Published : 31 Jul 2020 08:07 AM
Last Updated : 31 Jul 2020 08:07 AM

சென்னைக்கு வெளியிலும் பரவட்டும் ஒளி

கரோனாவால் தடைபட்டிருக்கும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மீட்டெடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கடந்த ஜூன் மாதத்தில் ‘ஒளிரும் தமிழ்நாடு’ காணொலி மாநாட்டை நடத்தினார் முதல்வர் பழனிசாமி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2015-ல் முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு கூட்டப்பட்டது. 6,500 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். எதிர்பார்த்த முதலீடு ரூ.2.42 லட்சம் கோடி.

வந்தது ரூ.62 ஆயிரம் கோடி. 2019 ஜனவரியில் பழனிசாமி கூட்டிய இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ரூ.3 லட்சத்து 437 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் அனைத்துமே முதலீடுகளாக மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் பழனிசாமி முன்வைத்த முழக்கம் முக்கியமானது. அது, ‘அனைத்துப் பகுதிகளிலும் சமவளர்ச்சி’.

இரண்டாவது மாநாட்டின்போது, நாகப்பட்டினத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூரிலும் வேலூரிலும் எம்ஆர்எஃப் ஆலைகளை விரிவுபடுத்தவும், தென்மாவட்டங்களில் சிமென்ட் ஆலைகளைத் தொடங்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்னைக்கு வெளியே சில முதலீடுகள் ஈர்க்கப்பட்டாலும் அது எதிர்பார்த்த மொத்த முதலீட்டில் மிகவும் குறைவுதான். வாகன உற்பத்திக்கான பெருமுதலீடுகள் யாவும் வழக்கம்போல சென்னை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளையே மையம்கொண்டிருந்தன. மொத்தத்தில், சமவளர்ச்சி எனும் முழக்கம் செயல்வடிவம் பெறத் தவறிவிட்டது.

மாநிலத்துக்குள்ளேயே புலம்பெயர்வு

காணொலி வாயிலாகத் தற்போது நடத்தப்பட்டுள்ள மாநாடும், புதிய ஒப்பந்தங்கள், புதிய வேலைவாய்ப்புகள் பற்றி பேசுகிறதேயொழிய, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீர் வளர்ச்சி என்ற இலக்கை மறந்தேவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பதிலாக நமது மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர். அதாவது, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வுக்கு மாற்றாக மாவட்டங்களுக்கு இடையிலான புலம்பெயர்வை அவர் முன்வைக்கிறார். தொழில் திறனுள்ள தொழிலாளர்கள் புலம்பெயர்வது தவிர்க்க முடியாதது. ஆனால், குறைவான தொழில்திறன் போதுமானதாக இருக்கும் அல்லது தொழில்திறன் தேவைப்படாத வேலைகளுக்காக ஏன் ஒருவர் பல நூறு மைல்கள் கடந்து வசிக்க வேண்டும்?

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 70% நகர்ப்புறங்களில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே, நகர்மயமாதலை வளர்ச்சியோடு தொடர்புடையதாக நாம் எளிதாக அர்த்தப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், அந்த வளர்ச்சி அனைத்து நகரங்களின் வளர்ச்சியும் அல்ல; பெருநகரங்களின் வளர்ச்சி மட்டுமே. தமிழ்நாடு, உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம். முதலிடத்தில் மஹாராஷ்டிரமும், மூன்றாமிடத்தில் குஜராத்தும் இருக்கின்றன.

கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.18.54 லட்சம் கோடி. சென்னை பெருநகராட்சிப் பகுதியுடன் சோழிங்கநல்லூர், சிறுசேரி, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொழில் மண்டலங்களையும் சேர்த்துப் பார்த்தால் சென்னையின் பங்களிப்பு என்பது தமிழகத்தின் பொருளாதாரத்தில் சற்றேறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு. தமிழகத்தின் மற்ற நகரங்களின் ஒட்டுமொத்தப் பொருளாதாரப் பங்களிப்பு என்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

உற்பத்தித் துறையின் பங்களிப்பு

இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல; இந்தியாவின் பிரச்சினையும்தான். உலகில் முன்னணி 300 பெருநகரங்களின் வரிசையில் இந்தியாவில் 6 மட்டுமே இருக்கின்றன. சீனாவில் இந்த எண்ணிக்கை 48. ஆனால், சீனப் பெருநகரங்கள் ஒவ்வொன்றின் பொருளாதாரத்திலும் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 35% ஆக இருக்கிறது. இந்தியாவின் 6 பெருநகரங்களிலும் உற்பத்தித் தொழில் துறையின் பங்களிப்பு சராசரியாக 12.5% மட்டுமே. சென்னையின் பங்களிப்பு 18%. வாணிபம், நிதி, போக்குவரத்து, கட்டுமானத் துறைகளின் பங்களிப்பும் சேர்த்துதான் இந்தியப் பெருநகரங்களின் வருடாந்திர மொத்த உற்பத்தி அளவை உயர்த்திக் காட்டுகின்றன.

