Published : 25 Sep 2019 08:45 AM
Last Updated : 25 Sep 2019 08:45 AM
தன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தனிப்பட்ட ஒருவர் ஆன்மிக முக்தியை அடைந்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அத்வைதத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் அத்தியாவசியமான ஐக்கியத்தையும் அதற்காகவே உயிர் வாழ்வன எல்லாவற்றின் ஐக்கியத்தையும் நான் நம்புகிறேன். ஆகையால், ஒரு மனிதன் ஆன்மிக லாபத்தை அடைந்தால், உலகம் முழுவதும் அந்த லாபத்தை அடைகிறது. ஒரு மனிதன் இதில் தவறிவிட்டால், அந்த அளவுக்கு உலகம் முழுவதும் தவறிவிடுகிறது என்றும் நான் நம்புகிறேன்.
***
ஒன்று மாத்திரம் நிச்சயம். பைத்தியக்காரத்தனமாக ஆயுத பலப்போட்டி தொடர்ந்து நடந்துகொண்டுவருமானால், சரித்திரத்தில் என்றுமே நடந்தறியாத வகையில் படுகொலை நாசமே இதனால் விளையும். இப்போரில் வெற்றி பெறுகிற நாடு ஒன்று மிஞ்சுமானால், இப்படிப்பட்ட வெற்றி, வெற்றி பெற்ற நாட்டுக்கு உயிருடன் சாவாகவே இருக்கும். அகிம்சை முறையை, அதன் மகத்தான முழு விளைவுகளுடன் தைரியமாகவும் நிபந்தனையின்றியும் ஏற்றுக்கொண்டுவிட்டாலன்றி, வரப்போகும் படுநாசத்திலிருந்து தப்பிவிடவே முடியாது.
***
தன்னிறைவு எவ்விதம் மனிதனுக்குச் சிறந்ததாகிறதோ அதேபோல பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதும் சிறந்த காரியமாக இருக்க வேண்டும். சமூகமாகக் கூடி வாழ்பவனே மனிதன். சமூகத்துடன் பரஸ்பர உறவு இல்லாமல், பிரபஞ்சத்துடன் ஒன்றாகிவிடுவதையோ தான் என்ற அகந்தையை அடக்குவதோ அவனால் அடைய முடியாது. சமூகத்தில் பரஸ்பரம் பிறர் உதவியை நாடி வாழ வேண்டியிருப்பது, தனது நம்பிக்கையைச் சோதித்துக்கொள்ளுவதற்கும், உண்மையாகிய உரைகல்லில் தன் தகுதியைச் சோதித்துக்கொள்வதற்கும் உதவுகிறது. உடனிருக்கும் மனிதர்களின் உதவி ஒன்றுமே இல்லாமல் வாழ முடியும் என்ற நிலைமையில் ஒருவன் இருந்தால், முற்றிலும் அப்படிச் செய்துகொண்டுவிட அவனால் முடிந்துவிட்டால், அவன் கர்வம் பிடித்தவனாகவும் ஆகிவிடுவான். சமூகத்தின் உதவியுடன் அவன் வாழ வேண்டியிருப்பது, காருண்யத்தின் படிப்பினையை அவனுக்குப் போதிக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய அத்தியாவசியமான தேவைகளையெல்லாம் தானேதான் தேடிக்கொண்டாக வேண்டும் என்பது உண்மையே. ஆனால், தன்னிறைவு என்பது, சமூகத்திலிருந்து தன்னைத் தனிமையாக்கிக்கொண்டுவிடுவதில்போய் முடிந்துவிடுமானால், எனக்கு அது பாவமாகவே ஆகிறது என்பதும் உண்மை. பருத்தியைச் சாகுபடி செய்து நூலாக நூற்பது வரையிலுள்ள எல்லா முறைகளிலும்கூட மனிதன் பிறர் உதவியின்றித் தானே எல்லாவற்றையும் செய்து கொண்டுவிட முடியாது. அவன் ஏதாவது ஒரு கட்டத்தில், தன் குடும்பத்தினரின் உதவியை நாடித்தான் ஆக வேண்டும். தன் குடும்பத்தின் உதவியைப் பெறுகிறவன் தன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் உதவியை ஏன் பெறக் கூடாது? அப்படியில்லையானால், ‘உலகமே என் குடும்பம்’ என்ற முதுமொழியின் கருத்துதான் என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT