Published : 25 May 2020 02:50 PM
Last Updated : 25 May 2020 02:50 PM

உலக தைராய்டு நாள்: அதிகரித்துவரும் தைராய்டு பிரச்சினைகள்; தேவை கவனம், விழிப்புணர்வு

மே 25-ம் தேதி உலக தைராய்டு நாளாகவும், மே 25 முதல் மே 31 வரை பன்னாட்டு தைராய்டு விழிப்புணர்வு வாரமாகவும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு சில முக்கியச் சந்தேகங்கள் தோன்றலாம்.
அவற்றுக்கான பதில்கள்:
* நீங்கள் தைராய்டு மருந்தை உட்கொள்ளுபவராக இருந்தால், கட்டாயமாகத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
* தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வைரஸ் தொற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அதேநேரம் தைராய்டு பிரச்சினை தொடர்பாக அனைவருமே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தைராய்டு பிரச்சினைகள்
தைராய்டு சுரப்பி என்பது நமது கழுத்துப் பகுதியில், வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் உள்ள எண்டோகிரைன் சுரப்பி. அதிலிருந்து சுரக்கும் ஹார்மோன், நமது உடலின் வளர்சிதை மாற்றம் (metabolism), உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நரம்பு மண்டலம், மூளை வளர்ச்சி போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கிறது. உடலின் மிக முக்கியமான இந்த சுரப்பியில் ஏதாவது மாற்றம் தெரிந்தால், அதை அலட்சியம் செய்யக்கூடாது. தைராய்டு குறைபாட்டால் விளையும் பாதிப்பு, இந்திய அளவில் இன்றைக்குப் பெரிதும் அதிகரித்துவருகிறது.
இதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால், ஆட்டோ இம்மியூனிட்டி (auto immunity). அதாவது, உடலின் செல்கள், தசைகளைத் தற்காக்கும் முறையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தால் தைராய்டு சுரப்பியில் கோளாறு ஏற்படக்கூடும். தைராய்டு குறைவாகச் சுரந்தால் அதை ஹைபோ தைராய்டிசம் (hypo thyroidism) என்றும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று கூறப்படுகிறது.

இந்தியாவில்...
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், சராசரியாக 10-ல் ஒருவர் ஹைபோ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 18 முதல் 35 வயதுவரை உள்ள பெண்களிடம் மும்மடங்காகப் பெருகி காணப்படுகிறது.

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், தங்களுக்கு ஹைபோ தைராய்டு இருப்பதே தெரியாமலும், மற்றவர்கள் அதை வேறு நோய்களுக்கான அறிகுறிகளுடன் குழப்பிக்கொண்டும், ஹைபோ தைராய்டிசத்துக்கான சிகிச்சையை முறையாக, சரியான காலத்தில் எடுக்காமல் இருக்கிறார்கள்.
தொடக்க நிலையிலேயே தைராய்டுக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால், அந்த நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும். இல்லையென்றால் அதிக அளவில் கொழுப்பு (cholesterol), ரத்த அழுத்தம் (blood pressure), இதயக் கோளாறு (cardiovascular complications), மலட்டுத்தன்மை (decreased fertility), மன அழுத்தம் (depression) போன்ற பிரச்சினைகள் வரக்கூடிய சாத்தியம் அதிகம்.

30% முதல் 40% வரையிலான கர்ப்பிணிப் பெண்கள், தைராய்டு தாக்குதலுக்கு ஆளாக அதிக சாத்தியம் உள்ளது. இதன் விளைவாக அவர்களிடையே ரத்தசோகை (anemia), கருச்சிதைவு (miscarriages), குறைப் பிரசவம், பிரசவத்துக்குப்பின் அதிக அளவில் ரத்தப்போக்கு (postpartum bleeding), இளம்பேற்று குளிர்காய்ச்சல் (pre eclampsia), நச்சுக்கொடி அசாதாரண நிலை (placental abnormalities) போன்றவை உண்டாகும் சாத்தியம் அதிகம்.

கருவில் இருக்கும் குழந்தையின் மூளை, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு, தைராய்டு சுரப்பி சரியான அளவில் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். சில குழந்தைகள் பிறப்பிலேயே, பிறவி ஹைபோ தைராய்டிசத்தால் (congenital hypothyroidism), அதாவது தைராய்டு சுரப்பி இல்லாமலும், வளர்ச்சி பெறாமலும், அல்லது தைராய்டு சுரப்பதில் குறைபாடு உடனும் இருக்கலாம். பிறந்த சில நாட்களிலேயே சரியான முறையில் இதைக் கண்டறிந்துவிடலாம். அதற்கு முறையான சிகிச்சையான தைராய்டு சுரப்பி துணைமருந்துகளை (thyroid hormone supplementation) மருந்துகளைக் கொடுத்தால், அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.

கோவிட்-19 காலத்தில்...
கோவிட்-19 பரவியுள்ள காலத்தில் தைராய்டு நோயாளிகள், லிவோதைராக்சின் (Levothyroxine) மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையுடன் 3 மாதத்துக்கு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். வெளியே அடிக்கடி செல்லாமல் இருக்க வேண்டும். இந்த மருந்து, நம் நாட்டில் போதுமான அளவில் கிடைக்கிறது. அத்துடன் மருத்துவர்களுடன் மெய்நிகர் ஆலோசனை (virtual consultation) மூலமாக சிகிச்சை பெறலாம்.
அதிகமாக தைராய்டு சுரப்பதால் ஏற்படக்கூடிய கிரேவ்ஸ் நோய் (Graves disease), ஹஷிமோட்டோ தைராய்டிடிஸ் (Hashimoto's thyroiditis), தைராய்டு முடிச்சுகள் (Thyroid nodules), தைராய்டு புற்றுநோய் (Thyroid cancer) போன்றவையும் தைராய்டு கோளாறினால் ஏற்படக்கூடிய நோய்களே.

தன்னெதிர்ப்பு தைராய்டு நோய்களான (autoimmune thyroid disease), கிரேவ்ஸ் நோய் (Graves disease), ஹஷிமோட்டோ தைராய்டிடிஸ் (Hashimoto's thyroiditis) உள்ளவர்கள், கோவிட்-19 தொற்றுக்கோ அல்லது தாக்குதலுக்கோ ஆளாக மாட்டார்கள்.
ஹைபர்தைராய்டிசத்துக்கு (hyperthyroidism) பயன்படுத்தும், ஆன்ட்டி- தைராய்டு மருந்துகளான, நியோமெர்கசோல் (Neomercazole) அல்லது புரொபைல் தையோயூரசில் (Propylthiouracil) போன்றவற்றை நிறுத்தாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகளை உட்கொள்ளுவதால், ஆக்ராநியூலோசைடோசிஸ் (Agranulocytosis) என்ற ஒருவகையான அரிதான பக்கவிளைவான தொண்டை வலி, சுரம் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு. இது கோவிட்-19-ன் அறிகுறிகளுடன குழப்பம் அடைய செய்யும். என்றாலும் அருகில் உள்ள உட்சுரப்பியியல் நிபுணரை (endocrinologist) சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்த மருந்தைச் சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும் சரி, சுரம், தொண்டை வலி, கபம் போன்ற எந்த அறிகுறி தெரிந்தாலும், உடனே அருகில் உள்ள மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

டாக்டர் சுமதி

தைராய்டு புற்றுநோய்
கடந்த 25 ஆண்டுகளில், தைராய்டு புற்றுநோய் அதிரித்துள்ளது. இதற்குக் காரணம், குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது இருந்திருக்கலாம். பெண்கள், 40 வயது மேற்பட்டோர், கதிர்வீச்சுக்கு உட்படுவதற்கு முந்தைய காலம் ஆகிய அனைத்தும் மற்ற காரணங்கள். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக இந்த தைராய்டு புற்றுநோய் தாக்குகிறது. அதேநேரம் இறப்பு சதவீதத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிக அளவில் உள்ளனர்.

பெரும்பாலான தைராய்டு முடிச்சுகள் (Thyroid nodules) புற்றுக்கட்டிகள் அற்றவை (benign). அறிகுறிகள் தோன்றுபவர்களுக்கு பயாப்ஸி பரிசோதனை (biopsy) செய்யப்படும். புற்றுநோய் என உறுதி ஆன பிறகு, முதற்கட்டமாக அறுவை சிகிச்சை செய்யப்படும். பெரும்பாலான தைராய்டு புற்றுநோயை அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். கதிரியக்க அயோடின் (Radioactive iodine-RAI) மூலமாகவும், அடக்கப்பட்ட தைராய்டு ஹார்மோனை (suppressive thyroid hormone) வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செலுத்தியும் குணப்படுத்த முடியும்.

RAI என்பது வாய் வழியே கொடுக்கும் கதிர்வீச்சு முறை. இம்முறையில் தைராய்டு புற்றுநோய் அணுக்களை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொன்று, மீண்டும் வராமல் தடுக்கிறது. ஆனால், அதே நோய் மீண்டும் வருவதற்கு 30% சாத்தியம் உள்ளது. அதனால் நோயாளிகள், தங்கள் வாழ்நாள் முழுவதும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

இப்போது என்ன செய்யலாம்?

கோவிட்-19 நோய் பரவி இருப்பதால் தைராய்டு புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தைராய்டு புற்றுநோய் வேகமாக வளரக்கூடியது அல்ல. அதனால் அறுவை சிகிச்சையை ஒத்திவைத்தாலும், பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், புற்றுநோய்க் கட்டி பெரிய அளவில் இருந்தாலோ, மூச்சுத்திணறல் - விழுங்குவதற்குக் கடினமாக இருந்தாலோ, பயாப்ஸியில் அதிதீவிரமான அனபிலாஸ்டிக் தைராய்டு புற்றுநோய் (anaplastic thyroid cancer), மெட்யூலரி தைராய்டு புற்றுநோய் (medullary thyroid cancer), தொண்டையைப் பாதிக்கக்கூடிய வேறு வகையான புற்றுநோய் போன்றவை இருந்தாலோ, அறுவை சிகிச்சை அவசியம்.

RAI சிகிச்சை, பாப்பிலரி (papillary) அல்லது ஃபாலிகுலார் (follicular) தைராய்டு புற்றுநோய் நோயாளிகளுக்கு மிகவும் அவசியம். இந்த நோய்களுக்கு நுரையீரலில் மெட்டாஸ்டேஸ்கள் (metastases), உடலின் மற்ற உறுப்புகளில் புண்கள் (lesions) உண்டாவதால் சிகிச்சை அவசியமாகிறது.

கோவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில், ரேடியோ ஐசோடோப் (radioisotope) இறக்குமதியும் உள்நாட்டுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. RAI சிகிச்சையை 6 மாதங்கள்வரை ஒத்திவைக்கலாம், பெரிய அளவில் பாதிப்பு இல்லாதவர்களுக்கு அதற்கு மேலும்கூட ஒத்திவைக்கலாம். அதுவரை லிவோதைராக்ஸின் (levothyroxine) மாத்திரையைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

டாக்டர் எஸ். சுமதி,

கட்டுரையாளர், மூத்த நியூக்ளியர் மருத்துவப் பிரிவு நிபுணர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x