Published : 15 May 2020 01:51 PM
Last Updated : 15 May 2020 01:51 PM
ஜனவரி மாதம் 20-ம் தேதி, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, மருத்துவப் பயிற்சி பெற்ற தன் உதவியாளர் ஒருவரை தொலைபேசியில் அழைத்தார். சீனாவில் ஒரு புதிய வைரஸ் அபாயகரமான முறையில் பரவியிருப்பதைப் பற்றிய செய்தியை இணையத்தில் படித்துவிட்டு, “அந்த வைரஸ் இங்கே வருமா" என்று கேட்டார். அந்த உதவியாளர், உறுதியாக இங்கேயும் வரும் மேடம் என்று பதிலளித்தார். இப்படித்தான் ஷைலஜா, கரோனாவை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கினார்.
நான்கு மாதங்கள் ஆன நிலையில், கோவிட்-19 வைரஸால் 524 பேர் பாதிக்கப்பட்டு நான்கு மரணங்களை மட்டுமே சந்தித்த மாநிலமாக கேரளா திகழ்கிறது. சமூகப் பரவல் இல்லவே இல்லை. 3 கோடியே ஐம்பது லட்சம் பேர் மக்கள்தொகை கொண்ட இந்த மாநிலத்தில் தனிநபர் வருவாய் என்பது 2 ஆயிரத்து 200 ரூபாய். பிரிட்டனின் மக்கள்தொகையோ இதைவிட இரண்டு மடங்கு. தனிநபர் வருவாய் 33 ஆயிரத்து 100 ரூபாய். ஆனால், பிரிட்டன் சந்தித்த மரணங்கள் 40 ஆயிரம்.
ஷைலஜா டீச்சர் என்று கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் 63 வயது அமைச்சர் ஷைலஜாவுக்கு, கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர் கரோனா வைரஸை வதம் செய்தவர், ராக் ஸ்டார் ஹெல்த் மினிஸ்டர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் கூடியுள்ளன. உற்சாகமும் நேசமும் கொண்ட தோற்றத்துடன் இருக்கும் முன்னாள் அறிவியல் ஆசிரியையான இவர், ஒரு ஏழை ஜனநாயக நாட்டில் அச்சுறுத்தக்கூடிய பெருந்தொற்று நோயைத் தடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
சோதி; தேடு; தனிமைப்படுத்து; உதவு
சீனாவில் புதிய வைரஸ் பரவல் பற்றிய செய்தியைப் படித்து மூன்று நாட்களில், கேரளத்தில் முதல் கோவிட் -19 தொற்றிய நபர் உறுதி செய்யப்படுவதற்கு முன்னரே தனது குழுவினருடன் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டார். அந்தக் குழுவினர் ஜனவரி- 24 -ம் தேதி, கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து, கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் மருத்துவ அதிகாரிகளை அழைத்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பதற்கு உத்தரவிட்டனர். சீனாவின் வூஹானிலிருந்து முதல் நோயாளி ஜனவரி 27-ம் தேதி கேரளத்தில் விமானத்தில் இறங்கிய போது, உலக சுகாதார நிறுவனத்தின் நடைமுறைகளான, சோதிப்பது, தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களைத் தேடுவது, தனிமைப்படுத்துவது, மருத்துவ உதவி செய்வது ஆகியவற்றை ஏற்கெனவே கேரளம் செய்யத் தொடங்கியிருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வசதி
ஒருகட்டத்தில் கேரளம் முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு, ஆரோக்கியப் பணியாளர்களின் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். வீட்டுக்குள் கழிப்பறை இல்லாத நிலையில் இருந்த வீடுகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அரசின் செலவில் தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். இதன் மூலம் அந்த எண்ணிக்கை 21 ஆயிரமாக குறைந்தது.
“அண்டை மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றுவதற்கு வந்து ஊரடங்கால் இங்கே சிக்கிக்கொண்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவை ஆறு வாரங்களுக்கு வழங்கினோம். இப்போது தனி ரயில்களில் அவர்கள் ஊர்திரும்பி வருகின்றனர்" என்கிறார் ஷைலஜா.
கோவிட்-19 பரவலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஷைலஜா இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டில் அம்மாநிலத்தைத் தாக்கிய நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கெனவே புகழ்பெற்றவர்தான். நிபா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது ஒரு கிராமத்துக்கு நேரடியாகச் சென்றிறங்கி அங்கே பயத்தில் இருந்தவர்களை ஆற்றுப்படுத்தினார்.
“எனது மருத்துவர்களுடன் அங்கே விரைந்து சென்றேன். பஞ்சாயத்து அலுவலகத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரை விட்டு நோய் பயம் காரணமாக கிளம்ப இருந்தவர்களை, போவதற்கு அவசியமில்லை என்றும், நேரடித் தொடர்பின் வழியாக மட்டுமே வைரஸ் பரவும் என்றும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். நோய் பாதித்து இருமும் நபரிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளியிருந்தால் போதும், நிபா வைரஸால் பயணிக்க முடியாது என்பதை எடுத்துக் கூறினேன். அவர்கள் அமைதியடைந்தனர்.” என்கிறார்.
கோவிட் -19ஐ எதிர்கொள்வதற்கு நிபா தடுப்பு நடவடிக்கைதான் ஷைலஜாவைத் தயார்படுத்தியிருந்தது. மருத்துவ சிகிச்சையோ தடுப்பு மருந்தோ இல்லாத எளிதாகத் தொற்றும் ஒரு நோயைச் சமாளிப்பதற்கான அனுபவத்தை அவர் பெற்றார்.
இவர் உறுப்பினராக இருக்கும் சிபிஐ(எம்) கட்சி, கேரளத்தை ஆளும் கட்சிகளில் ஒன்றாக ஆனபோது இவருக்கு ஒரு வயது. அப்போது அந்தக் கட்சி பிளவுபடாமல் இருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஷைலஜாவின் பாட்டி, தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்.
கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது நடைபெற்ற நிலச்சீர்திருத்தம் தான் அதிக நிலம் வைத்திருந்த குடும்பங்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து, குத்தகை விவசாயிகளை நில உரிமையாளர்களாக்கியது. இதன்வாயிலாக பொது ஆரோக்கிய அமைப்பு பரவலாக்கப்பட்டு பொதுக்கல்விக்கும் கூடுதல் முதலீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப சுகாதார மையமும், மருத்துவமனைகளும் பத்து மருத்துவக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன.
“நான் எனது பாட்டியிடமிருந்து விவசாயிகளின் போராட்டம் குறித்தும் சுதந்திரப் போராட்டம் குறித்தும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் சிறந்த கதைசொல்லி” என்கிறார் ஷைலஜா. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஆரோக்கியக் கொள்கை இருக்கும் என்பதைக்கூறும் ஷைலஜா, கேரள அரசு அந்தக் கொள்கை மாதிரியைக் கொண்டு பணியாற்றியிருக்காவிட்டால் கோவிட் -19 ஐ எதிர்கொண்டிருக்க முடியாது என்கிறார்.
சரியான திட்டமிடல்
கேரளத்தில் கரோனா பரவத் தொடங்கியபோது, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் இரண்டு மருத்துவமனைகளை இதற்கென்றே ஒதுக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 500 படுக்கைகள் வசதி செய்யப்பட்டன. தனியான நுழைவு, வெளியேறும் வழிகள் உருவாக்கப்பட்டன. நோயறியும் பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், பணக்கார மேற்கத்திய நாடுகள் அவற்றை ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யத் தொடங்கிய நிலையில், நோய் அறிகுறிகள் தெரிபவருக்கும் அவருடைய நெருங்கிய தொடர்புகளுக்கும் மட்டுமே சோதனைகள் செய்யப்பட்டன.
கோவிட் -19 சோதனையைப் பொறுத்தவரை 48 மணிநேரத்தில் முடிவுகளைத் தெரிவிக்குமாறு ஏற்பாடு செய்ததாக ஷைலஜா சொல்கிறார். அமெரிக்கா, வளைகுடா நாடுகள், பிரிட்டன் போன்ற தொழில்நுட்ப வசதி பெருத்த நாடுகளிலேயே ஏழு நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
கரோனா வைரஸ் இரண்டாவது அலையாகத் திரும்பினால் அதற்கும் தயாராக இருக்கிறார் ஷைலஜா. பள்ளி ஆசிரியர்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளார். ஷைலஜாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ளது.
ஷைலஜாவின் வெற்றிக்கான ரகசியம் ஏதாவது உண்டா என்று கேட்டால், சரியான திட்டமிட்டல் மட்டுமே என்று தொற்ற வைக்கும் சிரிப்புடன் பதில் கூறுகிறார்.
-தி கார்டியன்
சுருக்கமாக தமிழில் : ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT