Published : 20 May 2020 07:38 AM
Last Updated : 20 May 2020 07:38 AM
இந்திய ராணுவமானது, மூன்றாண்டு ராணுவப் பணித் திட்டம் ஒன்றை ‘டூர் ஆஃப் டியூட்டி’ என்ற பெயரில் அறிவித்துள்ளது. இந்தப் பணியில் சேருவோருக்கு நிரந்தர ஊழியர்களைப் போல ஊதியம் கிடைக்கும். ஆனால், பணி முடிந்த பின் ‘முன்னாள் ராணுவத்தினர்’ என்ற தகுதியோ, எவ்விதப் பொருளாதாரச் சலுகைகளோ கிடைக்காது. மூன்றாண்டு பணி நிறைவில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையுடன் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதே இதன் சாராம்சம். ‘ராணுவப் பயிற்சி’ (இன்டெர்ன்ஷிப்) மூலம் மனித வளத்தைப் பயன்படுத்தலாம்; அதேசமயம், ஓய்வூதியம் உள்ளிட்ட ராணுவத்தினருக்கான வழக்கமான செலவுகளையும் குறைக்கலாம்; இப்படி மிச்சப்படுத்தப்படும் தொகையை ஆயுதங்கள், சாதனங்கள் வாங்கப் பயன்படுத்தி, ராணுவத்தை நவீனமயமாக்கலாம் என்பதே இந்தத் திட்ட முன்மொழிவின் பின்னுள்ள நோக்கம்.
இந்தத் திட்டத்தை அனுபவபூர்வமாக ஆய்வு செய்யுமுன் வெளிப்படையான ஒருசில உண்மைகளை நினைவில் கொள்வது அவசியம். முதலாவதாக, ராணுவத்தை அதன் தேவைக்கு இணங்க நவீனமாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைத் தவிர்த்து, தனது மனிதவளம் மற்றும் பணியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் தானே சேமித்துக்கொண்டு, தன்னைத் தானே நவீனமாக்கும் நிலைக்கு ராணுவம் தள்ளப்பட்டுள்ளதா என்பதே கேள்வி. இரண்டாவதாக, தொழில்-வணிகத் துறையில் மூலப்பொருட்களில் (raw material) மாற்றம் ஏற்படும் எனில், உற்பத்தியாகும் பொருட்களிலும் (product) மாற்றம் ஏற்படும். ராணுவத்தின் மூலப்பொருளே போர்வீரர்கள் என்ற மனிதவளம்தான். அந்த மூலப்பொருளில் மாறுபட்டாலோ அல்லது குறைபட்டாலோ உற்பத்திப்பொருளான நாட்டின் பாதுகாப்பும் மற்றும் போரில் வெற்றியும் வெறும் கனவாகத்தான் முடியும். எனவே, மூலப்பொருளில் கலப்படம் கூடாது. மூன்றாவதாக, வேலை இல்லாதவர்கள் அதிகமான இந்தச் சூழ்நிலையில், பெரும் ஆலைகளிலும் நிறுவனங்களிலும்கூட பயிலுநர்களை (interns) அனுமதிப்பதில்லை. காரணம், அவர்களைத் தற்காலிக மற்றும் உல்லாசப் பணியாளர்களாகத்தான் பார்க்கிறார்கள். இவர்களால் தங்களது அலுவலகங்களில் பணித்தொய்வு ஏற்படுவதாகவும், மேலும், அவர்களால் நிறுவனத்தின் பழகுமுறை (organisational culture) மற்றும் நிறுவனங்களின் நடைமுறை (organisational behaviour) சமரசத்துக்குள்ளாவதாகவும் அஞ்சுகிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பும், போர்வீரரின் வாழ்வும் சாவும் ராணுவத்தின் ஒவ்வொரு செயலிலும் மூச்சிலும் அன்றாடம் பிரதிபலிக்கும் நிலையில் பயிற்சியாளர்களாக ராணுவத்தில் பணியில் அமர்த்துவது என்பது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதாகவே முடியும். நான்காவதாக, இயந்திரத்தைவிட அதை இயக்கும் மனிதனே முக்கியம் என்ற அடிப்படை மனிதவளக் கொள்கை மற்றும் செயல்முறை அனுபவத்தில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இயக்கும் மனிதன் தொய்வடைந்தால் இயந்திரம் தானியங்கியாகப் பயன் அளிக்காது.
ராணுவத் தளபதி தனது கலந்துரையாடலில் இந்தப் பணி முறையை ஒரு முன்னோட்டமாகக் குறைந்த எண்ணிக்கையில் அதிகாரிகளையும் மற்ற பொறுப்புகளுக்கு உரியவர்களையும் பணியில் அமர்த்தி செயல்முறை ஆய்வு (trials) செய்யப்போவதாகக் கூறியுள்ளார். தகுதி உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையில் கிடைப்பார்கள் என்பது உண்மைதான். அதனால் கிடைக்கும் ஆய்வு முடிவும் ஊக்கமளிப்பதாகவே இருக்கும். ஆனால், அதே வெற்றி பெருமளவில் பணியில் அமர்த்தும்போது கிடைக்குமா என்பது ஐயமே. இயந்திரங்களுக்கு இம்மாதிரி முன்னோட்டம் பொருந்தலாம். ஆனால், இரண்டு மனிதர்கள் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒன்றுபோலச் சிந்திப்பதில்லை. ஒன்றுபோலச் செயல்படுவதில்லை. இயந்திரமோ மாறாத தன்மை கொண்டது. ஆனால், மனிதனோ மாறும் தன்மை கொண்டவன். அதிலும் குறிப்பாக, நமது நாட்டில் மனித வளம் என்பது பல்வேறு பின்புலங்களிலிருந்து - மதம், இனம், மொழி, பண்பாடு, உணவு போன்றவற்றிலிருந்து - பெறப்படுகிறது. அப்படிப் பெறப்படும் மனிதவளம் சிறு எண்ணிக்கையில் வேண்டுமானால் பலனளிக்கலாமே தவிர, பெரும் அளவில் பயனளிக்காது. அதுவும் தனது உயிரையே பணயம் வைக்கும் ராணுவப் பணியில் இது நிச்சயமாகப் பயனளிக்காது. எனவே, சிறு எண்ணிக்கையில் முன்னோட்டம் காண்பதுகூட தேசியப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும். வேண்டுமெனில், பெரும் எண்ணிக்கையில் இந்தச் சோதனை முயற்சி பலனளிக்கலாம்.
ராணுவத்தில் பயிற்சி முழுமை அடையாத மற்றும் போர் அனுபவம் பெறாதவர்களை 'பச்சை வீரர்கள்' (Green Soldiers) என்று அழைப்பதுண்டு. இந்திய ராணுவம் மிகவும் பழமையானது. ஒருசில படைப்பிரிவுகள் 150 ஆண்டுகள் பழமையானவை. அவற்றை ‘ரெஜிமென்ட்’ என்று அழைப்பார்கள். குறிப்பாக, காலாட்படைப் பிரிவுகளில் ஒரு சிப்பாய் பயிற்சி முடிந்து பணிநியமனம் செய்யப்பட்ட பிறகும் 2-3 ஆண்டுகள் போருக்கு அனுப்பப்படாத பழக்கம் உள்ளது. பயிற்சி அனுபவத்தைக் களத்தில் செயல்படுத்தக் குறைந்தபட்ச அனுபவமாவது தேவை. பொதுவாகத் தொழிற்சாலைகளில் பட்டப் படிப்பு பெற்ற பொறியாளர்களைவிட, அனுபவ அறிவு உள்ள பட்டயப் படிப்பு பெற்றவர்களையே பெரிதும் விரும்புவார்கள். ராணுவத்தில் பயிற்சி நிறைவடைந்தவர்களை உடனே போர்க்களத்துக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, 2-3 ஆண்டுகளுக்கு அவர்களைக் கடினமான பணிகளில் அமர்த்த மாட்டார்கள். அவர்களைப் பெரும்பாலும் பாதுகாப்பு நிறைந்த மற்றும் அடிப்படையான வேலைகளில் மட்டும்தான் பணியமர்த்துவார்கள். அவர்களை முதிர்ந்த அனுபவம் பெற்ற சில வீரர்களுடன் பணியில் அமர்த்தி, அவர்கள் முழு அனுபவம் பெற்ற பிறகே போர்க்களத்துக்கு அனுப்புவார்கள். அதாவது, சிங்கம் தனது குட்டிகளுக்கு வேட்டையாடும் அனுபவத்தைப் பயிற்றுவித்து, அவற்றைத் தனியே வேட்டைக்கு அனுப்புவதைப் போல. ஆகையால், புதுமுகப் பணியில் அமர்த்தப்படும் வீரர்களின் மொத்தப் பணியே 3 ஆண்டுகள் எனும்போது, அவர்களை முன்னணிப் படைப்பிரிவுகளில் பணியமர்த்துவது என்பது வன்கொடுமைச் செயலாகவும், அவர்களுக்குச் சுமையளிப்பதாகவே முடியும். தவிரவும், அவர்கள் பச்சை வீரர்களாகவே ராணுவத்திலிருந்து வெளியேறுவார்கள். மேலும், இந்தச் சோதனை முயற்சி முன்னணிப் படைப்பிரிவுகளுக்கும் பெரும் சுமையாகவே இருக்கும். ஆனால், முன்னணிக்குப் பின்புலமாகப் பணியாற்றும் மற்ற படைப்பிரிவுகளில் (support services), அதுவும் மொத்தமாகப் பணியமர்த்தி ஆய்வு நடத்திய பிறகே, அவர்களைப் பயன்படுத்தலாம்.
