Published : 11 Sep 2020 08:01 AM
Last Updated : 11 Sep 2020 08:01 AM

பல நூற்றாண்டுகள் நீளட்டும் பாரதியின் நினைவு!

பாரதியின் நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் தமிழ்க் கவிதையின் போக்கு எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. அவற்றின் தொடக்கப் புள்ளியாக அமைந்தவர் பாரதி. தமிழில் திருக்குறளுக்கு அடுத்தபடியாக பாரதியின் வார்த்தைகளே மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றன. பாரதியின் கவிதை வரிகள் தொடர்ந்து புத்தக, பத்திரிகைத் தலைப்புகளாகவும் கட்டுரை, கதைத் தலைப்புகளாகவும் எடுத்தாளப்பட்டுவருகின்றன. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வார்த்தைகளை அள்ளி வழங்கும் அளவுக்குப் பாரதியிடம் மாபெரும் களஞ்சியம் உண்டு. தவிர, அவர் எழுதிய எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களிலும் இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து ஒலித்துவருகின்றன.

பெயர் சொன்னாலே உணர்வில் உற்சாகத்தை அளிக்கும் பெயராக பாரதியார் இருந்துவருகிறார். அவரது நினைவைப் போற்றும் இந்த ஆண்டில் தமிழ்க் கவிதையும் இலக்கியமும் சமூகமும் தம்மை ஒரு சுயபரிசோதனைக்கு ஆளாக்கிக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றே தோன்றுகிறது. பாரதியார் பாடல்கள் இயற்றத் தொடங்கிய காலத்தில், யாருக்கும் புரியாதபடி செய்யுள்கள் இயற்றுவதே புலமையின் வெளிப்பாடு என்ற எண்ணம் வலுப்பட்டிருந்த காலம். அதை உடைத்து நொறுக்கி, எளிமையை முன்னிறுத்தியவர் பாரதியார். பாடுபொருள் எத்தனை தீவிரம் கொண்டதாக இருந்தாலும், அதைப் பாமரருக்கும் கவிதை வடிவில் கடத்திவிடலாம் என்று நிரூபித்தவர்.

பாரதியின் எழுச்சி என்பது சுதந்திரப் போராட்டத் தாக்கத்தால் மட்டும் உருவானதன்று; அன்றைய நாளில் மக்களைப் பீடித்திருந்த அறியாமைகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிரானதும்கூட. கவிதையை அவர் அழகியலின் வெளிப்பாடாக மட்டுமே பார்க்கவில்லை, அதைச் சமூக மாற்றத்துக்கான ஓர் ஆயுதமாகவும் கையிலெடுத்தவர். பாரதி ஒரு பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் என்பதால், அன்றைய உலகளாவிய நிலவரங்களையும் அறிந்துவைத்திருந்தார். அவர் தமிழில் எழுதினார் என்றாலும் அவரது கவனம் உலக அளவில் பரந்து விரிந்திருந்தது. இன்று உலகத்தையே கைகளுக்குள் இணையம் கொண்டுவந்திருக்கும் நிலையிலும் தமிழ்க் கவிஞர்களின் பாடுபொருட்கள் பெருமளவு அகவெளிக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கின்றன. சமகால நிகழ்வுகளின் பாதிப்புகள் தமிழ்க் கவிதையில் எதிரொலிப்பதும் அரிதாகவே நிகழ்கிறது.

தமிழ்க் கவிதை மரபில் வேர்பாய்ச்சியவர், அதன் புதுமையான வெளிப்பாட்டில் நாட்டம் கொண்டவர் மட்டுமல்ல பாரதி. தத்துவம், அரசியல் என்று மற்ற துறைகளிலும் அவரது அக்கறைகள் வேர்பாய்ச்சியிருந்தன. கவிதை உள்ளிட்ட இலக்கிய வடிவங்கள் யாவுமே பிற துறைகளின் அறிவு வெளிச்சத்தாலேயே மென்மேலும் பொலிவு பெறுகின்றன என்பதை நமக்கு உணர்த்திய முன்னோடி பாரதி. சொல்லை எரித்துச் சுடர்விளக்கேற்றியவர் அவர்; அந்தச் சுடருக்கு நெய்யாய்த் தன் வாழ்வை ஊற்றியவர். அதனால்தான், காலம் பல கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது அந்தச் சுடர். இன்னும் வெகு காலம் அந்த ஒளி நமக்கு வழி காட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x