Last Updated : 01 Jun, 2020 07:31 AM

 

Published : 01 Jun 2020 07:31 AM
Last Updated : 01 Jun 2020 07:31 AM

மின்சாரம் இல்லையென்றால், தமிழக விவசாயம் நாசமாகிவிடும்!- பி.ஆர்.பாண்டியன் பேட்டி

கரோனா பாதிப்புகளுக்கு விவசாயமும் விதிவிலக்கு அல்ல. அடி மேல் அடி விழுவதுபோல இந்தச் சமயத்தில் விவசாயத்துக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஏற்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது இந்திய அரசு. ஒருபுறம் இதைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொன்னாலும், மறுபுறம் விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணி நோக்கி நகர்கிறது தமிழக அரசு. அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள் இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழக விவசாயம் எந்த அளவுக்கு மின்சாரத்தைச் சார்ந்திருக்கிறது? தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியனுடன் பேசினேன்...

விவசாயிகளுக்கான மின் இணைப்பில் மீட்டர் பொருத்தப்படுவதை ஏன் எதிர்க்கிறீர்கள்?

விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்துக்கான முன்னோட்டம் இது என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். என்றைக்கு ‘உதய் மின் திட்ட’த்தில் தமிழக அரசு கையெழுத்துப் போட்டதோ அன்றைக்கே தொடங்கிவிட்டது இதற்கான அச்சாரம். அந்தத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, இவர்கள் அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டதுதான் இன்று மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இது முற்றிலும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்டதே.

எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்று அரசு கூறுகிறதே?

இப்படித்தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள்! நாங்கள் பார்க்காததா? தமிழக அரசு உண்மையாகவே இந்தச் சட்டத்தை எதிர்க்கிறது என்றால், உடனடியாக அவசரச் சட்டம் இயற்றி ‘புதிய மின்சார சீர்திருத்த வரைவு மசோதா-2020’ஐ மத்திய அரசு கைவிடும்படி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் ரத்துசெய்வதையும் மின்சாரத்தைத் தனியார்மயமாக்குவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டு அரசு திட்டவட்டமாக, கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள், மின் பயன்பாட்டைத் தீர்மானிப்பது நிலத்தின் அளவு மட்டும் அல்ல; நீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதும்தான். நூறு அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும், ஆயிரம் அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளவனுக்கும் எப்படி மின் பயன்பாட்டைச் சமன்படுத்துவீர்கள்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, போர்செட்டிலுள்ள சுவிட்ச் போர்டில் சென்ஸார் வைத்துவிட்டார்கள். எந்தெந்த விவசாயி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார் என்ற விவரம் மின் வாரியத்துக்குப் போய்விடும். இப்போது மீட்டர் பொருத்துவதன் பின்னணியில் மின்சாரத்தை விலையாக்கும் நோக்கம் எதுவும் இல்லையென்றால், நீங்கள் மீட்டர் பொருத்துவதன் நோக்கம்தான் என்ன?

தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தியில் மின்சாரம் எந்த அளவுக்குப் பங்கு வகிக்கிறது?

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் இது நீர்ப் பற்றாக்குறை மாநிலம். கேரளம், பஞ்சாப், உத்தர பிரதேசம் போல வளம் கொழிக்கும் மாநிலம் அல்ல. தாமிரபரணி நீங்கலாக ஏனைய நதிகள் அண்டை மாநிலங்களின் தயவோடு பிணைந்திருப்பவை. இதை உணர்ந்துதான் நிலத்தடி நீராதாரத்தைப் பயன்படுத்தி, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த நம்முடைய முன்னாள் முதல்வர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இன்றைக்குத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகை உணவு உற்பத்தி மாநிலமாகத் தமிழ்நாடு திகழக் காரணம் நிலத்தடி நீராதாரம்தான். தமிழகத்தின் உணவுக் களஞ்சியமான காவிரிப் படுகையையே எடுத்துக்கொள்ளுங்கள். 10 லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது; இதில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்குக் கட்டணமில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தியே விவசாயம் செய்கிறோம். வேளாண்மைக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறினாலும், உண்மையில் 9 மணி நேரம்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிலும் ஏராளமான தடங்கல்கள். இப்போதைய குறுக்கீடு விவசாயத்தை மொத்தமாகவே நாசமாக்கிவிடும்.

கரோனா காலகட்டத்தில் அரசிடம் விவசாயிகள் எதிர்பார்ப்பது என்ன?

விவசாயத்தை அதன் பழைய செல்வாக்குக்கு மீட்டெடுக்காமல், கிராமங்களில் மறுமலர்ச்சி சாத்தியமில்லை. கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தன்னுடைய பார்வையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். கஷ்டமான சூழலிலும் உணவு உற்பத்தியைத் தொடர்கிறார்கள் விவசாயிகள். ஆனால், விளைபொருட்கள் விநியோகம், சந்தைப்படுத்தலில் அரசு எங்களுக்கு உதவியாக இல்லை. எவ்வளவு விளைபொருட்கள் வீணாகின்றன தெரியுமா? வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள் விவசாயிகள். கேட்டால், ‘கிடங்கு கட்டியிருக்கிறோம்; இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்பார்கள். அந்தக் கிடங்குகள் எங்கே இருக்கின்றன என்று விவசாயிகள் யாருக்குமே தெரியாது. தமிழகத்தின் உணவுக் களஞ்சியம் இது; இந்தக் காவிரிப் படுகையில் எத்தனை கிடங்குகளை அமைத்திருக்கிறீர்கள்? மாவட்டத்துக்கு எத்தனை அமைத்திருக்கிறீர்கள் என்று பட்டியல் கொடுங்களேன்! எல்லாம் வாய்ப்பந்தல்! விவசாயிகளையும் மதியுங்கள். எங்கள் குரலுக்கு மதிப்பளியுங்கள்!

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x