Published : 17 Dec 2019 08:03 AM
Last Updated : 17 Dec 2019 08:03 AM
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெற்றிருக்கும் பெரும்பான்மையானது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவில் விலகுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட பிரச்சாரத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாகும். 650 இடங்கள் கொண்ட பொதுமக்கள் அவையில் 365 இடங்களைப் பெற்றிருக்கிறது போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி. இது கடந்த முப்பதாண்டுகளில் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. பிரபல சோஷலிஸவாதியான ஜெரெமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சி, 203 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளில் அக்கட்சியின் மிக மோசமான வீழ்ச்சி இது.
பிரெக்ஸிட் தீர்மானத்துக்கு ஆதரவான அனைத்து வாக்குகளையும் ஒன்றுசேர்க்கும் போரிஸ் ஜான்சனின் உத்திகள், விலகல் முடிவை விரைவுபடுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய முடிவுகளை எடுக்கவைத்துள்ளது. எதிர்ப்புறத்தில் உள்ள தொழிலாளர் கட்சியோ பிரெக்ஸிட் விஷயத்தில் ஒரு உறுதியான முடிவெடுக்க முடியாமல் திணறிவருகிறது. மற்றொரு வாக்கெடுப்புக்கு உறுதியளித்த கார்பைன், வாக்கெடுப்பில் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று சொல்ல மறுத்துவிட்டார். அவரது கவனம் முழுவதும் பொருளாதாரத்தின் மீது உள்ளது. புரட்சிகரமான தனது பொருளாதாரத் திட்டங்களானது பிரெக்ஸிட் மீதான விவாதங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று அவர் நம்பியிருந்திருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை.
போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் உடன்பாடு தன்னளவிலேயே சிக்கல்களைக் கொண்டது. அதை நடைமுறைக்குக் கொண்டுவந்தால், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து தீவுக்கிடையே சுங்க எல்லை உருவாகும். பிரிட்டிஷ் அரசின் ஒற்றுமையை வலுப்படுத்தி, வடக்கு அயர்லாந்துக்கு அமைதியைக் கொண்டுவரும் ‘புனித வெள்ளி உடன்பாடு’ மீதான அவரது அணுகுமுறை என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுகிறது.
இரண்டாவதாக, பிரெக்ஸிட் நடைமுறையின் மிக சிக்கலான பகுதி, அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான எதிர்கால உறவு எப்படி அமையும் என்பதுதான். ஒன்றியத்திலிருந்து விலகும் 11 மாத இடைக்காலத்திலேயே அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்று போரிஸ் ஜான்சன் உறுதியளித்திருக்கிறார். என்றாலும், முழுமையான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வர மேலும் சில ஆண்டுகளாகும்.
இறுதியாக, பிரெக்ஸிட் பிரச்சினைக்கும் மேலாக, இத்தேர்தல் முடிவுகள் பிரதமருக்கு நிர்வாகம், அரசமைப்புரீதியான சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அவைகளில் உள்ள 59 இடங்களில் 48 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. ஸ்காட்லாந்து சுதந்திரமாகப் பிரிந்துசெல்ல இரண்டாவது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஏற்கெனவே அக்கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த வாக்கெடுப்பை எதிர்க்கும் போரிஸ் ஜான்சனுக்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சிக்கும் இடையே மோதல்களுக்கான வாய்ப்புகளே அதிகம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்துபோவதற்குக் காரணமான பிரதமர் என்று போரிஸ் ஜான்சன் வரலாற்றில் இடம்பிடிக்கலாம். ஆனால், அதற்கு என்ன விலை கொடுக்க நேரும் என்று தெரியவில்லை. அந்தக் கேள்விக்கு இனிவரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதில் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT