Published : 19 Jul 2020 01:46 PM
Last Updated : 19 Jul 2020 01:46 PM
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில் சிங்களத் தரப்பில் தற்போதைய ஆளுங்கட்சியான ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுனவும் (பொதுஜன முன்னணி), முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், ஐதேகவில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் போட்டியிடுகின்றன.
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பதால், தற்போதைய ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், அவர்களது நோக்கம் வெறும் வெற்றியல்ல, மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடன் அதாவது அசுரபலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுவதாக இருக்கிறது. எனவேதான், கரோனா காலத்தில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியும்கூட, தங்களுக்கு சாதகமான காலத்திலேயே (ஆகஸ்ட் 5-ம் தேதி) தேர்தல் நடந்தே தீரும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஒற்றுமையைத் தொலைத்த தமிழ்த் தலைமைகள்
தேசிய அளவிலாவது மும்முனைப் போட்டிதான் நடைபெறுகிறது. ஆனால், தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் பலமுனைப் போட்டி இருக்கிறது. ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கே ஆகியோருடன் தமிழர் கட்சிகள் எதுவும் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், தமிழர் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக போட்டியிடவில்லை. தமிழ்த் தரப்பின் இந்த ஒற்றுமையின்மை, ராஜபக்ச அணிக்கே நன்மையைத் தரும் என்கிறார்கள்.
இலங்கை தேர்தல் நிலவரம் குறித்து இன்னும் ஆழமான புரிதலுக்காக இலங்கையைச் சேர்ந்த முக்கியமான சுயாதீன ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான இரா.மயூதரனைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடன் உரையாடியதில் இருந்து...
இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் என்று இலங்கை மக்கள் கருதுவது என்ன?
19-வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்குவோம் என்பதோடு 13-வது திருத்தத்தையும் இல்லாமல் ஆக்குவோம் என்பதே ராஜபக்ச தரப்பினரின் நேரடி, மறைமுகப் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன அழிப்புக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ராஜபக்ச 18-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, இலங்கை அதிபராக ஒருவர் இருமுறை மட்டுமே இருக்க முடியும் என்ற விதி நீக்கப்பட்டது. அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதற்கும் வழிவகை செய்யப்பட்டது. இலங்கையின் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிய நடவடிக்கை அது.
அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் தலையீட்டால் 2015 தேர்தலின்போது இலங்கையில் 'நல்லாட்சி' என்ற பெயரில் ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது. அப்போது, 19-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிப்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது. அத்துடன், தகவல் அறியும் உரிமை ஆகியவற்றையும் முக்கியமாகக் குறிப்பிடலாம்.
இவை தவிர, மகிந்த ராஜபக்ச அரசால் 18-வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட பல விடயங்கள் 19-வது திருத்தத்தின் மூலமாக வலுவிழக்கச் செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து வரும் ஆட்சி அதிகாரங்கள் யார் கைவசம் கிட்டுகிறது என்பதைப் பொறுத்தே அதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் நிலைத்தன்மை தீர்மானிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது. அவ்வாறே தற்போதைய ஆட்சி மாற்றத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு மீண்டும் பழைய வரலாறு புதிய வீரியத்துடன் எழுதப்படுவதற்கான முன்னறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட்டே ஆக வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ராஜபக்ச கட்சி தேர்தலில் நிற்கிறது. ஏற்கெனவே கோத்தபய ஜனாதிபதி ஆனதன் பின்னர் தமக்கான அரசு அமைந்துவிட்டதான பூரிப்பில் பவுத்த சிங்கள பேரினவாத தரப்புகள் தலையெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதன் அடியொற்றியே நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றியை எதிர்நோக்கியுள்ளனர் ராஜபக்ச சகோதரர்கள்.
அதற்காக 13-வது திருத்தச் சட்டத்தையும் நீக்குவோம் என்ற பிரச்சாரத்தையும் ஒருபக்கம் முடுக்கி விட்டுள்ளனர். இது பவுத்த சிங்கள பேரினவாதிகளை குஷிப்படுத்தும் விடயம் என்பதை நன்கறிந்தே இவ்விடயத்தையும் கையிலெடுத்துள்ளது ராஜபக்ச தரப்பு. இவ்வாறு அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதனை கடும்போக்குவாத சிங்களர்கள் ஆதரிக்கிறார்கள். இன்னும் 20, 30 ஆண்டுகளுக்கு இந்தப் பேரினவாத அரசு இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். அதனை முறியடிப்பதற்கான பலம் எதிர்க்கட்சிகளுக்கு போதிய அளவில் இல்லை.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும்கூட, ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறதே, உண்மையா?
ஆமாம், கள நிலவரம் அப்படித்தான் இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஆதரவுத் தளத்தில் சிறு சேதாரமெதனையும் ஏற்படுத்தும் நிகழ்வுகளோ, எதிர்த்தரப்பின் முன்னெடுப்புகளோ இல்லாத நிலையே காணப்படுகிறது. இது ராஜபக்ச தரப்பின் பலமாக காணப்படுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களது வெற்றி என்பது உறுதியானதாகவே தெரிகிறது.
ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிரான கோபத்தை, எதிர்ப்பை கூட்டாக வெளிப்படுத்தும் முகமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜீத் பிரேமதாசாவுக்கு வாக்களித்திருந்தனர். இது இயல்பாகவே சிங்களர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
பொதுவாகவே யாருடைய ஆட்சியில், தமிழர்கள் அதிகமான நெருக்கடிக்கு ஆளாகிறார்களோ அந்த ஆட்சியையே சிங்களர்கள் விரும்புகிறார்கள். அந்தத் தலைவருக்கே சிங்களர்கள் மத்தியில் 'ஹீரோ' அந்தஸ்து கிடைக்கிறது. ராஜபக்ச சகோதரர்களின் கரம் வலுப் பெற்றால், தமிழர்களைத் தொடர்ந்து அடிமைப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜபக்சவுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. ரணில், சஜித் இருவருமே பலவீனமாக இருப்பதும், ராஜபக்ச தரப்பின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.
தமிழர் பிராந்தியத்தில் முக்கியமான கட்சிகள் எவை? அவற்றுக்கு இடையே ஒற்றுமை இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?
தமிழர் தரப்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி போன்றவை இந்தத் தேர்தலை தனித்தனியாக எதிர்கொள்கின்றன. அதேபோல டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் தமிழ் பிரிவைச் சேர்ந்த அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், கருணா என்கிற முரளிதரன் அணி ஒருபக்கமாகவும் பிள்ளையான் என்கிற சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்னொரு பக்கமாகவும் நிற்கிறது. இவ்விரு தரப்பும் ஏற்கெனவே ராஜபக்ச தரப்பின் ஆதரவு சக்திகளாக இருந்தவர்கள் தான் என்றாலும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்காது தனித்து களமிறங்கியுள்ளனர். முஸ்லிம் கட்சிகளும் மலையகத் தமிழர்கள் சார் கட்சிகளும் சிங்கள தேசியக் கட்சிகள் ஏதோ ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்தே தேர்தலை எதிர்கொள்கின்றன.
225 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு தமிழர் தரப்பில் 20 முதல் 25 வரையான ஆசனங்கள் (எம்.பி. சீட்) கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வீச்சுப்பெற்றிருந்த தமிழ்த் தேசியத்தின் அடித்தளத்தில் 2004-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களைப் பெற்றது. இதுவே இதுவரையான இலங்கை அரசியலில் தமிழர் தரப்பின் அதிகூடிய பெறும்பேறாக இருந்து வருகிறது.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைத்து வழிநடத்தியதனால் அந்த இமாலய வெற்றி சாத்தியமானது. அதன் பின்னர் கடந்த 2015-ல் 16 ஆசனங்களை வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைத் பெற்றது. ஆனால், அவர்கள் அப்போதைய ரணில் - மைத்திரி அரசுடன் இணக்கமாக இருந்து தம் நலன்களை கவனித்துக் கொண்டு, தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டார்கள்.
இவ்வாறான பின்னணியில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழர்களின் அரசியல் பலமானது போர் முடிவுக்கு வந்த கடந்த 11 வருடங்களில் பிளவுகளை சந்தித்துப் பலவீனப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தியாகத்தால், தமிழ் மக்களின் வாக்குகளால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளானவர்கள் பதவியைப் பெற்றதும் சுயநலன்சார் செயற்பாட்டுக்குள் மூழ்கி தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் மறந்தனர்.
2009-ம் ஆண்டு மாபெரும் இன அழிப்புடன் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது அதற்கு காரணமாக அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்ச சகோதரர்களை பொது எதிரியாக தமிழ் மக்கள் கருதி வருகின்றனர். அதன் எதிரொலியாகவே கடந்த 10 ஆண்டுகால தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு அமைந்திருந்தது, அமைந்து வருகிறது. தமிழ் மக்களின் இந்தக் கூட்டுக் கோபத்தை உறுதியான தலைமைத்துவத்தின் மூலம் ஒருமுகப்படுத்தி மக்கள் திரள் அரசியலை முன்னெடுக்கத் தவறியதால் இன்று கட்சிகளின் பின்னால் சிதறிச் சின்னாபின்னமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்று என்று களமிறங்கியவர்களிடையே அந்த மாற்றுக்கு யார் தலைமை தாங்குவது என்கிற போட்டியின் காரணமாக ஆளுக்கொரு தரப்பாக பிளவுபட்டு நிற்கின்றனர். கடந்த கால தவறுகளில் இருந்து பிரிந்து வந்தவர்களிடையே தன்முனைப்பும், தங்களின் அரசியல் இருப்புகளை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பும் மேலோங்கியதால் தனித்து நிற்கிறார்கள்.
இவ்வாறு தமிழ் மக்கள் தம்மைத் தாமே தமிழ்த் தேசிய நீக்கம் செய்து சலுகை அரசியலின் பின்னால் அணி திரண்டு செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், மாற்று என்று கூறி சுயநல அரசியலால் பிளவுபட்டு நிற்போருமே பொறுப்பேற்க வேண்டும்.
இந்நிலை எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்?
தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியத்தின்பாற்பட்டதான ஏக பிரதிநிதித்துவம் இல்லாது போவதானது தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கைவிடப்பட்டு சலுகை மற்றும் அபிவிருத்தி அரசியலை மையப்படுத்திய அரைகுறையான தீர்வொன்று தமிழர் தலையில் திணிக்கப்படும் அபாயமேற்படும்.
ஏனென்றால், தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக்கியதான நிரந்தரத் தீர்வொன்றை அரசியல் அழுத்தங்களினூடாக வலியுறுத்தி சமரசமின்றி போராடிப் பெற்றுக் கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் பதவிக்காகவும், சுகபோகத்திற்காகவும் பிளவுபட்டு நிற்பதால், தெரிவு செய்யப்படும் தம்சார்ந்த பிரதிநிகளையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி இவ்வாறான அரைகுறை தீர்வொன்றை இந்த அரசாங்கம் தமிழர்களின் தலையில் கட்டிவிடும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழியில் போராடி பெற்றுக் கொடுக்கவும், பெரும் உயிர்விலை கொடுத்து மீட்டெடுத்தவற்றை பாதுகாக்கவுமென உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் போன்றோரின் உள் நுழைவால் தடம்மாறி சிங்கள தேசியக் கட்சியாக மாறிவிட்டது. இதை எதிர்த்து வந்தவர்களும் தமக்குள் தலைமைத்துவ பிடுங்குப்பாட்டில் தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள் என்பதே வேதனையான உண்மை.
இவ்வாறு இரா.மயூதரன் நமக்களித்த பேட்டியில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT