Published : 22 Jul 2020 07:31 AM
Last Updated : 22 Jul 2020 07:31 AM

எங்கே செல்லும் நாகாலாந்து விவகாரம்?

ராகுல் கர்மாகர்

தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்கு உட்படுத்தும் அரை டஜனுக்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் அரசமைப்புச் சட்டம் மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன. இப்படித்தான் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவுக்கு எழுதிய தன்னுடைய 2020 ஜூன் 16 தேதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. 2019 ஜூலை மாதம் ஆளுநராகப் பதவியேற்ற ரவி, அந்தக் கடிதத்தில் எந்தக் குழுவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கவில்லை என்றாலும், வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதிகளின் பெரும் பகுதி துப்பாக்கி முனை மிரட்டல்களால் அபகரிக்கப்பட்ட சம்பவங்களை அக்கடிதத்தில் விவரித்திருக்கிறார்.

ஏற்கெனவே பலவீனமான நிலையில் இருக்கும் நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆளுநரின் கருத்துகள் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. பல ஆயுதக் குழுக்கள் ஆளுநருக்குத் தீவிரமான எதிர்வினை ஆற்றியுள்ளன. ஏழு ஆயுதக் குழுக்களை உள்ளடக்கிய நாகர் தேசிய அரசியல் குழுக்களின் செயற்குழு, தாங்கள் பணப் பறிப்பில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ள அதே வேளையில், இந்தப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே சிறிய நிதிக் கொடைகளைத் தாங்கள் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளது. நாகர் தேசிய அரசியல் குழுக்கள் என்ற இந்தக் குடை அமைப்பில் அங்கம் வகிக்கும் சில குழுக்கள், மியான்மரைச் சேர்ந்த ஷாங்ன்யு ஷாங்வாங் கப்லாங்கால் துவக்கப்பட்ட ‘நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்’ (நா.தே.சோ.க - க) என்ற அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவை.

ஆயினும், ஆளுநர் ரவிக்கு முதலில் எதிர்வினை ஆற்றியிருப்பவை இந்த நாகர் தேசிய அரசியல் குழுக்கள் அல்ல. அவற்றின் பெரிய எதிரியான ‘நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐ.மு.) என்ற குழு இதில் முந்திக்கொண்டது. இதன் நிறுவனரும் 2016 ஜூனில் மரணமடைந்தவருமான ஐசக் சிஷி ஸ்வு மற்றும் துயிஙாலெங் முயிவா ஆகியோரின் பெயரில் இயங்கும் இந்தக் குழுவானது, தாங்கள் மக்களிடம் பணம் பறிக்கவில்லை என்றும், அதே நேரம் ‘நியாயமான வரி’களை வசூலிப்பதாகவும் ஆளுநரின் கடிதத்துக்கு எதிர்வினை ஆற்றியது. அந்த அமைப்பு தன்னுடைய வரி வசூலை நியாயப்படுத்தியுள்ளது.

ஆளுநர் – அரசு மோதல்

வடகிழக்கு விவகாரங்களில் கைதேர்ந்தவர் என்பதால், 2014 ஆகஸ்ட்டில் நாகர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் சார்பாக மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டவர் ரவி. அவரிடமிருந்து வந்துள்ள இந்தக் கடிதம் முன்னுதாரணமற்றது. நாகாலாந்து மற்றும் அதன் அருகில் உள்ள மாநிலங்களில் நிலவும் தீவிரவாதத்தை அறிந்தவர்களுக்கு ஆளுநர் சொன்னவை எதுவும் புதிதல்ல. 1997-ன் இடைப்பகுதியில் நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐமு) உடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பும் சரி, அதற்குப் பிறகும் சரி; இந்தத் தீவிரவாதக் குழுக்கள் அவர்களுடைய பாஷையில் ‘வரி’, ‘நன்கொடை’களைப் பெற்றேவருகின்றனர்.

நாகாலாந்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 371 அ (1)(ஆ) தனக்கு வழங்கியுள்ள சிறப்புப் பொறுப்பை ஆளுநர் தன் கடிதத்தில் நினைவூட்டியிருப்பதற்கு பாஜக அங்கம் வகிக்கும் முதல்வர் ரியோவின் கூட்டணி அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. ஜூலை 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசு மூத்த அதிகாரிகளை நியமிப்பதற்கும் இடமாற்றம் செய்வதற்கும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறை 2013 டிசம்பரில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் நிறுத்தப்பட்டுவிட்டதை மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், ஆளுநரின் கடிதத்துக்கு நாகாலாந்து அரசு வெளியிட்டுள்ள மறுப்புக் கடிதத்தில் தனித்துத் தெரிவது ‘ஆயுதம் ஏந்திய குழுக்கள்’ என்று ஆளுநர் குறிப்பிட்டிருப்பவை தொடர்பான புகார்தான். இந்த அமைப்புகளைக் குறிப்பிட்டு, ‘மாநில அரசுகளும் மத்திய அரசும் விரும்பும் நிரந்தர அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு இவை இணக்கமானவை அல்ல’ என்று அந்தக் கடிதம் கூறியுள்ளது. அமைதிச் செயல்முறை தொடர்பாக இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் ஆளுநர், ரியோ தலைமையிலான அரசு ஆகிய இரு தரப்பினருமே ஏனைய குழுக்களைவிட நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சிலையே (ஐமு) முக்கியமானதாகக் கருதுவதைத் தெளிவுபடுத்திவிட்டனர்.

நாகா இயக்கங்களின் தொடக்கம்

மணிப்பூரைச் சேர்ந்த நாகர்களைப் பெரும்பான்மை உறுப்பினர்களாகக் கொண்ட நா.தே.சோ.க (ஐமு) தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும், 1917-ல் முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, பிரான்ஸில் சாலை அமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பிரிட்டிஷ் அரசால் வலுக்கட்டாயமாக அனுப்பிவைக்கப்பட்ட 2,000 நாகர்களிடமிருந்தே இந்த அமைப்பின் வேர்கள் தொடங்கிவிடுகின்றன. இந்த நாகர் குழுக்கள் அந்நிய மண்ணில் தமக்குள் நிலவிய வேறுபாடுகளையும் பிணக்குகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுசேர்ந்தனர். இவர்களில் உயிர் பிழைத்தவர்கள் 1918 மே-ஜூனில் தாய் மண்ணுக்குத் திரும்பினர். அதே ஆண்டு அக்டோபரில் சில படித்த உள்ளூர்வாசிகளையும் இணைத்து, நாகர் மன்றத்தை அமைத்தனர். இந்த மன்றம் நாகர் தேசியவாதம் என்ற உணர்வை எழுச்சி பெற வைத்தது. 1929-ல் இந்த மன்றத்தின் தலைவர்கள் நாகர்கள் பண்டைய காலங்களில் இருந்ததைப் போல் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே முடிவுசெய்துகொள்ளும் சுயாட்சி அதிகாரத்துடன் தனித்து விடப்பட வேண்டும் என்று சைமன் கமிஷனிடம் மனு அளித்தார்கள்.

1945-ல் தொடங்கப்பட்ட நாகர் மலை மாவட்ட பழங்குடி கவுன்சில் என்கிற அமைப்பு, நாகர் மன்றத்தைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு வளர்ந்து நின்றது. அவ்வமைப்பு பிற்காலத்தில் நாகர் தேசிய கவுன்சில் என்னும் அரசியல் அமைப்பாக உருமாற்றமடைந்து, அப்போது அசாம் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக இருந்த நாகர் மலைப் பகுதிகள் இந்திய ஒன்றியத்தின் பகுதியாகப் பிரிக்கப்பட்டு, இறையாண்மை கொண்ட நிலப் பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று குரல்கொடுத்தது. அங்கமி ஸபு ஃபிஸோ தலைமையில் நாகர்கள், 1947 ஆகஸ்ட் 14 அன்று சுதந்திரம் அடைந்ததாக அறிவித்துக்கொண்டனர். 1951 மே மாதம் நாகர் தேசிய கவுன்சிலால் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பில் ‘99% மக்கள்’ ‘சுதந்திர நாகாலாந்து’க்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

1952 இந்தியப் பொதுத் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் நாகர் தேசிய கவுன்சிலின் இயக்கம் தீவிரமடைந்தது. இந்திய அரசு ராணுவத்தை அனுப்பியதை அடுத்து, தலைமறைவாகச் செயல்படும் நாகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1956 மார்ச்சில் நாகர் தேசிய கவுன்சில் ஒரு இணை அரசை உருவாக்கி ‘குடியரசுக் கொடி’யை ஏற்றியது. தீவிரவாதச் சிந்தனை கொண்ட உறுப்பினர்கள் தலைமறைவு நாகர் கூட்டாட்சி ராணுவத்தைத் தொடங்கினர். இந்திய அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளின் குழுவுக்கும் இடையில் 16 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஆயுதக் குழுக்களின் தீவிரம் குறைந்தது. இதன் விளைவாக, 1963-ல் நாகாலாந்துக்குத் தனி மாநில அந்தஸ்து கிடைத்தது.

