Published : 18 Mar 2025 12:54 PM
Last Updated : 18 Mar 2025 12:54 PM

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

இந்திய நேரப்படி மார்ச் 16 காலை 11 மணிக்கு நான்கு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்-10 ‘மீட்பு’ விண்கலம் அல்ல. இந்த விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பமாட்டார். கடந்த 2024 செப்டம்பர் 29 அன்று விண்வெளி நிலையத்தை அடைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன்-9 மூலம்தான் சுனிதாவும் மேலும் மூவரும் பூமிக்குத் திரும்புவார்கள். இது மீட்புப் பணி அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

சென்றதும் வென்றதும்: பல்வேறு தொழில்நுட்பப் பழுதுகள் காரண மாக 1981 முதல் 2011 வரை நாசா விண்வெளி வீரர்களை ஏந்திச் சென்ற விண்வெளி ஓடத்தை (ஸ்பேஸ் ஷட்டில்) ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் 2011 முதல் 2020 வரை ரஷ்யாவின் ‘சோயூஸ்’ விண்கலத்தை நம்பித்தான் நாசா செயல்பட்டது. ரஷ்யாவை நம்பிச் செயல்படாமல் சொந்தக்காலில் நிற்க ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ‘க்ரூ டிராகன்’, போயிங் மூலம் ‘ஸ்டார்லைனர்’ என மனிதர்களை ஏந்திச் செல்லும் இரண்டு விண்கலங்களை உருவாக்க நாசா முயற்சி மேற்கொண்டது.

போயிங் புதிதாக உருவாகிய ஸ்டார்லைனர் விண்கலத்தைச் சோதனையோட்டம் செய்து பரிசோதிக்க, சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் 2024 ஜூன் 5 ஆம் தேதி வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். ஆனால், அந்த விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலிய வாயுக் கசிவு பழுது காரணமாகத் திட்டமிட்டபடி எட்டு நாளில் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. ஆளில்லாமல் அந்த விண்கலம் மட்டும் பூமி திரும்பியது.

மூன்று படுக்கையறை கொண்ட பெரிய வில்லா வீடு அளவு பரப்பளவு கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த நவம்பர் 2000 முதல் இதுவரை ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் மூன்று பேர் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். முதலில் சென்ற பணிக்குழுவின் பணிக்காலம் முடியும் தறுவாயில் மாற்றுப் பணிக்குழு பூமியிலிருந்து செல்லும். இரண்டு குழுக்களும் ஒருசேர சில நாள்கள் தங்கி நிலைய மேலாண்மையைப் புதிய பணிக்குழு பெற்ற பின்னர் முந்தைய பணிக்குழு பூமிக்குத் திரும்பும்.

ஜூன் 2024இல் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தை அடைந்தபோது அங்கே 7 பேர் அடங்கிய 71ஆவது பணிக்குழு பணியில் இருந்தது. அந்தக் குழுவின் பணிக் காலம் முடிந்து செப்டம்பர் மாதம் பூமிக்குத் திரும்பியது. அடுத்து தொடர வேண்டிய 72ஆவது பணிக்குழுவில் இணைந்து அடுத்த ஆறுமாத காலம் பணியாற்ற ஒப்புதல் தெரிவித்த நிலையில் மாற்றுக்குழுவில் இரண்டு இருக்கைகள் காலியாக விட்டு ஏழு நபர் களுக்குப் பதிலாக ஐந்து பேர் மட்டுமே பூமியி லிருந்து அனுப்பப்பட்டனர். அந்த ஐவருடன் சுனிதா, வில்மோர் இணைந்து ஏழு பேர் கொண்ட 72ஆவது பணிக்குழு உருவானது. இதன் தலைமை கமாண்டர் பொறுப்பை சுனிதா வகித்தார்.

72ஆவது பணிக்குழுவின் காலம் முடியும் தறுவாயில் 73ஆவது பணிக்குழுவை ஏந்தி இரண்டு விண்கலங்கள் செல்லும். முதலில் க்ரூ டிராகன் -10 மூலம் நால்வர் சென்றுள்ளனர். இதற்கு ஈடாக ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் இருந்த பேரி வில்மோர், நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய நால்வரும் மார்ச் 19 இந்திய நேரப்படி அதிகாலை 3:30க்குப் பூமி திரும்புவார்கள். ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய விண்கலம் சோயூஸ் 27 மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் சென்று 73ஆவது பணிக் குழுவில் இணைந்து கொள்வார்கள். அதைத் தொடர்ந்து 72ஆவது பணிக்குழுவில் மீதமுள்ள மூவரும் பூமிக்குத் திரும்புவார்கள்.

இரண்டு கலங்கள்: அமெரிக்காவின் விண்கலத்தில் நால்வரும் (மூன்று நாசா தெரிவு செய்யும் வீரர்கள், ஒரு ரஷ்ய வீரர்), ரஷ்யாவின் சோயூஸ் விண்கலத்தில் மூவர் (இரண்டு ரஷ்ய வீரர்கள், ஒரு நாசா வீரர்) என மொத்தம் ஏழு பேர் கொண்ட குழுச் சுழற்சி முறையில் விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொள்வார்கள். சுமார் ஆறு மாதங்கள் தங்கிப் பணிகளை முடித்துத் திரும்புவார்கள்.

இடையிடையே மாதத்துக்கு ஒருமுறை உணவு, நீர், மாற்று உடைகள், ஆய்வுக் கருவிகள், எரிபொருள், ஆக்ஸிஜன் போன்ற சரக்குகளை ஏந்திய ஆளில்லா விண்கலம் விண்வெளி நிலையத்தைச் சென்று சேரும். இதில் விண்வெளி வீரர்களின் குடும்பத்தினர் சிறப்பு உணவுப் பொருள்கள், கடிதம் போன்றவற்றை அனுப்ப முடியும்.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

தொடர்புடைய கட்டுரைகள்:

> யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி பயணம் முதல் ஆராய்ச்சிகள் வரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x