுவிழந்துபோயின. இத்திசையில் எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் கரோனா பெருந்தொற்றின் காரணமாகவும் பிசுபிசுத்துப் போயின.
ஜூன் மாதத்தில் 184 வாக்குகளைப் பெற்று பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வெளியுறவுத் துறைரீதியிலான வெற்றியாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியத்திலிருந்து போட்டியிட்ட ஒரே போட்டியாளராகவும் இந்தியா இருந்தது. இந்தியா தனது இலக்கை அடையும் வழியில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. ஐ.நா.வில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் அந்த அமைப்பின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் வெளிப்பட்ட உலக ஒழுங்கின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பு அதற்குப் பிறகு பல்வேறு மாற்றம் கண்டிருக்கிறது. எனினும், தற்போதைய போக்கைப் பற்றி, குறிப்பாகப் போர்கள் தொடர்பாகவும் பொருளாதாரம் தொடர்பாகவும், ஐ.நா. சிந்தனையற்று இருப்பதுபோல் தோன்றுகிறது. புவி வெப்பமாதல், பெருந்தொற்று போன்றவற்றை உள்ளடக்கிய மனித குலத்தின் பெரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா. முன்னுதாரணமில்லாத சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.
உலகெங்கும் தேசியம் தலைதூக்கியிருக்கிறது, சமத்துவம், ஜனநாயகம், சமூகநீதி போன்ற அடிப்படை விழுமியங்கள் தூக்கியெறியப்பட்டுவருகின்றன. இது ஐ.நா.வின் இருப்புக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஆகவே, உலகின் அடிப்படை விழுமியங்கள் பாதுகாக்கப்படவும் அமைதி தழைத்தோங்கவும் ஐ.நா. வலுப்படுத்தப்படுவது அவசியமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT