Published : 22 Jun 2020 04:53 PM
Last Updated : 22 Jun 2020 04:53 PM
கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தேச எல்லைகளைக் கடந்து மனித குலமே ஒன்றிணைந்து போராடும் என்று நம்பியிருந்தவர்களை ஏமாற்றம் கொள்ளச் செய்யும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. அந்த வகையில், இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் பங்கேற்க, வெளிநாடுகளுக்குத் தனது மருத்துவர்களை அனுப்பிவரும் கியூபா மீது அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
மருத்துவ சேவை எனும் பெயரில் கியூபா ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறது என்றும், வெளிநாடுகளில் மருத்துவ சேவை மூலம் கியூப மருத்துவர்கள் சம்பாதிக்கும் தொகை மூலம் அந்நாட்டு அரசு பணம் சம்பாதிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறது ட்ரம்ப் அரசு. அத்துடன், பெருந்தொற்றுக்கு நடுவே போராடிவரும் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கிறது.
சேவையும் அவதூறும்
கரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்திவந்த ஆரம்பக் கட்டத்தில், பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத் தனது மருத்துவக் குழுவை அனுப்பிய கியூபாவின் செயல் பலரிடமும் நம்பிக்கையை விதைத்தது. “கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே உண்மையான சர்வதேசத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கும் ஒரே நாடு கியூபாதான்” என்று புகழ்பெற்ற மொழியியல், தத்துவ அறிஞர் நோம் சோம்ஸ்கி புகழாரம் சூட்டினார். இந்தச் சேவைக்காகக் கியூபாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று போருக்கு எதிராக இயங்கும் ‘கோட் பிங்க்’ (Code Pink) எனும் தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
பிரான்ஸ், ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 40 தொண்டு நிறுவனங்களும் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்திருக்கின்றன. தற்போது, 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்கள் கரோனாவுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே கூடுதலாக அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
1960-களிலிருந்தே பிற நாடுகளுக்குத் தங்கள் மருத்துவர்களை அனுப்பி மருத்துவ சேவையாற்றி வருகிறது கியூபா. தற்போது 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான கியூப மருத்துவர்களும், சுகாதாரத் துறைப் பணியாளர்களும் சேவையாற்றி வருகிறார்கள். உலகின் எந்த மூலையில் நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் என இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க எப்போதும் கியூப மருத்துவர்கள் தயங்கியதில்லை. 2005-ல், இதற்காகவே 'ரீவ் சர்வதேச மருத்துவப் படை (Reeve International Medical Brigade)' எனும் அமைப்பைக் கியூப அரசு உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் இதுபோன்ற தருணங்களில் கியூப மருத்துவர்கள் பெரும் சேவையாற்றியிருக்கிறார்கள் - அமெரிக்கா உட்பட.
ட்ரம்ப் அரசின் தீவிரம்
ஒபாமா ஆட்சிக் காலத்தில் கியூபாவின் மருத்துவ சேவையை அமெரிக்கா அங்கீகரிக்கவே செய்தது. எபோலா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகப் பணிபுரிந்ததாக ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர், கியூபாவைப் பாராட்டியிருந்தார். அதேசமயம், பல தசாப்தங்களாகக் கியூபா மீது பல்வேறு நெருக்கடிகளைத் தொடுத்துவரும் அமெரிக்க அரசு, ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் அந்த வன்மத்தின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது.
“கியூபாவின் சர்வதேச மருத்துவத் திட்டங்கள், ஆட்கடத்தலின் ஒரு வடிவம்தான். இது நவீன அடிமை முறையும்கூட” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், பொலிவியாவிலும் பிரேசிலிலும் பணியாற்றிவந்த கியூபாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை அதில் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்கச் செய்திருந்தனர்.
“நாங்கள் சம்பாதித்து அனுப்பும் பணம், கியூபாவில் உள்ள வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பணத்தை எங்கள் உறவினர்கள் எடுக்க முடியாது. வெளிநாடுகளில் மருத்துவப் பணிகளை முடித்த பின்னர்தான் வங்கிப் பரிவர்த்தனையைச் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று அந்தப் பெண் மருத்துவர் கூறினார். மேலும், கியூப பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தன்னிடமிருந்தும் பிற கியூப மருத்துவர்களிடமிருந்தும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பறித்துச் சென்றுவிட்டதாகவும் புகார் கூறினார். அந்தக் குற்றச்சாட்டுகளைக் கியூபா மறுத்தது.