படைவீரர்களுக்கு மிகவும் முக்கியமானது போர்க்குணம். அதாவது, ‘வாழ்ந்தால் அனைவரும் வாழ்வோம். வீழ்ந்தால் அனைவரும் வீழ்வோம்’ என்னும் போர்க்குணமே ஒவ்வொரு படைப்பிரிவின் போர் வெற்றிக்கும் வித்தாகும். இதுவே, ராணுவத்தின் உயிர்நாடி. குறிப்பாக, காலாட்படையில் எந்த வித இடர்ப்பாடுகளிலும் உந்துசக்தியாக இந்தப் போர்க்குணமே செயல்படும். பெருநிறுவனங்கள்கூட இந்த உந்துசக்தியையே தங்கள் தாரக மந்திரமாகக் கருதுகின்றன. இந்த உச்சகட்ட மனிதத் திறனே உற்பத்திப் பெருக்கத்துக்கு ஊற்றுக்களம். ராணுவத்தில் இந்த உந்துசக்தி சீருடை அணிவதால் மட்டுமே வராது. இந்த உந்துசக்தியைப் பெறப் பல வருடங்கள் ஆகலாம். கூட்டுப் பயிற்சியினாலும் சோதனைக் களத்திலுமே இந்த உந்துசக்தி வளர்த்தெடுக்கப்படுகிறது. வெறும் மூன்றே ஆண்டுகளில் இந்த போர்க்குணம் உருவாகும் என்பதில் உறுதி இல்லை. குறிப்பாக, புதுமுகப் பணியாளர்களின் மனநிலை, அவர்களின் அணுகுமுறை மூன்று ஆண்டுகளைப் போக்குவதிலேயே இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு இந்தப் பணி நிரந்தரமல்ல. படைவீரர்களுக்கே உரிய போர்க்குணம் இல்லாவிடில், ஒரு தனிமனிதன் என்னதான் வீரனாக இருந்தாலும் அவனால் போர்க்களத்தில் வெற்றிபெற இயலாது. ஆகவே, புதுமுகப் பணியாளர்கள் போர்வீரர்களாக உருவாகாமல் வெறும் வழிப்போக்கர்களாகவே இருப்பார்கள்.
ராணுவத்தில் பணிமாற்றம் என்பது மற்ற பணிகளைப் போல எளிதான நடைமுறை அல்ல. ராணுவத்தில் அதன் விளைவுகள் மிகவும் முக்கியமானவை. ராணுவத்தில் படைப்பிரிவுகளின் தொடர்ச்சியான உறவு (continuity of relationship) மிகவும் முக்கியம். பொதுவாக, ஒரு படைப்பிரிவில் இரண்டு வீரர்கள் ஒருவருக்கு மாற்றாக மற்றொருவர் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பணிபுரிவது அவர்களிடையே நல்லுறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்க்கும். இந்தப் புதிய திட்டத்தின்படி 15 ஆண்டுகளில் 5 பயிற்சி வீரர்கள் தலா ஒவ்வொரு வீரரும் மூன்று ஆண்டுகள் பணிபுரிவதன் மூலம் ஒவ்வொருவரும் பச்சை வீரர்களாகவே தமது பணியை நிறைவுசெய்வார்கள். அவர்களிடையே மேற்குறிப்பிட்ட நல்லுறவை எதிர்பார்க்க முடியாது. இது அந்த படைப்பிரிவின் போர்க்குணத்துக்கே உலைவைப்பதாக முடியும். இம்முறை பணிச்சுழற்சியில் மேலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
இந்தப் புதுமுகப் பணித்திட்டம் மேம்போக்காக சிக்கன நடவடிக்கையாகத் தோன்றினாலும், இதனால் தேவையற்ற செலவுகளையே மேற்கொள்ள நேரிடும். பழைய முறைப்படி 15 ஆண்டுகளுக்கென்று ஒரு வீரரைத் தேர்வுசெய்தால் போதும். இந்தப் புதிய திட்டத்தில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் வீரர்களைத் தேர்வுசெய்ய வேண்டிவரும் என்பதால்,மேலும் செலவுதான் ஆகும். அவர்களைத் தேர்ந்தெடுத்து, சீருடை அணிவித்து, பயிற்சி கொடுத்துப் பணி நியமனம் செய்யும் செலவானது, ஒவ்வொரு 3 வருடங்களிலும் தொடர் செலவாக (recurring expenditure) பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதாவது, 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகும் செலவானது, இந்தப் புதிய திட்டத்தால் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் செலவு செய்யுமாறு அமைந்து 5 மடங்கு செலவாகிவிடும். இதைத் தவிர, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தத் திட்ட நிறைவேற்றத்தால் ஆகும் மனிதவளச் செலவும் கணிசமானது. இவ்வாறாக, பணச் செலவு, பொருள் செலவு, மனிதவளச் செலவு என்று செலவினங்கள் கூடிக்கொண்டே போகுமே தவிர குறையாது. இவ்வளவு செலவும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை - அதுவும் 3 ஆண்டுகள் கழித்து வெளியேறப்போகும் மனித வளத்துக்கு எனும்போது, அது தவிர்க்கப்பட வேண்டிய செலவாகவே தோன்றுகிறது.
இந்தப் புதிய திட்டத்தின் மூலமாகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் தகுதியும், திறமையான மனித வளமும் ராணுவத்துக்குப் பெறப்படும் என்று ராணுவத் தளபதி கூறுகிறார். இப்போதைய நடைமுறைப்படி நிரந்தரப் பணி, பணிப் பாதுகாப்பு, பல்வேறு சலுகைகள், ஓய்வூதியப் பலன்கள் என்று இருக்கையிலேயே ராணுவத்துக்குத் தேவையான தகுதியும் திறமையான மனிதவளமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்தச் சூழ்நிலையில் பணியையும் தற்காலிகமாக்கி, பணிக்காலத்தையும் குறைத்து, பணிக்காலத்துக்குப் பின்னர் எந்தவிதமான பணப் பலன்களும் இல்லாமலாக்கப்பட்ட இந்தப் புதிய திட்டத்தால், இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது உறுதி கிடையாது. இந்தப் புதிய திட்டத்தால், வேலைவாய்ப்புகள் வேண்டுமானால் அதிகரித்து, வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கலாமே தவிர, இதனால் ராணுவத்துக்கு நீண்டகால நன்மை ஏற்படப்போவதில்லை. வேலை தேடும் இளைஞர்களுக்கு வேண்டுமானால், ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற முறையில் இது பலனளிக்கலாமே தவிர, ராணுவத்துக்கு இது பலனளிக்கப்போவதில்லை.
ராணுவத் தளபதி தனது உரையில் இந்தப் புதிய திட்டத்தால் ராணுவத்தில் சேருவதற்கான தகுதிகளில் ஒருபோதும் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறினாலும், அது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஏனெனில், குறிப்பாக அதிகாரிகள் தேர்வில் தகுதிக் குறைவு என்பது தலைமைக் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.
இந்த அறிமுக மற்றும் புதுமுகப் பணியை நிறைவுசெய்த பின்னர் பெருநிறுவனங்களில் இவர்களுக்குப் பெரும் வரவேற்பும் மதிப்பும் இருக்கும் என்பது ராணுவத் தளபதியின் கணிப்பு. இது கால் நூற்றாண்டுக்கு முன்னர் வேண்டுமானால் உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், பெருநிறுவனங்கள் மனிதவளத் தேர்வு, பயிற்சி, பணியமர்த்துதல், பணிச்சுழற்சி, பணி மேம்பாடு என்று பெரும் செலவுசெய்து தங்களை மேம்படுத்திவரும் காலம் இது. இக்காலத்தில், இந்தப் புதிய திட்டத்தால் சேர இருக்கும் இளைஞர்கள், 3 ஆண்டுகள் பணி நிறைவு முடிந்த பிறகு, தமது சக இளைஞர்களைவிட தொழில்நுட்பம் மற்றும் பெருநிறுவன மேலாண்மையில் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள். குறுகிய காலப் பணியை (short service commission) நிறைவுசெய்த அதிகாரிகள் ராணுவத்திலிருந்து வெளியே வரும்போது, அவர்களுக்கு 30-35 வயதுக்குள்தான் இருக்கும். மேலும், அவர்கள் மிகுந்த ஆளுமைத் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால், புதுமுக/ அறிமுகப் பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சிக் காலம் மற்றும் செலவு - இவை இரண்டையும் ராணுவம் சுருக்குவதால், எந்த விதமான ஆளுமைத் திறன் பயிற்சியும் இல்லாதவர்களாக அவர்கள் வெளியில் வருவார்கள் என்பதே உண்மை. தமது சக இளைஞர்களைவிடத் திறமை குறைந்தவர்களாகவோ, மறுபடியும் வேலை தேடுபவர்களாகவோதான் அவர்கள் வெளியில் வருவார்கள். மேலும், அவர்களுக்கு ராணுவத்தில் கிடைத்த ஊதியத்தைவிட அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. எனவே, இந்தப் புதிய திட்டத்தால் இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.
ராணுவச் சீருடையின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் - ஆனால், தமது வாழ்வின் முழுமையையும் ராணுவத்தில் பணிபுரிவதை விரும்பாதவர்களை இந்தப் புதிய திட்டம் கவரும் என்று ராணுவம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. சுருங்கச் சொன்னால், ராணுவத்தில் பணிபுரிந்த பெருமையை மட்டும் பெற வேண்டும். ஆனால், அந்தப் பணியில் உள்ள இடர்ப்பாடுகள் தமக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் ராணுவத்துக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்கள்.
ராணுவத்தின் சிறப்புக் கூறுகள் என்று கருதப்படுபவை ஒழுக்கமும் ஊக்கமும் (discipline & motivation) ஆகும். புதுமுக/அறிமுகப் பணி வீரர்களால் இந்த சிறப்புக் கூறுகளில் ஊறு விளைய வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, நிரந்தரப் பணியில் உள்ள வீரர்கள் 15 ஆண்டுகளில் ஒவ்வொரு 3 ஆண்டுகளாக மொத்தம் 5 புதுமுக/ அறிமுகப் பணியாளர்களுடன் பணியில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது, நீண்ட கால உறவு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. வாழ்வும் சாவும் இங்குதான் என்ற மனப்பக்குவம் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஒருபுறம்; ராணுவத்தில் சேர்ந்த நாள் முதல் 3 ஆண்டுகளை நாட்கணக்கில் எண்ணும் அறிமுகப் பணியாளர்கள் மறுபுறம். இவர்களின் எண்ணமும் மனப்பாங்கும் போக்கும் எதிரெதிர் துருவங்கள். தமது பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையில் இரு பிரிவினருக்கும் பலத்த வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். நிரந்தரப் பணியில் உள்ள அதிகாரிகள் அறிமுகப் பணியாளர்கள் செய்யும் தவறுகளைத் தண்டிக்காத நிலைகூட ஏற்படலாம். அவர்களை ஒரு விருந்தினர்போல நடத்தும் மனப்பாங்கும், தவறுகளைக் கண்டிக்காத நடைமுறையும் பெரிதும் ஒழுக்கக் கேட்டில் ராணுவத்தைக் கொண்டுசேர்க்கும். இந்த விதமான ஒழுங்குச் சீர்குலைவே அறிமுகப் பயிற்சியின் பின்விளைவு என்று பெருநிறுவனங்களே பின்வாங்கும் நிலையில், ஒழுக்கத்தையும் ஊக்கத்தையும் தமது இரு கண்களாகக் கருதும் ராணுவத்தில், இதுபோன்ற ஒரு நிலைப்பாடு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை செய்வதற்கே இயலவில்லை.
போர்க்களத்தில் நிரந்தர வீரரும் அறிமுக வீரரும் உயிரிழக்கும்போது, முன்னவர்க்கு ஒருவிதமான பணப் பலன்களும் பின்னவர்க்கு வேறுவிதமான பணப் பலன்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தச் செயல்முறையை எதிர்த்து சட்டத்தின் முன் அசமம் (inequality before law) என்று பின்னவர் நீதிமன்றத்தில் முறையிட மாட்டார் என்று உறுதியாகக் கூற முடியாது. இதைச் சீர்செய்ய ராணுவச் சேவை சட்டம் (Defence Service Regulations) மட்டும் போதாது. இதற்கென தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
மேற்கூறிய காரணங்களால் புதுமுக/அறிமுகப் பணி (tour of duty) ராணுவத்துக்கு எந்த வகையிலும் ஏற்புடையதாக இருக்காது. உயிர்ப்பலி கேட்கும் போர்க்களத்தில் புதுமுகம்/அறிமுகம் என்ற பெயரில் உயிர்ச்சேதம் ஏற்படுவது ஏற்புடையதே அல்ல. மேலும், குறைந்த எண்ணிக்கையில் இந்தத் திட்ட முன்னோட்டம் மனிதவளத்துக்கு எந்த விதத்திலும் வளம் சேர்க்கப்போவதில்லை. தவிரவும் 3 ஆண்டுகள் அறிமுகப் பணி என்பது மிகவும் குறைந்த காலம். பணியில் சேர்ந்து பயிற்சி நிறைவுபெறும் வேளையில், பணி நிறைவடைந்துவிடும். இந்தச் சூழ்நிலையில் இந்தப் பணியாளர்களின் சேவையும் தேவையும் ராணுவத்துக்கு நீண்ட கால நன்மை அளிக்காது. போர்க்குணம், சகோதரத்துவம், ஒழுக்கம், ஊக்கம், கடமை உணர்ச்சி - இப்படி அனைத்திலும் தரக்குறைவுதான் ஏற்படும். மேலும், இவர்களுக்காக 5 மடங்கு செலவு அதிகரிப்பதுடன் மனிதவளத்தை ஒவ்வொரு 3 ஆண்டுகளும் பயன்படுத்தும் கூடுதல் பணிச்சுமையும் நிரந்தர வீரர்களுக்கு ஏற்படும். மேலும், வீரர்கள் அதிகம் தேவைப்படும் முன்னணிப் படைப்பிரிவுகளுக்கு இந்தப் புதிய திட்டம் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கோடரி கொண்டு தன் காலைத் தானே வெட்டுவதற்குச் சமமாகும் இந்தத் திட்டம்.
ராணுவம் நவீனமயமாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கான முன்னெடுப்பைச் செய்வது ராணுவத்தின் கடமை. அதை நிறைவேற்றுவது அரசின் கடமை. கல்லூரிக்குச் செல்லும் மாணவன் ஒருவனை அவனது தந்தை அவனது படிப்புச் செலவைச் சிக்கனப்படுத்தி அந்தச் செலவில் வீடு கட்டும் செலவை மேற்கொள்வதற்கு ஒப்பானதாகும் இந்தப் புதிய திட்டம். இதன் மூலம் ராணுவம் ஒருவேளை நவீனமாகலாம். ஆனால், ராணுவத்தின் மனிதவளம் தேவையற்ற முறையில் செலவுசெய்யப்பட்டு வீணாகிவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். முறையாகப் படிப்பது எப்படி மாணவனின் கடமையோ, அப்படியே அவனுக்கான செல்வத்தைச் சேர்ப்பது தந்தையின் கடமை. அதைப் போன்றே ராணுவத்தை நவீனப்படுத்துவது அரசின் கடமை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ராணுவத்தின் கடமை. இந்தப் பொறுப்புணர்ச்சி இல்லை என்றால், நாளை ராணுவத்தில் நிறைய பதவிகள் பறிபோவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ராணுவத் தளபதி பதவியைத் தவிர, அனைத்துத் துணைப் பதவிகளும் தேவையற்ற செலவை ஏற்படுத்துவதால் அந்தச் செலவில் ராணுவத்தை நவீனப்படுத்தலாம் என்று நாளை கருதுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், இந்தக் குறுகிய நோக்கம் கொண்ட திட்டம் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே முடியும்.
- பிரிகேடியர் ஜே.எம்.தேவதாஸ் (ஓய்வு),
தமிழில்: நா.சோமசுந்தரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT