Published : 01 Jun 2020 07:26 AM
Last Updated : 01 Jun 2020 07:26 AM

அரசியல் செயல்பாடுகளுக்கு விடுமுறைக் காலமே இல்லை

கரோனா ஊரடங்கின் அழுத்தத்திலிருந்து மெல்ல அரசியல் செயல்பாடுகள் வெளியே வரும் சமிக்ஞைகள் ஒருவழியாக வெளிப்படலாகின்றன. உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தை ஜூன் 3-ம் தேதி அன்று நடத்தத் தீர்மானித்திருப்பது வரவேற்புக்குரிய முடிவு. இதையே தொடக்கமாகக் கொண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்களையும் நாடாளுமன்றக் கூட்டங்களையும் இணைய வழியில் நடத்துவதைப் பற்றியேனும் யோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக் குழுவின் தலைவருமான ஆனந்த் ஷர்மா தொடர்ந்து வலியுறுத்திவந்ததை அடுத்து இக்கூட்டத்துக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. ஏற்கெனவே, 34 நாடுகளில் காணொலி வழியே நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகையில், இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டங்களையும் அவ்வாறே நடத்தலாம் என்று கூறியிருந்தார் ஆனந்த் ஷர்மா. இதேபோல, தொழிலாளர் நலக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவர் மஹ்தாப், மக்களவைத் தலைவருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார். காணொலி முறையிலேனும் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தைத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சசி தரூரும் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்திவருகிறார்.

சமீபத்தில், மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கைய நாயுடுவும், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் நாடாளுமன்ற அவைகளைக் கூட்டுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி சமீபத்தில் சந்தித்துப் பேசியபோதே, ஆக்கபூர்வமான கருத்துகள் வெளிப்பட்டன. இச்சந்திப்பில், பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘ஊரடங்கின் காரணமாக ஜனநாயகத்தை நிறுத்திவைக்க முடியாது’ என்று கூறினார். வாய்ப்புள்ள உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஊரடங்கு விதிமுறைகளின் காரணமாகக் கலந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள் காணொலி வசதிகளின் வாயிலாக விவாதங்களில் பங்கேற்கவும் திட்டமிட்டுவருவதாகவும்கூட கூறினார். அதுவே சரியானது. இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரும் நெருக்கடியை நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், முடிவுகளில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் ஆலோசனையும் மிக முக்கியமானது. ஒரு நல்ல யோசனை பல கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்றலாம்; ஒரு கூர்மையான விமர்சனம், பெரும் தவறுகளுக்கு அணை போடலாம்; முக்கியமாக அடித்தட்டு மக்களின் குரல் ஆட்சியில் எதிரொலிக்கும். அரசியல் செயல்பாடுகளுக்கு விடுமுறையே கிடையாது; தொடரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x