Published : 07 Jul 2020 07:48 AM
Last Updated : 07 Jul 2020 07:48 AM
நாட்டின் தொழில் துறையில் மிக முக்கியமான களம், சிறு-குறு நிறுவனங்கள். தொழில் துறை என்பது டாடாக்களும் பிர்லாக்களும் மட்டும் அல்ல. டிவிஎஸ் நிறுவனம் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்குகிறது என்றால், அதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் சிறு-குறு நிறுவனங்களையும் உள்ளடக்கியதே அது. ஆடைகள் தொடங்கி ஊறுகாய் வரை உள்ளடக்கிய ஒவ்வொரு உற்பத்திக்கும் பின்னணியில் பல சிறு-குறு நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் துறையில் பெருநிறுவனங்களைக் காட்டிலும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பையும், பெரிய அளவிலான உற்பத்தியையும் மேற்கொள்பவை இவைதான். கரோனாவுக்குப் பின் சர்வதேச அளவிலான தொழில் முடக்கங்கள் ஒருபுறம் நம்மூர் தொழில்களைத் தாக்கியிருக்கின்றன என்றால், தொடரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் முடக்கியிருக்கின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் தொழிலகங்களின் நிலையை இந்த வாரத்தில் பார்ப்போம்.
சுஜீஷ், தலைவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்.
இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டை மட்டுமல்ல, 60 ஆண்டுகள் பழமையான தொழிற்பேட்டை. இங்கே 2,400 நிறுவனங்கள் இருக்கின்றன. 3 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இது சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிட்டது. தமிழ்நாடு முழுக்கத் தொழிற்பேட்டைகளைத் திறக்க அனுமதியளித்த அரசு, அம்பத்தூரை மட்டும் விட்டுவிட்டது. கரோனா தொற்றில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிற மும்பை, டெல்லியில்கூட தொழிற்பேட்டைகளைத் திறந்துவிட்டார்கள் என்று அடுத்தடுத்து பேசி, அந்த அரசாணையில் அம்பத்தூரையும் சேர்க்க வைத்தோம். பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில், குறைந்த தொழிலாளர்களை வைத்து தொழிற்பேட்டையைத் தொடங்கியபோது, அடுத்த ஊரடங்கைப் போட்டுவிட்டார்கள். இப்போது வேலைக்குச் செல்வதற்கு பாஸ் கொடுக்காமல் பாடாய்ப் படுத்துகிறார்கள். மொத்தம் 3 லட்சம் பேர் வேலை பார்க்கிற இந்தத் தொழிற்பேட்டைக்கு இதுவரையில் அரசு கொடுத்த மொத்த கார் பாஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 159. யாரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லக் கூடாது, உள்ளேயே தங்கியிருக்கிற தொழிலாளர்களை வைத்து மட்டும்தான் தொழில் செய்ய வேண்டும் என்கிறார்கள். செங்கல் சூளையில் கொத்தடிமைகளை வைத்து வேலை வாங்குவதைப் போல அரசு வேலை பார்க்கச் சொல்கிறது. வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் 3 மாதங்களுக்குப் பிறகு பொருட்களை அனுப்பச் சொல்லிவிட்டன. 95% நிறுவனங்கள் அது சார்ந்தவைதான் என்றாலும் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. கரோனா தொடர்பான பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைக்கூட நடத்த முடியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், சில நிறுவனங்களைத் தவிர எல்லாவற்றையும் நிரந்தரமாக மூட வேண்டியதுதான். தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ள எந்த ஆட்சியாளர்களும் இந்தப் பிரச்சினையை இவ்வளவு மோசமாகக் கையாள மாட்டார்கள். உலகத் தொழில் வரைபடத்திலிருந்து சென்னையும் அம்பத்தூரும் காணாமல்போய்விடும் சூழல் வந்துவிடும்போல இருக்கிறது.
பி.என்.ரெகுநாதராஜா, கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்.
மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் நூற்பாலை, ஆயத்த ஆடை, பிளாஸ்டிக் தொழில் என்று சுமார் 450 நிறுவனங்கள் இருக்கின்றன. 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். 45 நாள் தொழில் முடக்கத்துக்குப் பிறகு, அரசு தளர்வு அறிவித்ததால் வேலையைத் தொடங்கினோம். இப்போது மதுரையில் ஊரடங்கு. நிலைகுலைந்திருக்கிறோம். வெளிநாடுகளுக்கான ஆர்டர்கள் முடங்கிவிட்ட நிலையில், உள்ளூரிலும் ஊரடங்கின் பெயரால் வணிகம் முடக்கப்படுவது பெரிய பாதிப்பாகிறது. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் வேலையாட்கள் மட்டும் 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சம்பளம் போடக்கூட முடியாத நிலையில்தான் பெரும்பாலான நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் முந்தைய கடன்களுக்கான தவணைகள் வேறு துரத்துகின்றன. ஊரடங்குச் சூழலிலிருந்து நாம் வெளியேற வேண்டும். இந்திய அரசு, நிறுவனங்களுக்கு இந்த இக்கட்டான காலத்தில் நிதியுதவிகளை வழங்க வேண்டும். இந்த இரு வழிகளைத் தவிர நாங்கள் தாக்குப்பிடிக்க வேறு ஏதும் வழி இல்லை. ஆனால், குறைந்தபட்ச விலக்குகளுக்குக்கூட அரசு யோசிப்பது பெரிய வலியை உண்டாக்குகிறது. நாங்கள் ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான வட்டியையாவது குறைந்தது ஒரு வருடத்துக்கு முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்று கோருகிறோம்; நடக்கவில்லை. விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் வேலைசெய்ய முடியாத நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கான சம்பளத்தை இஎஸ்ஐ வழங்குகிற திட்டம் உண்டு; அடுத்த ஆறு மாதங்களுக்கேனும் சிறு-குறு நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சம்பளத்துக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறோம்; இஎஸ்ஐ நிறுவனத்தில் கோரப்படாத பணம் கோடிக்கணக்கில் இருப்பதால், இப்படிச் செய்வதால் அரசுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டுவிடாது; நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை அந்தந்த நிறுவனங்களே வைத்துக்கொள்ளலாம் என்றேனும் அறிவியுங்கள் என்கிறோம்; நடக்கவில்லை. எப்படிப் பிழைத்திருப்பது என்றே தெரியவில்லை!
நேரு பிரகாஷ், சிறு-குறு தொழில்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி.
தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்துமே சிக்கலில்தான் இருக்கிறது. இங்கு பருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டும் இருநூறுக்கும் அதிகமாக உள்ளன. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருப்பதாலும், மூலப்பொருட்கள் வந்து சேர்வதில் சிக்கல் இருப்பதாலும் பருப்பு நிறுவனங்களில் பலவும் முடங்கி யிருக்கின்றன. இதேபோல் எண்ணெய் நிறுவனங்களும், தூத்துக்குடியின் அடையாளமான மக்ரூன் தயாரிப்பும்கூட முடங்கியிருக்கின்றன. கடல் உணவுகளைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இங்கு அதிகம். இயந்திரங்களைக் கேட்ட நிறுவனங்களுக்கு டெலிவரி செய்வதோடு, அதைப் பொருத்தியும் கொடுக்க வேண்டும். இடம்பெயர்தலில் சிக்கல் இருப்பதால் அந்தத் தொழிலும் முடங்கியுள்ளது. இந்தியா முழுவதுக்கும் ஹீட்டர் வணிகம் செய்யும் வீனஸ் நிறுவனமே தயாரிப்பை நிறுத்தியிருக்கிறது. அரசு தொழில்ரீதியான இடம்பெயர்தலைத் தடையின்றி அனுமதித்தால் மட்டும்தான் இந்தச் சிக்கல்கள் தீரும்.
பா.அறிவொளி, கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்.
கோவை குறிச்சி, மலுமிச்சம்பட்டி சிட்கோ 40 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. 50-150 தொழிலாளர்களை வைத்துத் தொழில் செய்யும் நிறுவனங்கள் நூறும், 10-20 பேர் வைத்து தொழில் செய்யும் சிறு பட்டறைகள் சுமார் நானூறும் இயங்கிவருகின்றன. இன்டோ செல், டீ மில், பேப்பர் மில் இப்படி பெரிய நிறுவனங்களிலிருந்துதான் இந்த நிறுவனங்களுக்குப் பணி வாய்ப்பு வருகிறது. இப்போது 95% தொழில் சுத்தமாக நடப்பதில்லை. 50% தொழிற்கூடங்கள் பூட்டப்பட்டுள்ளன. பெரிய நிறுவனங்களுக்கு பிளேனிங், சர்ஃபேஸ் கிரைண்டிங் என்று செய்துகொடுத்துக்கொண்டிருந்த நான், இப்போது சின்னச் சின்ன வேலைகளாவது வராதா என்று காத்திருக்கிறேன். பெரிய நிறுவனங்கள் இயங்கினால்தானே எங்களுக்கு வேலை வரும்? ரூ.1.5 லட்சத்துக்குக் குறையாமல் வருமானம் தந்த பட்டறையில் ரூ.10 ஆயிரம் மாத வாடகை, மின்கட்டணம் ரூ.3,500 கட்ட வழியில்லாமல் இருக்கிறோம். பசங்களுக்குக் கூலி கொடுக்கக்கூட முடியாமல் ரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறோம்.
வெற்றி. ஞானசேகரன், ஒசூர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம்.
ஒசூரில் 2 தொழிற்பேட்டைகளிலும் சேர்த்து 1,500 நிறுவனங்களும், வெளியே 1,500 நிறுவனங்களும் இருக்கின்றன. சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். குண்டூசி தொடங்கி விமான உதிரி பாகங்கள் வரையில் இங்கே உற்பத்தியாகின்றன என்றாலும் பெரும்பாலான நிறுவனங்கள் அசோக் லேலண்ட், டிவிஎஸ் நிறுவனங்களுக்குத்தான் சப்ளை செய்கின்றன. இப்போது குறைவான நிறுவனங்களே இயங்குகின்றன. அதிலும் 25% அளவுக்குத்தான் உற்பத்தி நடக்கிறது. 3 மாதங்களாகத் தொழில் முடங்கியதால், ஊழியர்களுக்கு சம்பளம் தர, வாடகை, மின்கட்டணம் செலுத்த, மூலப்பொருள் வாங்குவதற்குக்கூட பணமில்லாத சூழல். மத்திய அரசோ அனைவருக்கும் கடன் தருவதாகவும், அதற்கான செக்யூரிட்டியையும் தருவதாகவும் அறிவித்தது. ஆனால், வங்கிகளுக்குப் போய் பணம் கேட்டால் இடம், கட்டிடம் என்று சொத்தை ஈடாகக் கேட்பதுடன், அதை வங்கியின் பெயருக்குப் பதிவுசெய்து (எம்ஓடி) தரச் சொல்கிறார்கள். அதற்குக் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் ஆகிறது. நாட்களும் விரயமாகின்றன. சாகக் கிடக்கிறவனை ஓடிப்போய் மருந்து வாங்கிட்டு வா என்று சொல்வதைப் போன்ற செயல் இது. இந்த நிறுவனங்களுக்கு உடனே உதவவில்லை என்றால், மோசமான நிலைக்குத் தமிழ்நாடு போய்விடும். ஆர்டர்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விடும்.
தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT