Published : 23 Sep 2020 07:34 AM
Last Updated : 23 Sep 2020 07:34 AM

வங்க மல்யுத்தம்: எப்படியிருக்கிறது வங்கத் தேர்தல் களம்?

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் வங்கம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இன்னமும் ஆட்சி அமைக்க முடியாத பெரிய மாநிலங்களில் வெல்வதற்கான சாத்தியமுள்ள மாநிலம் என்று வங்கத்தை பாஜக நம்புவதும், கடந்த ஐந்தாண்டுகளில் கட்சியைப் பெரிய அளவில் அது வளர்த்தெடுத்திருப்பதும் முதல் காரணம். பாஜகவுக்குப் பிராந்தியங்களிலிருந்து சவால் விடத்தக்கவராகவும் எரிச்சலூட்டக்கூடியவராகவும் உள்ள ஆளுமை மம்தாவை ஆட்சியிலிருந்து அகற்றும் நோக்கம் இரண்டாவது காரணம். அரசியல் களம் அங்கு முன்கூட்டியே சூடுபிடித்துவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருந்தாலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டன.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் என்பதைக் காட்டிலும் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று பிரதானக் கட்சிகளுக்குமே அடிப்படையில் தங்கள் கட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்கான போராட்டம் இந்தத் தேர்தல் என்கிறார்கள் உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

இரண்டு தேர்தல் முடிவுகள்

வங்க சட்டமன்றம் 294 இடங்களைக் கொண்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது என்றாலும், 2019 மக்களவைத் தேர்தலில் 18/42 தொகுதிகளில் வென்றது. மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸின் வெற்றி 22 தொகுதிகளுக்குள் சுருக்கப்படவும் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் இரு கட்சிகளும் மூழ்கடிக்கப்படவும் இது வழிவகுத்தது. இத்தனைக்கும் திரிணமூல் காங்கிரஸின் வாக்குவீதம் குறையவில்லை. ஆனால், திரிணமூல் காங்கிரஸை எதிர்க்கும் பிரதான சக்தியாக பாஜக வளர்ந்துவிட்டிருந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் 25.69% ஆக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குவீதம், 2019 மக்களவைத் தேர்தலில் 7.53% ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாஜகவின் வாக்கு சதவீதம் 17% என்பதிலிருந்து 40% ஆக அதிகரித்தது. காங்கிரஸைப் பொறுத்த அளவில் அது பிரதான போட்டியிலேயே இல்லை.

மும்முனைப் போட்டி

ஆக, மும்முனைப் போட்டி அங்கு உருவாகியிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் ஒருபுறம், பாஜக ஒருபுறம், மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி ஒருபுறம். ஆனால், சமீபத்திய தேர்தல் போக்குகளைச் சுட்டும் அரசியல் பார்வையாளர்கள் உள்ளபடி இது இருமுனைப் போட்டிதான் என்கிறார்கள். திரிணமூல் காங்கிரஸால் கட்சியினர் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் மறைமுகமாக பாஜகவோடு இணைந்து பணியாற்றினர். முதல் எதிரி என்று அவர்கள் திரிணமூல் காங்கிரஸைக் கருதினார்கள். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவீதம் அதிகரித்ததன் பின்னணியும், மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குவீதம் கரைந்ததன் பின்னணியும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்க்கப்பட வேண்டியது. ஆனால், இம்முறை மார்க்சிஸ்ட்டுகள் முதன்மை எதிரியாக பாஜகவைக் கருதுகிறார்கள். விளைவாக, பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸுடன் அவர்கள் கைகோக்கக் கூடும் என்கிறார்கள்.

இதற்கு நேர் எதிரான பார்வையும் இருக்கிறது. கீழே களத்தில் திரிணமூல் காங்கிரஸால் கடந்த காலம் நெடுகிலும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். இதுவே மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவை அவர்கள் பல இடங்களில் ஆதரிக்கக் காரணம் ஆனது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் பல இடங்களில் இப்படியானவர்கள் பாஜகவுக்குள்ளேயே சென்றுவிட்டார்கள். இம்முறை மார்க்சிஸ்ட் கட்சியின் மேலிடம் தங்களுக்கு வாய்ப்பில்லாத தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸை ஆதரிப்பது என்று ஒருவேளை முடிவெடுத்தாலும்கூட கீழே அது செல்லுபடியாவது கடினம். மேலும், மார்க்சிஸ்ட்டுகள் இவ்வளவு கீழே தங்கள் கட்சி போகும் என்பதைக் கடந்த தேர்தலில் நினைக்கவில்லை. அவர்கள் மீண்டும் தங்கள் செல்வாக்கை மீட்க இந்தத் தேர்தலை ஒரு களமாகப் பயன்படுத்துவார்கள். ஆக, முதல் பார்வை பிழையானது என்பது இந்தப் பார்வையின் பின்னுள்ள நியாயம்.

இரண்டாவதுக்கான போட்டி

திரிணமூல் காங்கிரஸ் உள்ளுக்குள் மிகுந்த எச்சரிக்கையுணர்வைப் பெற்றிருக்கிறது. ஏனென்றால், வங்கத்தைப் பொறுத்த அளவில் தேர்தல் வெற்றி தோல்விகள் தேர்தலோடு முடிவதில்லை. ஆட்சிக்கு வரும் கட்சிகள் எதிர்க்கட்சிகளைத் துடைத்தெறியும் வகையில் நடந்துகொள்வது அங்கு தொடர் கலாச்சாரம். தேசிய அளவிலும் ஆட்சியில் உள்ள நிலையில், மாநிலத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், முற்றிலுமாக எதிர்க்கட்சிகள் துடைத்தெறியப்படும் என்பதை திரிணமூல் காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. மேலும், வெறும் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை மட்டுமே நீடித்த ஆட்சியைக் கொடுத்துவிடாது; பாஜக ஆட்சியைக் கற்பனைசெய்வதற்கு வாய்ப்பளிக்காத அளவுக்கான இடைவெளியையும் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கையில் உண்டாக்க வேண்டும்; இல்லையெனில், பல மாநிலங்களைப் போல ஆட்களைத் தூக்கி ஆட்சியமைக்கும் வேலையில் பாஜக இறங்கும் என்பதையும் அது புரிந்துகொண்டிருக்கிறது. ஆக, பாஜகவுக்கும் மார்க்சிஸ்ட்டுகளுக்கும் இடையிலான போட்டி எவ்வளவு சூடுபிடிக்கிறதோ அவ்வளவுக்குத் தனக்கு நல்லது என்று அது கருதுகிறது. விளைவாக, மார்க்சிஸ்ட்டுகளுடனான சண்டைக்கோழி அணுகுமுறையை அது கைவிட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட்டுகள் முதலிடம் தமக்கானது அல்ல என்பதைக் கிட்டத்தட்ட உணர்ந்துவிட்டார்கள். ஆக, இரண்டாவது இடத்தையாவது உறுதிசெய்திட அவர்கள் உழைக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மீண்டும் சிவப்புக் கொடிகள் புதிதாகப் பறப்பதைப் பார்க்க முடிகிறது.

பாஜகவின் வியூகம்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை முக்கியமான கருவியாக நம்புகிறது பாஜக. வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த இந்துக்களுக்கு விலக்களிக்கப்படும் என்ற பாஜகவின் பிரச்சாரம் வங்க சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு மேலும் ஆதரவை அதிகரிக்கச் செய்யலாம் என்று அது கணிக்கிறது. பாஜக எதிர்கொள்ளும் பெரிய சிக்கல், வங்கத்தின் முகமாகக் காட்டுவதற்கு ஆளுமையான தலைவர்கள் யாருமே அதனிடம் இல்லை என்பதுதான். மம்தா மட்டுமே ஒட்டுமொத்த களத்திலும் செல்வாக்கு மிக்க ஆளுமையாக ஜொலிக்கிறார். மோடியை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலில் மம்தாவுக்கு அழுத்தம் கொடுக்க பாஜகவுக்கு முடிந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x