சென்னையின் உற்பத்தித் துறைப் பங்களிப்பு என்பது சந்தேகத்துக்கு இடமின்றி வாகன உற்பத்தியை மையம்கொண்டது. எண்ணூர் துறைமுகத்திலிருந்து சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் மூன்று கார்கள், இரண்டு நிமிடங்களுக்கு ஒரு ட்ரக், ஆறு நொடிகளுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் ஏற்றுமதியாகின்றன. ஆண்டொன்றுக்குச் சுமார் 17 லட்சம் கார்கள் தயாரிக்கும் உற்பத்தித் திறன் கொண்ட நகரம் சென்னை. இன்னொருபக்கம், மென்பொருள் சேவைப் பணிகள், மருத்துவச் சுற்றுலா, வன்பொருள் தயாரிப்புகள், நிதித் துறை சேவைப் பணிகள், பொழுதுபோக்குத் துறை எனப் பெரும்பாலான தொழில் துறைகள் சென்னை பெருநகரத்தையே மையம் கொண்டிருக்கின்றன. விளைவு, மக்கள் நெரிசலும் நோய்ப்பரவலுக்கான வாய்ப்பும்.

சில அமெரிக்க உதாரணங்கள்

சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெருமைப்படுகிறோமே, அதுவும் அதிக அளவில் மக்கள்தொகை கொண்ட தொழில்நகரம்தான். ஆனால், மிச்சிகன் மாநிலத்தின் தலைநகரம் லான்விஸிலிருந்து அது 90 கிமீ தொலைவில் உள்ளது. அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் கலிஃபோர்னியா. அதன் தலைநகரமான சாக்ரமெண்டோவிலிருந்து உலகின் தொழில்நுட்பத் தலைநகரமான சிலிகான் பள்ளத்தாக்கு 120 கிமீ தொலைவில் இருக்கிறது. பொழுதுபோக்குத் துறையின் மையமான ஹாலிவுட், 380 கிமீ தொலைவில் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் லாஸ் ஏஞ்சலீஸ். ஏறக்குறைய 40 லட்சம் பேர் அங்கு வசிக்கிறார்கள்.

தலைநகரமான சாக்ரமெண்டோவில் வசிக்கும் மக்கள்தொகை வெறும் 5 லட்சம் மட்டுமே. அமெரிக்கா போன்ற விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடல்ல இந்தியா. நகரங்களுக்கிடையே அவ்வளவு நீண்ட இடைவெளியைப் பின்பற்ற முடியாது. ஆனால், அரசியல் தலைநகரத்தைச் சுற்றியே அனைத்துத் தொழில் துறைகளையும் தொடங்குவதைப் பற்றி நாம் மறுபரிசீலித்துதான் ஆக வேண்டும்.

ஒற்றைத் தொழில் துறையை மட்டுமே நம்பி ஒரு நகரத்தை உருவாக்குவதும்கூட தொலைநோக்குப் பார்வையில் தவறானதுதான். 2007-ல் உலகப் பொருளாதாரம் தேக்கமடைந்தபோது, டெட்ராய்ட் நகரத்தில் வாகன உற்பத்தி முடங்கியதோடு மொத்த நகரமும் செயலிழந்துநின்றது. மென்பொருள் சேவைப் பணிகளையே நம்பியிருந்த பெங்களூருவும்கூட அதே சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்காவின் மற்றொரு தொழில்நகரமான பிட்ஸ்பர்க், 40 ஆண்டுகளுக்கு முன்புவரை எஃகுத் தொழிற்சாலைகளைத்தான் நம்பியிருந்தது. ஆனால், எஃகுத் தொழில் துறை நசியத் தொடங்கியபோது, தொழிலாளர்கள் அந்நகரத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

உடனடியாக, பிட்ஸ்பர்க் நிர்வாகம் மருத்துவம் மற்றும் கல்வித் துறைக்கான மையமாக அந்நகரத்தை மாற்றியமைத்தது. ஒருசில தொழில் துறைகளை மட்டுமே உள்ளடக்கிய, போதிய இடைவெளி கொண்ட நகர்ப்புறங்களை உருவாக்குவதே மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமவளர்ச்சியை உருவாக்குவதற்கான வழிமுறை. சென்னையை நோக்கி விழும் வெளிச்சம், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொஞ்சமாவது பரவட்டும்.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x