இதற்குப் பின்னரும் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இந்த ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தன. நாகா தேசிய கவுன்சிலின் மிதவாதப் பிரிவு ஒன்றுடன் இந்திய அரசு 1975-ல் மேற்கொண்ட ‘ஷில்லாங் ஒப்பந்தம்’ அமைதி குறித்த நம்பிக்கைகளைப் பூக்கவைத்தது. ஆனால், சீனாவில் பயிற்சிபெற்ற முயிவா, ஸ்வு, கப்லாங் ஆகியோர் தலைமையிலான பிரிவு ஷில்லாங் ஒப்பந்தத்தை முற்றிலும் நிராகரித்தது. அவர்கள் மீண்டும் தலைமறைவாகி மியான்மரில் சில காலம் தங்கியிருந்தனர். அதன் பிறகு, 1980 ஜனவரியில் ‘நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து, இந்த அமைப்புக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. இதன் விளைவாக, 1988 ஏப்ரலில் இந்த அமைப்பு நா.தே.சோ.க (ஐமு), நா.தே.சோ.க (க) ஆகிய இரு தனி அமைப்புகளாகப் பிரிந்தது. அதன் பிறகு, இவற்றுக்கிடையே அடிக்கடி சகோதர யுத்தம் மூண்டது.

டெல்லியின் தூதும் பேச்சுவார்த்தைகளும்

1997-ல் இந்திய அரசு நா.தே.சோ.க. (ஐஎம்) அமைப்புக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை அனுப்பியது. அவ்வாண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது. அடுத்த ஆண்டே நா.தே.சோ.க. (க) அமைப்பும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. ஆனால், 2015-ல் தன்னிச்சையாகப் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியது. இந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற மூன்று குழுக்கள் இன்னும் சில குழுக்களையும் சேர்த்து, நாகர் தேசிய அரசியல் குழுக்கள் என்ற குடை அமைப்பை உருவாக்கி, இரண்டு ஆண்டுகளில் மீண்டும் அமைதிச் செயல்பாடுகளில் இணைந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின் கடந்த 23 ஆண்டுகளில் மணிப்பூரைச் சேர்ந்த தாங்குல்களின் ஆதிக்கம் நிரம்பிய நா.தே.சோ.க. (ஐமு) அமைப்பு இந்திய அரசுடன் இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுகளில் பேச்சுவார்த்தை நடத்த வழிவகுத்தது. அசாம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றில் நாகர்கள் வசிக்கும் பகுதிகளையும் நாகாலாந்துடன் இணைத்து ‘பெரு-நாகலிம்’ (Greater Nagalim) என்கிற ஒன்றுபட்ட நாகர் தாயகத்தை அமைக்க வேண்டும் என்பது இவ்வமைப்பின் மிகவும் சர்ச்சைக்குரிய கோரிக்கையாக இருந்துவந்துள்ளது.

ஒன்றுபட்ட-நாகா தாயகம் என்ற சிந்தனையை மற்ற வடகிழக்கு மாநிலங்கள் எதிர்க்கின்றன. 2015 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நா.தே.சோ.க. (ஐமு) தலைவர்கள் கையெழுத்திட்ட சட்டக ஒப்பந்தம் குறித்து இந்த மாநிலங்கள் கலக்கம் அடைந்துள்ளன. அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

ஏற்கெனவே முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் அமைதிச் செயல்பாட்டை மேலும் நீட்டிக்கவும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பும் மனநிலையையே ஆளுநர் ரவியின் கடிதம் வெளிப்படுத்துவதாக நா.தே.சோ.க. (ஐமு) குற்றஞ்சாட்டியுள்ளது. அவ்வமைப்பின் முக்கியத் தலைவர் புங்திங் ஷிம்ராங் (Phungthing Shimrang) அவரது விசுவாசிகளுடன் தலைமறைவாகச் சென்றுவிட்டதாகவும், கூடிய விரைவில் நாகர்களுக்கு அவர்கள் கோரும் ‘கெளரவமான தீர்வு’ கிடைக்கவில்லை என்றால், 1997-க்கு முந்தைய நிலை திரும்பக்கூடும் என்று எச்சரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

© தி இந்து, தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x