Last Updated : 04 Apr, 2025 09:22 AM

47  

Published : 04 Apr 2025 09:22 AM
Last Updated : 04 Apr 2025 09:22 AM

சாதி ஒழிந்த இடமாக மெட்ரோ இருந்துவிட்டுப் போகட்டுமே…!

சென்னை மெட்ரோ ரயில் சேவை சென்னையின் போக்குவரத்து தேவையை சமாளிக்க அளப்பரிய பங்காற்றி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 92 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருப்பதை வைத்தே, அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இரண்டாம் கட்டத்தில் மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – கலங்கரைவிளக்கம் என மூன்று வழித்தடங்கள் நிறைவடைந்தபின் இதனை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கியிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இது ரூ.5870 கோடி மதிப்புள்ள 12 ஆண்டுக்கான ஒப்பந்தம். இதில் மாதவரம், பூந்தமல்லி, செம்மஞ்சேரி மெட்ரோ ரயில் பணிமனைகளை உலகத் தரத்தில் பராமரிப்பதற்கான பணிகளும் அடங்கும். பாராட்ட வேண்டிய இந்த ஒப்பந்தத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்திருப்பதும், ரத்து செய்ய வேண்டும் என்று எக்ஸ் சமூக வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பணியாளர் தேர்வில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பொறுப்பிற்குச் சென்றால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும், தமிழர்களுக்கு வேலை கிடைக்காது என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் Special purpose vehicle(SPV) என்ற அடிப்படையில், 2007-ம் ஆண்டு மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்த கூட்டு நிறுவனமாக தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது தனி தொழில் நிறுவனமாக இயங்குவதால் தமிழக அரசு பின்பற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு அங்கு பின்பற்றப்படுவதில்லை, சாதி வேறுபாடின்றி பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. இடஒதுக்கீடு இல்லை என்றாலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் போக்குவரத்தை உலகத் தரத்தில் நிர்வகித்து வருகிறது. உலகம் முழுக்க இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில்கூட ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை இவ்வளவு சிறப்பாக இருப்பதை இங்கு வந்தபிறகே தெரிந்து கொண்டேன்.

இதை ஏன் யூடியூபர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக உலக நாடுகளுக்கு பரப்பவில்லை என்று கேட்டிருந்தார். மெட்ரோ ரயில் சிறப்பாக செயல்படுவதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை. டெல்லி மெட்ரோ ரயிலும் சிறப்பான சேவையை வழங்கி வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையை நிர்வகிக்கும் பொறுப்பை டெல்லி மெட்ரோ ரயிலிடம் வழங்கும் முடிவில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

சாதி ஒழிப்பு குறித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ். அப்படியிருக்க… சாதிக்கு ஆதரவாக அவர் கொடுக்கும் குரலினால், தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x