மனம் திறக்கும் மருத்துவர்கள்
தற்போது, உலகமெங்கும் கியூபாவுக்குக் கிடைத்திருக்கும் நற்பெயரால் எரிச்சலடைந்திருக்கும் ட்ரம்ப் அரசு, அந்தக் குற்றச்சாட்டை மேலும் வீரியத்துடன் முன்வைக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நேஷன்’ (The Nation) வார இதழ் இது தொடர்பாகக் கடந்த மாதம் விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில் கியூபா மீது ட்ரம்ப் அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“இலவசக் கல்வியை வழங்கும் நாட்டைச் சேர்ந்த நாங்கள் எப்படி அடிமையாக இருக்க முடியும்? நாங்கள் வெளிநாட்டில் மருத்துவ சேவை செய்யும்போது, எங்கள் முழுச் சம்பளத்தையும் எங்கள் குடும்பத்துக்குக் கியூப அரசு வழங்கிவிடுகிறது” என்று அந்த இதழுக்குப் பேட்டியளித்த கியூப மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். “எங்களை அடிமைகள் என்று சொல்லும் நாடுகளைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் உலகத்துக்குச் சேவை செய்கிறோம் என்பதுதான் எங்களுக்கு முக்கியம்” என்கிறார்கள் அவர்கள். அதுமட்டுமல்ல, கியூபாவிலேயே பணியாற்றும் மருத்துவர்களைவிட வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைக் கியூப அரசு வழங்குகிறது என்கிறது ‘தி நேஷன்’ இதழில் வெளியாகியிருக்கும் செய்தி.
பிரேசிலின் குற்றச்சாட்டு
கியூப மருத்துவர்களைப் புறக்கணிக்குமாறு, பிற நாடுகள் மீதும் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. அதேசமயம், தீவிர வலதுசாரியான பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸனாரோ போன்றோர் இயல்பாகவே கியூபாவை வெறுக்கிறார்கள். கியூப அரசின் மருத்துவ சேவைகளைக் கடுமையாக விமர்சிப்பவர் போல்ஸனாரோ. கியூபா தனது மருத்துவர்களை அடிமைகளாக நடத்துகிறது எனும் அமெரிக்காவின் குரலை அவரும் எதிரொலிக்கிறார். சொல்லப்போனால், 2018 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது கியூபாவை சர்வாதிகார நாடு என விமர்சித்தவர் அவர்.
2013-ல், ‘மேய்ஸ் மெடிகோஸ்’ (அதிக மருத்துவர்கள்) எனும் திட்டத்தை உருவாக்கிய கியூபா, 8,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பிரேசிலுக்கு அனுப்பியிருந்தது. எனினும், போல்ஸனாரோ தொடர்ந்து விமர்சித்ததால் கோபமடைந்த கியூப அரசு, தனது மருத்துவர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டது. சில கியூப மருத்துவர்கள் பிரேசில்காரர்களைத் திருமணம் செய்துகொண்டு அங்கு வாழ்ந்துவந்த நிலையில், நாடு திரும்பாமல் பிரேசிலிலேயே தங்கிவிட்டனர். அவர்களில் 150 பேர் இப்போது கரோனா வைரஸிலிருந்து பிரேசில் மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபாவின் விளக்கம்
இந்நிலையில், ‘அல் ஜஸீரா’ இதழில் கட்டுரை எழுதியிருக்கும் கனடாவுக்கான கியூபத் தூதர் ஜோஸஃபீனா விடால் ஃபெரேய்ரோ, கியூபா மீது அமெரிக்கா நிகழ்த்திவரும் அடக்குமுறைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். 60 ஆண்டுகளாகவே கியூபா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திவரும் அமெரிக்கா, 2019 ஜனவரி முதல் 2020 மார்ச் வரை மட்டுமே மேலும் 90 பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால், கியூபாவின் சுற்றுலாத் துறை, எரிசக்தித் துறை, வெளிநாட்டு முதலீடுகள் என்று பல்வேறு துறைகள் கடும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்கின்றன. இதன் விளைவாக, வெளிநாடுகளில் தங்கள் சுகாதாரத் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லும் ஜோஸஃபீனா, மருந்து இறக்குமதியிலும் தங்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். “உதாரணத்துக்கு, நாங்கள் வாங்க விரும்பும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளின் மூலப்பொருட்களில் 10 சதவீதம் அமெரிக்காவைச் சேர்ந்தவையாக இருந்தால், அவற்றை நாங்கள் வாங்க முடியாது” என்கிறார் அவர். மேலும், கியூபாவுக்கு நன்கொடையாகவோ, விற்பனை அடிப்படையிலோ மருந்துப் பொருட்களை அனுப்பும் நாடுகளின் வங்கிகள், விமான நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது அமெரிக்கா.
இவற்றுக்கு மத்தியிலும் கரோனா வைரஸை எதிர்கொள்வதில் கியூபா சிறப்பாகவே செயலாற்றுகிறது என்பதுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி. இன்றைய தேதிக்கு, அந்நாட்டில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,312. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 85. வைரஸ் பாதிப்பின் அடிப்படையிலான பட்டியலில் 99-வது இடத்தில் கியூபா இருக்கிறது.
மறுபுறம், அமெரிக்காவில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்துவிட்டது. 1.22 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பிரேசிலில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிப்புகள் அடிப்படையிலான பட்டியலில் அமெரிக்காவும் பிரேசிலும் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT